Thursday, June 22, 2006

மறுபடியும் உணர்வுக்கொலை.

யாழ்ப்பாணத்திலிருக்கும் மாவீர்ர் துயிலுமில்லம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.
போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் -உடல்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் நினைவுக்கற்கள் நாட்டிவைக்கும் இடத்தொகுதிதான் 'மாவீரர் துயிலுமில்லம்'. ஈழத்தில் பல துயிலுமில்லங்கள் உள்ளன. அவற்றிற் சில இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் உள்ளன.

முன்பு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய பின் கோப்பாயில் அமைந்திருந்த "மாவீரர் துயிலும் இல்லத்தை" முற்றாகத் தகர்த்தெறிந்து அடையாளமே தெரியாதபடி தரைமட்டமாக்கியிருந்தது அரசபடை. கோப்பாய் மட்டுமன்றி கொடிகாமம் உட்பட வேறும் சில இடங்களும் இவ்வாறு சேதமாக்கப்பட்டிருந்தன.

2002 இல் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து இத்துயிலுமில்லங்கள் மீளவும் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கில் மாவீரரின் கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இப்போது மீளவும் அரசபடை இந்நினைவாலயங்களில் கைவைக்கத் தொடங்கிவிட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துள் சென்று அங்குள்ள அலுவலகத்தைத் தாக்கிச் சேதமாக்கியுள்ளனர். படங்களை உடைத்துக் கொளுத்தியுள்ளனர். இதைவிட நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தையும் சேதமாக்கியுள்ளனர்.
அரசபடையின் காட்டுமிராண்டி மனநிலை தெளிவாக வெளித்தெரிகிறது.

மாவீரர் துயிலுமில்லங்களைத் தாக்குவதும் சேதமாக்குவதும் சிங்களவருக்கும் உலகத்துக்கும் எப்படித் தெரிகிறதோ தெரியாது. ஆனால் ஈழத்தவருக்கு அது உணர்ச்சிமயமானது. மனிதக் கொலைகளுக்கு நிகராக -ஏன் அதைவிடவும் பாரதூரமானதாகப் பார்க்கப்படும். புலிகளையும் மக்களையும் சீண்டக்கூடிய அதிகபட்ச செயன்முறை இதுதான். இதன்மூலம் புலிகளைச் சீண்டி யுத்தத்தைத் தொடக்க எண்ணுகிறார்கள் போலுள்ளது.










படங்கள்: சங்கதி.

Labels: , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]