Thursday, February 01, 2007

கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998

இன்று (01.02.2007) சிறிலங்கா அரசபடைகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிளிநொச்சி நகரம் மீது விடுதலைப்புலிகளால் தாக்குதல் நடத்தி சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதன் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.
1997 மே இல் தொடங்கி ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த காலம்.
"1998 பெப்ரவரி நாலாம் திகதி ஜெயசிக்குறு இராணுவம் கிளிநொச்சியை அடையும்; தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை அமைக்கப்படும்" என்று அப்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை உறுதியளித்து கடும்போரை வன்னியில் நடத்திய நேரம்.
அந்த நேரத்தில் ஜெயசிக்குறு படையினர் தொடர்பை ஏற்படுத்தவேண்டிய இறுதி இலக்கான கிளிநொச்சியைக் கைப்பற்ற முடிவெடுத்தனர் புலிகள். சிறிலங்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்னர்தான் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடத்தப்படவிருந்த கண்டி தலதா மாளிகை குண்டுத் தாக்குதலுக்குள்ளாகி சிங்களத் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

01.02.1998 அன்று அதிகாலை கிளிநொச்சி நகரம் மீதான புலிகளின் தாக்குதல் தொடங்கியது. கிளிநொச்சிக் களத்துக்கு உறுதுணையாக இராணுவத்தினரின் பின்தளங்களில் பெருமெடுப்பில் கரும்புலித் தாக்குதலும் நடத்தப்பட்டது.தொடக்கத்தில் பல பகுதிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டன. ஆனால் அன்று மாலை நிலைமை புலிகளுக்குப் பாதகமாகியது. புலிகளால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டது. தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே, புதிய களமுனைகளைத் திறக்காமல், கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டு தமது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டனர் புலிகள்.

சமநேரத்தில் பின்னணித் தளமான ஆனையிறவு ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். மூன்று வெவ்வேறு இலக்குகள் மீது மூன்று அணிகளாகப் பிரிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களும் எதிர்பாராத விதத்தில் தோல்வியிலேயே முடிந்தன.
இவ்வணிகளில் சென்ற பதினொரு கரும்புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
கரும்புலி லெப்.கேணல் சுபேசன்
கரும்புலி மேஜர் குமுதன்
கரும்புலி மேஜர் ஜெயராணி
கரும்புலி மேஜர் மங்கை
கரும்புலி மேஜர் ஆஷா
கரும்புலி கப்டன் குமரேஸ்
கரும்புலி கப்டன் நளாயினி
கரும்புலி கப்டன் செங்கதிர்
கரும்புலி கப்டன் உமையாள்
கரும்புலி கப்டன் நளா
கரும்புலி கப்டன் இந்து












கிளிநொச்சிக் களத்தில் ஒரு களமுனையில் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மூலம் கரும்புலித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வாகனமும் இலக்கை அடைந்து வெடிக்கவில்லை.
அவ்வாகனத்தைச் செலுத்திச் சென்ற கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.



எதிர்பார்த்தது போல் வெற்றியில்லாவிட்டாலும் முக்கியமான சில பகுதிகள் இந்நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாண்டின் செப்ரெம்பரில் 'ஓயாத அலைகள் -2" நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரை முற்றாக மீட்டெடுத்தனர் புலிகள்.

படங்கள்: அருச்சுனா

Labels: , , , , ,


Comments:
இந்தப் பதிவு தான் என்னால் இறுதியாக எழுதப்பட்ட பதிவு.
ஆனால் 2005 ஏப்ரலில் எழுதிய பதிவொன்று (தீச்சுவாலை நினைவுப் பதிவு) இப்பதிவை முந்திவந்து இறுதிப்பதிவாக தமிழ்மணத் திரட்டியில் திரட்டப்பட்டுள்ளது. எனது வலைப்பதிவிலும் இறுதிப்பதிவாக தீச்சுவாலை நினைவுப் பதிவே வருகிறது.
எல்லாம் புது புளொக்கரின் கைங்கரியம் என்று நினைக்கிறேன்.

இப்பதிவு திரட்டியில் முதன்மைப் பதிவாகத் திரட்டப்படாததால், இப்பின்னூட்டம் இடப்படுகிறது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]