Thursday, November 23, 2006

மாங்குளம் முகாம் தகர்ப்பு - நினைவுமீட்டல்

இன்றோடு (23.11.2006) மாங்குளம் இராணுவ முகாம் தகர்த்து கைப்பற்றப்பட்டதன் பதினாறாமாண்டு நிறைவுநாள்.
21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது.

இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது.
அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை விரிந்த கூட்டுப்படைத்தளத்தைக் கொண்டிருந்தனர். கிளிநொச்சியிலும் இராணுவ முகாம் அமைத்திருந்தனர். பின்னர் அம்முகாமைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர்.

வவுனியாவிலிருந்து தெற்குப்பக்கமாக தொடர்ச்சியாக சிங்களப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் - இன்று ஏ-9 என அழைக்கப்படும் - யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் இரு இடங்களில் சிங்கள இராணுவம் முகாம் அமைத்துத் தங்கியிருந்தது. கொக்காவில், மாங்கும் எனுமிடங்களில் இருந்த முகாம்களே அவைகள்.
வவுனியாவுக்கும் பரந்தனுக்குமிடையில் இருந்த இவ்விரு முகாம்களும் வன்னியைத் துருத்திக்கொண்டே இருந்தன.

சண்டை மூண்டதும் கொக்காவில் முகாம் தாக்கி வெற்றிகொள்ளப்பட்டது. அதன்பின் இடையில் துருத்திக்கொண்டிருந்த ஒரேமுகாம் மாங்குளம் முகாம்தான். தொடக்கத்தில் சிறிதாக இருந்த முகாம் பின்னர் ஒரு நடவடிக்கைமூலம் பெரிதாக்கிப் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் யாழ்.கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிய புலிகள் அடுத்துக் குறிவைத்தது மாங்குளத்தைத்தான்.

வன்னியில் விசாலமான நிலப்பரப்பொன்றையும் கண்டிவீதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டிய தேவையையும் புலிகள் அன்றே உணர்ந்திருந்தனர். அதன் வெளிப்பாடுதான் தமது முதலாவது பெரிய நடவடிக்கையாக கொக்காவில் முகாமைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. அடுத்து இடையில் துருத்திக்கொண்டிருந்த மாங்குளத்தையும் கைப்பற்றுவதென்று முடிவெடுத்தனர்.

அக்காலத்தில் புலிகள் தமது நினைவுநாட்களுக்காக பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் புலிகள் பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்படியே தாக்குதலும் நடந்தது.
இன்று கேணல் நிலையிலிருக்கும் தளபதி பால்ராச்சின் தலைமையில், இன்னொரு தளபதி தீபனின் துணை வழிநடத்தலுடன் மாங்குளம் முகாம் மீது 21 ஆம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.

அப்போது பிரபலமாகவும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவுமிருந்த புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசீலன் -2000 என்ற எறிகணை செலுத்திகளின் துணையுடன் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. பல பகுதிகள் வெட்டையாக இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு தாக்குதலைச் செய்தன புலியணிகள்.

முடிவில் மாங்குளம் படைமுகாம் வீழும் நிலைக்கு வந்தது. இறுதி முயற்சியாக கரும்புலித்தாக்குதல் நடத்துவதென்பது திட்டம். முகாம் தாக்குதலுக்கான திட்டமிடலின்போது அக்கரும்புலித் தாக்குதலை நடத்துவது யாரென்று தீர்மானிக்கும் நேரத்தில், வன்னிமாவட்டத் துணைத்தளபதியாக இருந்த போர்க் தானே அதை நடத்தவேண்டுமென்று பிடிவாதமாக நின்று அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.

இறுதியில் திட்டமிட்டபடி தளபதி - கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் வெடிமருந்து வாகனம் படைமுகாம் வரை சென்று வெடித்தது. அத்தோடு மாங்குளம் படைமுகாமின் சரித்திரம் முடிவுக்கு வந்தது.


மாங்குளம் படைமுகாம் வன்னிக்காட்டில் தனித்து நின்ற ஒரு படைமுகாம். ஒன்றில் காடுவழியாக முல்லைத்தீவுப் படைத்தளத்துக்கோ அல்லது வவுனியாப் படைத்தளத்துக்கோதான் செல்ல முடியும். மாங்குளம் முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியோர் காடுகளில் புகுந்து திக்குத் தெரியாது ஓடினர். அவர்களைத் தேடுவதில் புலியணிகளோடு வன்னி மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இம்முகாம் தாக்குதலில் 65 வரையான விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
______________________________________-
தொடக்கத்திலேயே வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த, கண்டிவீதியைத் துண்டாடியிருந்த இரு படைமுகாம்களை அவசரஅவசரமாகக் கைப்பற்றியதன்மூலம் பின்னாளில் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்குரிய அத்திவாரத்தை இட்டனர் புலிகள். வன்னியில் எஞ்சியிருந்த ஒரே படைத்தளமான முல்லைத்தீவையும் பின்னர் கைப்பற்றி, அகன்ற வன்னிப்பகுதியைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்தனர். இதன்மூலம் இன்றுவரை போராட்டத் தலைமை வன்னியில் இக்கட்டின்றி செயற்பட, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வந்து தக்க வழிகோலினர் புலிகள்.

அன்று மீட்கப்பட்ட அந்த வீதிக்காக பின் ஆயிரம் சண்டைகள் நடந்தன. இன்றுவரை அந்த வீதிக்காக சண்டை நடந்துகொண்டே இருக்கிறது.

_____________________________

படம்: அருச்சுனா
_____________________________________________

Labels: , , , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]