Wednesday, February 14, 2007

ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்குமா?

இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது.
இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன.
இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம்.

ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்தபிறகு ஏதோ நடக்கப்போகிறது என்றும் ஒருகதை.
அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல்கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்தவேண்டியதுதான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்கள் இருக்கின்றன.
ஐந்தாண்டுகள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததைப் பாராட்டி "சர்வதேசம்" விருது வழங்கும்; தமிழீழத்தை அங்கீகரிக்கும்; எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்ற கனவோடு ஏராளம் பேர் உலாவுகிறார்கள்.

ஒன்றில் நடப்பவற்றைக் கொண்டு ஊகிக்க வேண்டும். அல்லது வரலாற்றிலிருந்து பாடம்படிக்க முற்பட வேண்டும்.
இவை எதுவுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளையும் புரட்டுக்களையும், நம்பிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் இருப்பது சரியில்லை.

ஐந்தாண்டுகள் வரை பொறுமை காக்கவேண்டுமென்ற கடப்பாடோ விருப்பமோ புலிகளுக்கில்லை. அப்படி பொறுமை காப்பதில் எந்த அனுகூலமுமில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். மட்டமாக ஒரு காலத்தைக் கடைப்பிடிப்பதில் அவர்களுக்கிருக்கும் ஒரே வசதி, எதிர்காலத்தில் "நாங்கள் ஐந்து வருடங்கள் பொறுமை காத்து ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம்" என்று அடிக்கடி சொல்லிக்கொள்வதுதான். (இவ்வருட மாவீரர் தின உரையில் முக்கிய இடம்பிடிக்கப்போகும் வசனமிது) அந்தவசனம் சொல்லத்தான் காலம் கடத்தினார்கள் என்பதற்கு, அப்படிச் சொல்வதால் என்ன கிடைக்குமென்று யோசிக்க வேண்டும்.
இவ்வளவுகாலம் நீடித்தது, காலத்தின் கட்டாயமேயன்றி ஐந்தாண்டு கணக்கிற்காக அன்று.
2005 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே போராட்டத்தைத் தீவிரப்படுத்த எண்ணியிருந்ததாகவும் 2004 மார்கழி கடற்கோள் அனர்த்தத்தால் அது சாத்தியப்படவில்லையென்றும் 2005 மாவீரர்நாள் உரையிலேயே சொல்லப்பட்டாயிற்று.
அப்படி ஏதாவது நடந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" மூன்றாண்டுக் கணக்குச் சொல்லித்திரிந்திருப்பார்கள்.

2006 இலேயே போர் தீவிரமடையத் தொடங்கிவிட்டது. புலிகள் நினைத்தபடி எதிரணி அரசியலில் எல்லாம் நடந்துகொண்டிருக்க, களத்தில் ஏற்பட்ட ஒரு பிசகால் நிலைமை தமிழர் தரப்புக்குப் பாதகமாக மாறியது. காலம் இழுபட்டது. அதற்குப்பின்னும் ஒருசுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
எல்லாம் சரிவந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" நான்காண்டு கணக்குச் சொல்லியிருப்பார்கள்.

'சர்வதேசம்' எங்கள் பக்கம் திரும்பும், எங்களை அங்கீகரிக்கும் என்று இப்போது நம்பிக்கை கொள்வது வீண்வேலை. அதுவும் களத்தில் பின்னடைவுளைச் சந்தித்துள்ளதாக தோற்றப்பாடுள்ள இன்றைய நிலையில் அறவே சாத்தியமில்லை.
எங்களை அங்கீகரிக்கவும், ஆதரவளிக்கவும் எந்தக்கடப்பாடும் அவர்களுக்கில்லை. கடப்பாடுள்ள விடயத்திலேயே அவர்கள் சரியாக நடக்கவில்லை.

இன்று இலங்கை இனச்சிக்கல் தொடர்பில் நோர்வேக்கு உள்ள கடப்பாடு என்ன? அவர்கள் அதன்படி நடக்கிறார்களா? என்று பார்த்து, அதன்வழி 'சர்வதேச'த்தையும் பொருத்திப் பார்க்கலாம்.
பலவற்றுக்குப் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடுள்ள நோர்வே சத்தம்போடாமல் தானுண்டு, தன் பாடுண்டு என்று இருக்கிறது. யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவின் கதையைக் கேட்கவே வேண்டாம்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து சிறிலங்கா அரசதரப்பால் தொடர்ந்து நடத்தப்பட்ட மீறல்கள் குறி்த்து அவர்களுக்கு எக்கவலையுமில்லை. விலகுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து தன் படைகளைவிலக்கி மக்களை இயல்புக்குத் திருப்புவதைச் செய்யாத அரசுமேல் அவர்கள் எக்குற்றச்சாட்டையும் வைக்கமாட்டார்கள். மக்களைப் பட்டினிபோட்டுக் கொல்வதையும் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பார்கள். (இவை ரணில் காலத்திலேயே நடந்துவிட்டன). அரசு மக்கள்மேல் எறிகணை மழை பொழிந்து கொத்துக் கொத்தாகப் பலிகொண்டபோது, நோர்வே (சர்வதேசமும்) சொன்ன தீர்வு, மக்களை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடிப்போகச் சொன்னதுதான். கொல்லப்பட்டடவர்கள் மக்கள் தான் என்பதையும் அவர்களது எண்ணிக்கையையும் சொல்வதைத்தாண்டி இந்தப் படுகொலைகள் தொடர்பில் நோர்வே (சர்வதேசமும்) செய்தது வேறொன்றுமில்லை.
ஒவ்வொருமுறை படுகொலை நடக்கும்போதும் சம்பந்தமேயில்லாமல் புலிகளையும் அதற்குள் இழுத்து ஓர் அறிக்கை விடுவதன்மூலம் பயங்கரவாத அரசுக்கு மேலும்மேலும் ஊக்கமளித்ததுதான் இந்த நோர்வே உட்பட்ட சர்வதேசம் செய்தது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையான நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகப் பார்த்தால், அதிலும் இவர்கள் செய்தது படுகயமைத்தனம்தான்.
மூதூர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தால் சில மணித்துளிகளில் நோர்வே அறிக்கை விடுகிறது, "உடனடியாக பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டும்" என்று. அதற்குமுன்பே அரசபடைகள் மாவிலாறு மீது படையெடுத்திருந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதன்பின் அரசபடைகள் சம்பூர் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று சம்பூரைக் கைப்பற்றிக் கொண்டபோது நோர்வேயிடமிருந்து அறிக்கை வரவில்லை. படையினர் பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டுமென்று, சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் எந்த அறிவித்தலும் வரவில்லை.
வாகரையும் அப்படியே; கஞ்சிக்குடிச்சாறு்ம அப்படியே.

சமாதான முயற்சிகள் நடப்பதாக, பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் காட்டிக்கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த கரிசனையுமில்லை.
அப்பட்டமான நில ஆக்கிரமிப்புகள் நடந்து, பல்லாயிரம் மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உணவுகள்கூட மறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபடி திறந்திருக்கவேண்டிய A-9 பாதை மூடபட்டிருந்த நேரத்திலும் - எதுவுமே நடக்காதது போல் அடுத்த சுற்றுப்பேச்சுக்கு ஒழுங்கு பண்ணுவதில் மட்டும் குறியாயிருந்த - அப்படி இருதரப்பையும் மேசையில் கொண்டுவந்து இருத்திவிட்டால் எல்லாம் முடிந்தது என்று சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்ட நோர்வே (உட்பட்ட சர்வதேசம்) பற்றி நாமின்னும் அறியவில்லையா?

தான் பதில் சொல்லவேண்டிய கடப்பாடுள்ள விடங்களுக்கே எந்தவித சலனமுற்று, சாந்தமாக இருக்கிறது நோர்வே.
இந்நிலையில் எந்தச் சம்பந்தமுமில்லாத, எந்தக் கடப்பாடுமில்லாத 'சர்வதேசம்' என்று நாம் சொல்லும் சக்தி என்ன கிழிக்கப்போகிறது?
இன்று தமிழர்மேல் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கெதிராக எந்தவொரு ஆக்கபூர்வமான செயலையும் செய்யாத சர்வதேசம் எமது உரிமைப்போராட்டத்தை "இப்போது" அங்கீகரிக்குமென்பது - அதுவும் ஐந்துவருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததென்ற ஒரே காரணத்துக்காக அங்கீகரிக்குமென்பது சுத்த மடத்தனமல்லவா?

ஐந்து வருடங்கள் ஒருதரப்பு ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தால் அவர்களின் நிலம் அவர்களுக்கே என்று பட்டா எழுதும் சட்டமேதும் சர்வதேசம் என்ற சக்தி இயற்றி வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் கோட்பாட்டுக்குட்பட்டதைக் கூட அவர்கள் செய்யவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் பாடமாகப் படிக்க வேண்டாமா?
சுயநிர்ணயம் தொடர்பில் தனியாகப் பிரிந்து செல்லும் அதிகாரம், இடைக்கால நிர்வாகம், பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு என்று 'சர்வதேசம்' ஏற்படுத்திவைத்த - பல இடங்களில் செயற்படுத்திய நடைமுறையைக் கூட ஈழத்தவர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே? ஏன்?
இவர்களுக்குப்பிடித்தால் நாட்டைப் பிரிப்பார்கள்; இல்லையென்றால் ஒட்டுவார்கள்.
சர்வதேச மனிதாபிமானத்துக்கு பல எடுத்துக்காட்டு்க்கள் இருக்கின்றன.
மிக அண்மையில் நடந்த லெபனான் பிரச்சினையிலிருந்து கூடவா நாங்கள் பாடம் படிக்கவில்லை? ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு வருவதைவிட பலநூறு மடங்கு உத்வேகத்துடன் லெபனானில் நடப்பவை உலகுக்கு வெளிவந்தன. அந்தப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. அப்படியிருந்தும் அம்மக்களை யார் காப்பாற்றினார்?


முடிவாக - ஐந்து வருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம் என்ற காரணத்துக்காக சர்வதேசம் எங்களை அங்கீகரிக்கும்; ஆதரவு தரும்; சர்வதேசத்தில் எமக்கு ஆதரவான சூழல் ஏற்படும் என்பது சுத்த முட்டாள்தனமான பிதற்றல்.
ஆதரவு, அங்கீகாரம் போன்ற பம்மாத்துத் தோற்றமொன்று வருவதானாற்கூட அதைத்தீர்மானிக்கும் காரணி வேறுதான்; ஐந்தாண்டு நிறைவன்று.
______________________________
இங்கே சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளையோ நிகழ்வுகளையோ கூட்டத் தொடர்களையோ நான் தவறென்று சொன்னதாக யாரும் கருதத்தேவையில்லை. அவை கட்டாயம் தேவைதான். அரசதலைவர்களை விடவும் வேற்றின மக்களிடத்தில் எமது நியாயங்களைச் சொல்வது முக்கியம். தொடர்ச்சியான கவன ஈர்ப்பைச் செய்துகொண்டிருப்பது முக்கியம். புலத்திலிருக்கும் எல்லோரும் ஒரேயணியில் திரள்வதற்கும், இளையோரிடத்தில் ஒன்றிப்பும் பங்கேற்றலும் அதிகரித்தலுக்கும்கூட இவை முக்கியம்.

ஒரு நோக்கத்துடனான செய்பாடு வேறு; அது நிறைவேறும் முன்பே அதீத நம்பிக்கை கொண்டு பகற்கனவு காண்பது வேறு.
இந்தியா எமது பக்கமென்று புழுகித்திரியும் வேளையிலேயே அது நசுக்கிடாமல் தனது வழமையான பணியைச் செய்துகொண்டிருக்கிறது.
அதற்காக, 'இந்தியா இனிச்சரிவராது' என்று பேசாமல் இருந்துவிட முடியாது. அரசியல் சந்திப்புக்கள், முயற்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டேயிருக்கட்டும். ஆனால் அதன் தற்போதைய நிலைப்பாட்டை, செயற்பாட்டை சரியாகப் புரிந்துகொண்டு, கனவுகள் காணாமல் இருப்பதும் முக்கியம்.
_____________________________
ஐந்தாண்டு நிறைவின்பின் பெரியதொரு தாக்குதல் புலிகளால் நடத்தப்படுமென்ற கதை பரவலாக உள்ளது.
அது சரிதான். ஆனால் இந்த ஐந்தாண்டு நிறைவுக்காகத்தான் தாக்குதலை ஒத்திப்போட்டுள்ளார்கள்; நிறைவுநாள் வந்ததும் பாயப்போகிறார்கள் என்ற தோற்றத்தை பலர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
இப்போதுள்ள தோற்றப்படி ஐந்தாண்டு நிறைவுக்கு அடுத்தநாள் புலிகள் கட்டாயம் தாக்குதல் தொடங்கப்போகிறார்கள் என்ற நினைப்புடன்தான் பலர் திரிகிறார்கள். அன்றிரவு நித்திரை கொள்ளாமல் செய்திக்காகக் காத்திருக்கப் போகிறவர்கள் எத்தனைபேரோ தெரியாது. அது நடக்காத பட்சத்தில் மக்கள் சலிப்பூட்டப்படுவதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் இக்கதையைக் கட்டிவிட்டவர்கள்தாம் காரணமாக இருப்பார்கள்.

இனி, இராணுவ ரீதியில் பலமானதொரு தாக்குதல்தான் அடுத்த நடவடிக்கை என்ற முடிவுக்கு தமிழர்தரப்பு வந்தாயிற்று. அதை நிகழ்த்த ஐந்தாண்டு நிறைவென்பது ஒரு காரணமேயன்று. ஆட்பலத்திரட்டல் உட்பட பலவேலைத்திட்டங்களின் பின்தான் அது நிகழ்த்தப்படும். ஏற்கனவே நடந்த சில தவறுகள், இழப்புக்களைச் சீர்செய்ய வேண்டும். கடந்த வருடத்தில் இடங்களேதும் கைப்பற்றாமல், மாறாக இழக்கப்பட்டு, எண்ணூற்றுச் சொச்சம் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
தவறுகள் களையப்பட்டு, எல்லாம் சீர் செய்யப்பட்டு, மிகுந்த ஆயத்தத்தோடும் எச்சரிக்கையோடும்தான் தாக்குதல் முயற்சியில் இறங்குவார்கள்.
சும்மா வெளியிலிருந்து கொண்டு 'ஏன் இன்னும் அடிக்கேல?', 'அஞ்சு வருசம் முடிஞ்சு தானே?' என்ற புலம்பல்களுக்காக அங்கே தாக்குதல் செய்ய முடியாது.
களத்திலிருக்கும் மக்களும் களத்தை நடத்துபவர்களும் (மட்டும்)தான் அதைப்பற்றித் தீர்மானிக்க முடியும்.
அவர்கள் எப்போது செய்வார்களோ அப்போது செய்துகொள்ளட்டும்.

புலத்திலிருப்பவர்கள் அதைப்பற்றி யோசிக்காமல், செய்ய வேண்டிய பொருளாதார, அரசியல் வேலைத்திட்டங்களை தவறாமல் செய்தால் சரி.
____________________________
நடத்தப்படப் போகும் தாக்குதல் தற்செயலாக ஐந்தாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்டால், காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக மேற்கண்ட கதையைச் சொல்லித்திரிந்தவர்கள் காட்டில் மழைதான்.

Labels: , , ,


Comments:
காலத்துக்கேற்ற பொருத்தமான கட்டுரை.

Kannan.
 
நல்லதொரு அலசல்.உணர்ச்சியுடன் இல்லாமல் சிந்தித்து தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை.சில இழப்புக்கள்,
தவறுகள் மிக விரைவாக சீர்செய்யப்படவேண்டும்.

நோர்வேயின் நிலைப்பாட்டினை அப்பட்டமாக துகிலுரிந்திருக்கிரீர்கள் வன்னியன். புலிகளின் கை மேலோங்கும் போது சமாதான கோசம்
போடுவதும் இரானுவத்தின் கை ஓங்கும்
ப்போது(அப்படி தோற்றப்பாடு ஏற்படும் போது)மெளனிப்பதுமான நோர்வேயின் நடவடிக்கையினை பலரும்
அவதானித்தே வந்திருக்கிறார்கள்.

நீஙகள் சொன்னது போல தீர்மானிப்பது
களத்தில் உள்ள மக்களும் அவர்களுமே.
அதுவரை நாம் செய்யவேண்டியது

//புலத்திலிருப்பவர்கள் அதைப்பற்றி யோசிக்காமல், செய்ய வேண்டிய பொருளாதார, அரசியல் வேலைத்திட்டங்களை தவறாமல் செய்தால் சரி//.
 
கண்ணன், கரிகாலன்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
எழுதிக்கொள்வது: பிரின்சு என்னாரெசு பெரியார்

மிகச் சரியான கட்டுரை. இன்றைய ஈழ அரசியல் சூழலில் தலைவரின் முடிவுகள் மற்றும் திட்டங்கள் எப்படியிருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துதான் எல்லாமும்! ஈழ மக்களோ, ஆதரவாளர்களோ செய்ய வேண்டியதெல்லாம் அதற்கு அவரவரால் இயன்றதைத் தான்! உணர்ச்சி வேகத்தில் இப்படி கிளப்பப்படும் வதந்திகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஈழப் போராட்டத்தை ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தின் பரபரப்பான சண்டைக்காட்சி போன்றதொரு தோற்றத்தைத் தான் ஏற்படுத்தும்.

20.56 16.2.2007
 
பிரின்சு என்னாரெசு பெரியார்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பொதுவாக தமிழகத்தார் இந்தப்பக்கம் வந்து எட்டிப்பார்ப்பதில்லை.
நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
 
வன்னி,
அருமையான பதிவு. இப் பதிவை நீங்கள் பதிவிட்ட அன்றே படித்தாலும் பணிச்சுமைகள் காரணமாக உடன் பின்னூட்டமிட முடியவில்லை. 'மாற்று' தளத்திலும் இக் கட்டுரையை இணைத்துள்ளேன்.
நான் கூட இதுபற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என இருந்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள். மிக்க நன்றி.
காலத்திற்கு ஏற்ற பதிவு.

"தடி எடுத்தவன் எல்லாம் சண்டியன்", "பேனா எடுத்தவன் எல்லாம் எழுத்தாளன்" என்பது போல் இப்போ அரசியல் அறிவோ தெளிவோ இல்லாத எம்மவரில் சிலர் தங்களை அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இப்படியான செய்திகளை எம் மக்கள் மத்தியில் பரப்பி வருவதை நானும் அவதானித்து இருக்கிறேன்.

இந்த 5 வருடப் புரளி JVP யினரால் இலங்கை நாடாளுமன்றத்தில் பல மாதங்களுக்கு முன் எழுப்பப்பட்டது. இந்த 5 வருட விடயம் பற்றிய சர்வதேசச் சட்டங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் எம்மவரில் சிலர் JVP சொன்னதைப் பலவிதமாகத் திரித்துக் கதையளந்து வருகிறார்கள்.

சம்பூர், வாகரை போன்ற பகுதிகளைச் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் மீண்டும் ஆக்கிரமித்த போதும் புலிகள் பலமிழந்து விட்டனர் என்று கதை விட்டுத் திரிந்த பல "ஆய்வாளர்களையும்" நான் அவதானித்து இருக்கிறேன். இவர்கள் தாங்களே ஒரு மாயயை தங்கள் மனதில் உருவாக்கி அதை மக்கள் மத்தியிலும் பரப்பி வருகிறார்கள்.

எம்மவரில் சிலர், ஏதோ புலிகள் தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு சிங்கள முகாமையும் தகர்ந்தெறிந்து ஒவ்வொரு அங்குலமாக எம் மண்ணை மீட்பார்கள் எனும் மாயயையில் இருக்கின்றனர். அதனால்தான் சம்பூர், வாகரை போன்ற பகுதிகள் மீண்டும் சிங்களவர் வசம் சென்றதும் மனம் தளர்கின்றனர்.

உலகில் எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் எதிரியின் அனைத்து படை முகாம்களையும் அழித்து அங்குலம் அங்குலமாக மண்ணை மீட்டதாக வரலாறு இல்லை.

தெனாபிரிக்காவில் இருந்த வெள்ளையர்களின் படை முகாம்கள் அனைத்தையும் அழித்து கறுப்பின மக்கள் விடுதலை அடையவில்லை.

வியற்நாமில் அமெரிக்கர்களின் முழுப் படைகளயும் அழித்து வியற்னாம் வெல்லவில்லை.

ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் முழுப் படை முகாம்களையும் அழித்து அவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து புறமுதுகோட்டிட வைக்கவில்லை.

ஆக, ஒரு பிரதேசத்தைப் பிடிப்பதால் நாம் பலமடைந்து விட்டோம் என்றோ அல்லது இழப்பதால் பலம் குண்றி விட்டோம் என்பதோ அல்ல எமது போராட்டம்.

எமது போராட்டம் எம் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பது. என்னைப் பொறுத்த வரையில் தலைவர் பிரபாகரன் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளார். சும்மா உணர்ச்சி வசப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல், நிதானமாக எமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்.

அடுத்தது, நாம் இன்னுமொரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். இப்போது நடக்கும் ஈழப் போர் சிங்கள தேசத்துக்கு மட்டும் எதிரான போரல்ல. சர்வதேசம் என்று சொல்லிக் கொள்ளும் சில நாடுகளுக்கெதிராக அல்லது அவர்கள் வலையில் விழாமல், அவர்களைப் பகைக்காமல் எமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கான இராஜதந்திரப் போரிலும் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விடக் கூடாது.

இன்னுமொரு முக்கிய விடயம். நான் இதை மிகைப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை. பல விடுதலைப் போராட்ட வரலாறுகளைப் படித்ததனால் சொல்கிறேன். எமது போராட்டம் சந்தித்த/சந்திக்கும் பாரிய சவால்களை எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் எதிர்கொள்ளவில்லை. சவால்கள் என்று இங்கே நான் குறிப்பிடுவது, உலக அரசியல் சூழல்.

அமெரிக்காவிற்கு எதிராக வியற்னாம் போரிட்ட காலகட்டம் பனிப்போர் காலகட்டம். அதாவது அமெரிக்காவிற்கு எதிராக வியற்னாம் போரிட்ட போது சோவியத், சீனா போன்ற நாடுகள் பின்பலமாக இருந்தன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சோவியத்திற்கு எதிராகப் போரிட்ட போது, தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பின்புலமாக இருந்தன.

தெனாபிரிக்காவிலும் இதே நிலையே.

ஆனால் இன்று அச் சூழல் இல்லை. எதிர் முகாமில் இருந்தவர்கள் பலர் தாராள மயமாக்கல் எனும் திட்டத்தால் ஒரே முகாமில் இருக்கின்றனர். பனிப்போர் காலம் இல்லை இப்போது. ஆக இச் சூழலில் நாம் எப்படி எமது போராட்டத்தை முன்னெடுப்பது என்பது மிகவும் சவாலான விடயம். இச் சவால்களை நாம் மிகவும் நிதானமாகவும், இராஜதந்திரம் முலமும் கையாள வேண்டும். இந்த இராஜ தந்திர நகர்வுகளின் ஒரு நகர்வு தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தோற்கடிக்கப்பட்டது.

நாம் போட்ட திட்டம் சரியாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அதே நேரம் எமக்கும் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. எமது பின்னடைவுகளில் இருந்து பாடங்களைப் படித்து, அவற்றை நிவர்த்தி செய்து, எமது போராட்டத்தை முன்னெடுப்பதே இன்று எமக்குள்ள முக்கிய சவால். நாம் எமது சாவாலில் வெல்லுவோமா? நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்தால் வெல்லலாம். காலத்தை அறிந்து நாம் எமக்குள்ள கடமைகளை உணர்ந்து எம்மால் ஆன உதவிகளைச் செய்வதன் மூலமே எமது போராட்டத்தை வெல்லலாம்.
மற்றும் படி பிரபாகரன் அவர்கள் சும்மா மந்திரவித்தைகளால் எம் மண்ணை விடுவிக்க முடியாது. நாம் அனைவரும் அவருக்குப் பின்னால் நின்று எம் கடமையச் சரிவரச் செய்ய வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் எம் முன்னால் இருக்கும் தலையாய கடமை.
 
வெற்றி நீர் அறம்புறமா அரசியலை ஆயுறனீர்.. உமக்குத் தெரியாதது ஒண்டுமில்லை. ஆனாப் பாரும் நீர் இந்தப் பதிவில ஒரு பின்னூட்டத்தில 5 வருடக் கதை ஒரு புரளி எண்டு சொல்லியிருக்கிறீர். அதெண்டால் உண்மைதான்.. ஆனா ஒரு ஏழு மாசத்துக்கு முதல் இதே பூராயத்தில நீர் எழுதின ஒரு பின்னூட்டத்தை இப்ப பாப்பமே..?

//கடந்த சில மாதங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பன் புலிகளின் பொறுமை பற்றி ஒரு கருத்தைக் கூறியிருந்தான். அப்போது நான் அதை நம்பாமல் உதாசீனம் செய்தேன். என் நண்பன் சொன்னது என்னவெனில், தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தமிழர்தரப்பும் சிங்கள தரப்பும் குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும், அந் நிலப்பரப்புக்களுக்கு எல்லையும் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு அமுலில் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கமைய அப்பகுதிகள் அவர்களின் நிரந்தர பகுதிகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இக் கருத்தை நேற்று முன் தினம் ஜே.வி.பி யும் முன் வைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் இந்த யுத்த நிறுத்தம் 5 வருடத்தை எட்டக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி அரசுக்கு ஆலோசனை கூறி மகிந்தரும் யுத்தத்தைத் தமிழர் தரப்பு மீது திணிக்கின்றார். அவர்களைப் பொறுத்த வரையில் எப்படியாயினும் புலிகளைச் சண்டைக்கு இழுத்து யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். சிங்கள தரப்பின் இந்த நோக்கத்தை அறியாதது அல்ல தமிழர் தலைமை. அதனால் தான் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி, தாம் இன்னும் யுத்தநிறுத்ததைக் கடைப்பிடிப்பதாக தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.//

//என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.//

உந்தத் திடீர் பல்டியடிப்புக்கு என்ன காரணம் எண்டதை ஒருக்கா சொல்ல முடியுமோ..? என்ன மாதிரி 22 திகதி அங்கீகாரத்தைக் கோருவமோ..?
 
வெற்றி,
வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி.

கொழுவி,
சும்மா இரும்.
யாரோடயும் கொழுவிக்கொண்டிருக்கிறதுதான் உமக்கு வேலையாப்போச்சு.
 
//கடந்த சில மாதங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பன் புலிகளின் பொறுமை பற்றி ஒரு கருத்தைக் கூறியிருந்தான். அப்போது நான் அதை நம்பாமல் உதாசீனம் செய்தேன். என் நண்பன் சொன்னது என்னவெனில், தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தமிழர்தரப்பும் சிங்கள தரப்பும் குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும், அந் நிலப்பரப்புக்களுக்கு எல்லையும் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு அமுலில் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கமைய அப்பகுதிகள் அவர்களின் நிரந்தர பகுதிகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இக் கருத்தை நேற்று முன் தினம் ஜே.வி.பி யும் முன் வைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் இந்த யுத்த நிறுத்தம் 5 வருடத்தை எட்டக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி அரசுக்கு ஆலோசனை கூறி மகிந்தரும் யுத்தத்தைத் தமிழர் தரப்பு மீது திணிக்கின்றார். அவர்களைப் பொறுத்த வரையில் எப்படியாயினும் புலிகளைச் சண்டைக்கு இழுத்து யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். சிங்கள தரப்பின் இந்த நோக்கத்தை அறியாதது அல்ல தமிழர் தலைமை. அதனால் தான் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி, தாம் இன்னும் யுத்தநிறுத்ததைக் கடைப்பிடிப்பதாக தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.//

//என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.//

உண்மையைச்சொல்லபோனால் 22 பற்றி பல கட்டுரைகளும் விவாதங்களும் உருவாக காரணமாய் இருந்த பின்னூட்டம் இது என்பது எனது கருத்து, பல நாட்கள் முன் படித்தபின்னூட்டம் தேடிக்கொண்டிருந்தேன் கிடைக்க வைத்தற்க்கு நன்றி கொழுவி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]