Monday, December 04, 2006

ஜெயசிக்குறு நிறைவுநாள்

இன்றையநாளில்தான் (டிசெம்பர் நாலாம்நாள்) ஜெயசிக்குறு என்ற பெயரிடப்பட்ட மிகநீண்டகால இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்டது.

19.05.1997 அன்று சிங்களத்தில் 'ஜெயசிக்குறு' (தமிழில் வெற்றிநிச்சயம்) என்று பெயரிடப்பட்டு மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழியாகப் பாதை கைப்பற்றல் என்பதே அதன் இலக்கு. இன்று சர்சைக்குள்ளான ஏ-9 நெடுஞ்சாலைதான் அந்தப்பாதை. தொடக்கத்தில் மூன்றுமாத காலத்துள் முடித்துவிடலாம் என்று கணக்கிட்டுத் தொடங்கப்பட்ட நடவடிக்கை இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்பட்டு இறுதியில் கைவிடப்படுவதாக 04.12.1998 அன்று அறிவிக்கப்பட்டது.
அந்த இரண்டரை ஆண்டுகளில் கடுமையான மோதல்கள் பலவிடங்களில் நடந்தன. ஏ-9 நெடுஞ்சாலையைத்தான் கைப்பற்றுவது என்ற நோக்கிலிருந்து சாத்தியப்பட்ட எவ்வழியாயினும் சரிதான் என்ற நிலைக்கு அரசு வந்து பலமுனைகளில் பாதைதிறக்க முயற்சித்து முடியாமற்போனது.
இக்காலத்தில் சில ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர், மேலும் சில படையினர் காயமடைந்தனர். ஏராளமானோர் இராணுவத்தைவிட்டுத் தப்பியோடினர்.
இக்காலகட்டத்தில்தான் புலிகளின் போரிடும் ஆற்றல் அபரிதமான வளர்ச்சியடைந்தது.
தொடக்கத்தில் மெதுமெதுவாகப் பின்வாங்கிவந்து ஒருகட்டத்தில் நிலையான பாதுகாப்பரணை அமைத்து மாதக்கணக்கில் முறியடிப்புச்சமரை நடத்தினர்.
வன்னியை இனிமேலும் விட்டுக்கொடுப்பதில்லையென்ற ஓர்மத்தோடு போராடினர்.
இடைப்பட்ட கால்ததில் கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர்.

இந்நிலையில் டிசெம்பர் நாலாம்நாள் 'ஜெயசிக்குறு' நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. தொடர்ந்து 'றிவிபல' என்ற பெயரில் ஒட்டுசுட்டான் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. ஒருதுப்பாக்கி வேட்டுக்கூட தீர்க்கப்படாமல் ஒட்டுசுட்டான் மண் படையினரால் கைப்பற்றப்பட்டது.

இரண்டரை ஆண்டுகள் நடத்தப்பட்டுக் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளையும், மேலதிகமாக பல பகுதிகளையும் புலிகள் ஐந்தேநாளில் படையினரிடமிருந்து மீட்டெடுத்தனர் என்பது வரலாறு.

இந்நிகழ்வுகள் பற்றிய விவரமான பதிவுகள்:

ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்
வென்ற சமரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு


_________________________________________________
டிசெம்பர் ஐந்தாம்நாள்.
யாழ்ப்பாணத்தில் ரத்வத்த சிங்கக் கொடியேற்றி தமிழர்மீதான தமது வெற்றியைப் பறைசாற்றியநாள்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென்று 'றிவிரச' என்றபேரில் பாரிய படையெடுப்பைச் செய்த படையினர், மாவீர்நாளுக்குள் யாழ்நகரைக் கைப்பற்றி பிரபாகரனின் பிறந்தநாளன்று அல்லது மாவீரர்நாளன்று கோட்டையில் கொடியேற்றுவது என்று திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அத்திட்டம் கைகூடாமல் டிசெம்பர் ஐந்தாம்நாள் யாழ்.கோட்டையில் சிங்கக்கொடியை ஏற்றி வெற்றிமுழக்கமிட்டனர்.
அவ்வகையில் இதுவொரு கரிநாள்.

_____________________________________________

Labels: , , , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]