Monday, August 01, 2005

போராளிக் கலைஞன் சிட்டு

போர்க்குயிலின் மறைவு.

(இணைப்புக்கள் திருத்தப்பட்டுள்ளதன.)
தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.

இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.

விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய
சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்’
என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.

ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.
-----------------------------------------------------------
சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று:

கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன்.

புளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது.

சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்.
அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்
இந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்?அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார்.

நாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை,
வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ
எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன.

அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது. அவரின் எட்டாம் ஆண்ட நினைவுதினம் இன்று.

சிட்டண்ணை பாடிய சில பாடல்கள்:

உயிர்ப்பூ திரைப்படத்துக்காக அவர் பாடிய பாடல்.
சின்னச் சின்னக் கண்ணில்.



சிட்டுவின் முதற்பாடல்.
கண்ணீரில் காவியங்கள்



திருமலைத் துறைமுகத்தில் எதிரியின் கடற்கலங்களை மூழ்கடித்த கரும்புலிகள் நினைவாக பாடிய பாடல்.
விழியில் சொரியும் அருவிகள்



கடற்கரும்புலிகள் நினைவான இன்னொரு பாடல்
பகைவிளையாடிடும்



கொழும்புத் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி எதிரியின் கடற்கலங்களை மூழ்கடித்த பத்துக் கரும்புலிகள் நினைவாக பாடிய பாடல்
விடியும் நேரம்



சிட்டு அண்ணை நினைவாக மற்றவர்கள் பாடிய பாடல்
சிட்டு சிட்டு


Labels: , , ,


Comments:
அருமையான பதிவு. பாடல்களுக்கும் நன்றி.
உங்கள் அனுபவமும் நல்லாயிருக்கு.

சியாம்.
 
எழுதிக்கொள்வது: cannon

நன்றி! நன்றி!! நன்றி!!!

சிட்டுவின் பாடல்கள் கேட்டு மெய்மறந்தேன். தயவுசெய்து இயலுமாயின் "மழை மேகம் முகிலாகி.... வெற்றி பல தந்து விட்டு நீர் உறங்குகின்றீர்" பூநகரி நாயகர்களுக்காக சிட்டுக்குரலோனின்.... பாடலையும் இணைத்து விடுங்கள். இந்த அற்புதக் குரலை தொடர்ச்சியாக கேட்க தயவு செய்து வழிமுறை செய்யுங்கள்.

21.50 1.8.2005
 
எழுதிக்கொள்வது: cannon

எழுதிக்கொள்வது: cannon

நன்றி! நன்றி!! நன்றி!!!

சிட்டுவின் பாடல்கள் கேட்டு மெய்மறந்தேன். தயவுசெய்து இயலுமாயின் "மழை மேகம் முகிலாகி.... வெற்றி பல தந்து விட்டு நீர் உறங்குகின்றீர்" பூநகரி நாயகர்களுக்காக சிட்டுக்குரலோனின்.... பாடலையும் இணைத்து விடுங்கள். இந்த அற்புதக் குரலை தொடர்ச்சியாக கேட்க தயவு செய்து வழிமுறை செய்யுங்கள்.

21.50 1.8.2005

21.50 1.8.2005
 
கருத்துக்கு நன்றி.
முயற்ச்சிக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டவை அருமையான பாடல்கள். மேலும் நெய்தல் இசைநாடாவில் வரும் பாடல்களைத் (வெள்ளி நிலா விளக்கேற்றும்) தேடிக்கொண்டிருக்கிறேன்.
 
எழுதிக்கொள்வது: Tharmendira

நான் சிட்டுவின் பரம ரசிகன் அருமையான ஒரு பாடகன் ஆனால் அவரின் பிரிவு மிகவும் துயரம் எனக்கு.

17.26 29.10.2006
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]