Tuesday, September 26, 2006

கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்

இன்று ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

இன்று கிளிநொச்சி தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.

தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தலமாக இந்நகரம் இருந்துவந்தது.

1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.

முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி.
யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.
சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.

இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.

இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.

1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.
1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் ஒன்பதாவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன. 26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.

3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).

அச்சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.

புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்கா களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.


_____________________________________________

Labels: , , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: Logan

பதிவுக்கு நன்றி.

16.44 27.9.2006
 
வருகைக்கு நன்றி லோகன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]