Tuesday, June 28, 2005

கௌசல்யன் மருத்துவமனையின் பணி

ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பும்லெப்.கேணல் கௌசல்யன் மருத்துவமனையின் பணி.

(ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்று இங்கே படியெடுத்துப் போடப்படுகிறது.)

போர்க்களங்களில் விழுப்புண்ணடைந்த தமது தோழர்களுக்கு மருத்துவப் பணிகளையாற்றி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப்போராளி மருத்துவர்களின் பணி போர்நிறுத்த காலத்திலும் ஓய்வடைந்து விடவில்லை. இவர்களின் பணி பல நவீன வசதிகளை உள்வாங்கியவாறு தமது தேச உறவுகளின் துயரைத் தீர்ப்பதற்கான தீவிர செயற்பாட்டினை மேற்கொள்ளத் தூண்டுதல் அளித்துள்ளது. மக்களுக்காக களத்தில் நின்று எதிரியிடமிருந்து உயிர்காத்த வீரர்கள் இன்று மக்களின் உயிரைக் காவு கொள்ளவரும் நோய்களிலிருந்து காக்கும் பணியை சுமந்தவாறு மக்களைத் தேடிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் ஓர் அங்கமாக தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான லெப் . கேணல் கௌ சல்யன் ஞாபகார்த்த நடமாடும் மருத்துவ சேவையானது, தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப் போராளி மருத்துவர்களினால் பின் தங்கிய கிராமங்கள் தோறும் சென்று மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. பெருந்தொகையான போராளி மருத்துவர்களை உள்ளடக்கிய இக்குழுக்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் மருத்துவத் தேவையைக் கண்டறிந்து பூர்த்தி செய்து வருகின்றன. இவ்வாறு தமது சேவையினை கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியா வடக்கு பாலமோட்டை கிராம மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போராளி மருத்துவக்குழுவின் மருத்துவரான தூயவனைச் சந்தித்து அவர்கள் செய்தபணிகளையும், அக்கிராமத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளும் முகமாக கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.


கடந்த இரண்டு நாட்களாக லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட இந்நடமாடும் மருத்துவ சேவையானது இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்களின் மருத்துவதேவையினை நிவர்த்தி செய்வதே இதன் பிரதான நோக்கம். இந்தப் போராட்டத்திற்கு பக்கபலமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்டு வரும் இப்பிரதேச மக்கள் எதிரியின் எல்லைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவர்கள் மருத்துவ ரீதியான வசதிகள் அற்று இதனைக் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்டகாலமாக மருத்துவ ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தார்கள். எனவே இதனை நிவர்த்தி செய்வதற்காகவும் இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய தடையாக இருந்த இம்மருத்துவ பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காகவும் இதனைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்குமாக தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்த மருத்துவ சேவையின் மூலம் இங்கு சேவையினை வழங்கி வருகின்றோம். இதில் குறிப்பிடக் கூடியதென்ன வென்றால் நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெறவிரும்புபவர்கள் வைத் தியசாலைகளையும், வைத்திய நிபுணர்களையும் தேடிச் செல்வது தான் வழக்கம். இங்கு மக்களை நாடி நோயாளிகளைத் தேடி வைத்தியர்களும் நவீன உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூடங்கள், சத்திர சிகிச்சைக்கூடங்கள், பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், அதாவது குழந்தை வைத்திய நிபுணர்கள், சத்திரசிகிச்சைக்கான வைத்திய நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், பெண்நோயியல் மருத்துவ நிபுணர்கள், தோல், கண், மூக்கு, தொண்டை போன்ற வைத்திய நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், போராளிமருத்துவர்கள் என பெருந்தொகையான வைத்திய நிபுணர்கள் வந்திருக்கின்றார்கள். இது எமது தேசத்தின் வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் மக்கள் சுகதேகிகளாக இருக்கின்ற பொழுது தேசத்தின் வளர்ச்சிக்கு அது படிக்கல்லாக அமையும்.

எங்கள் இந்த சேவையினை ஆரம்பித்து செய்கின்ற பொழுது பல்வேறுபட்ட பிரச்சினைகளை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. தனிய மருத்துவம் சம்பந்தமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளார்கள். இதற்கு யுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது யுத்தம் தவிர்க்க முடியாததொன்றாக இருந்த காரணத் தினால் இவர்கள் பொருளாதார ரீதியாக, மருத்துவரீதியாக மட்டுமன்றி பல பக்கங்களாலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம் அரசியல் ஸ்திரமின்மை என்பதே வெளிப்படையானது. அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதென்றால் அதற்காக மக்கள் நலமானவர்களாகவும், சுகதேகிகளாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருக்கின்றதனால் மருத்துவரீதியாக நாங்கள் எமது பணியை ஆற்றுகின்றோம். எனவே எம்மை பின்பற்றி ஏனைய சேவைகளும் இம்மக்களைத் தேடி வந்து உதவிபுரியும் என நம்புகின்றோம். அத்தோடு இந்த சேவையினை தொடர்ந்து நாங்கள் இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம்.

இந்தப்பகுதியை பொறுத்த வரையில் இதற்கு முன்னதான மருத்துவ வசதிகள் எவ்வாறிருந்ததென்பதைக் கூறமுடியுமா?

ஆம்- நாங்கள் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்த போது அவர்கள் கூறிய சில சம்பவங்களை இங்கு நான் கூற விரும்புகிறேன். ஒருநாள் காலை மூன்று மணிபோல் ஒரு எட்டுவயதுச் சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையை நோக்கி சரியான பயணத்தினை மேற்கொள்ள முடியாமலிருந்த காரணத்தினால், அதாவது அன்று மழை பெய்து கொண்டிருந்தது. வாகனப் போக்கு வரத்து இங்கில்லை. மோட்டார் சைக்கிளிலே ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வீதியால் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் வழி விடவில்லை. இதன் காரணமாக அச்சிறுவன் இறந்துவிட்டான். இரண்டு மணித்தியால பயணத்தூரத்தில் இருக்கின்ற வைத்தியசாலையை சென்றடைய முடியாத காரணத்தினால் சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படக் கூடிய அச்சிறுவன் இறந்திருக்கிறான் இதுபோன்று ஏராளமான பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. உதாரணமாக மார்புப்புற்று நோயுடைய ஒரு பெண்மணி அதற்கான சிகிச்சை பெறுவதற்கான இடத்திற்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதை விட உயர்குருதியமுக்கம், நீரிழிவு போன்ற நோயாளிகளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ்வாறான நோய்கள் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தை கூட்டக் கூடியதாக விருக்கும். அவ்வாறு தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இருந்திருக்கின்றன.

இந்நடமாடும் மருத்துவ சேவையினை செய்வதற்காக நீங்கள் உரிய பகுதிகளை எவ்வாறு தெரிவு செய்கின்றீர்கள்? இவ்வாறு துயருறும் ஏனைய பகுதிகளுக்கும் இச்சேவைகள் சென்றடைய வாய்ப்புள்ளதா?

பொதுவாக மருத்துவ வசதிகள் குறைவான இடங்கள், போக்குவரத்து பிரச்சினையாகவுள்ள இடங்கள் விரைவாக வைத்தியசாலைகளை வந்தடைய முடியாத இடங்கள் போன்ற பகுதிகளுக்கு நாம் முன்னதாகவே துறைசார்ந்தவர்களை அனுப்பி இந்தப்பிரச்சினைகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருத்துவ தேவை பற்றி ஆலோசித்த பின்பே நாம் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம்.

நடமாடும் சேவையாக பணிபுரியும் இந்த மருத்துவ சேவை இது போன்ற பின்தங்கிய கிராமங்களில் நிரந்தரமான செயற்பாட்டினைக் கொண்டதாக அமைப்பதற்கான ஒழுங்குகள் ஏதும் உண்டா?

ஆம்- நாங்கள் இவ்வாறான பிரதேசங்களை அலசி ஆராய்கின்ற பொழுது அதாவது பிரதான மருத்துவ நிலையங்களிலிருந்து வெகு தொலைவிலிருக்கின்ற போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் திலீபன் மருத்துவமனையினை அமைக்கின்றோம். அங்கு உடனடி உயிர்காப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் மேலதிக சிகிச்சைக்காக அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் என்றார்.


[வான்மதி]
இதேபோன்று இதேபணியில் ஈடுபட்ட போராளி மருத்துவர் வான்மதி இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகள் குறித்து எம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

இந்த கௌசல்யன் நடமாடும் சேவையானது, மக்களை ஓர் இடத்திற்கு அழைத்து அங்கு வைத்து வைத்தியம் பார்ப்பதோடு நின்று விடாமல் இந்தப்பிரதேசத்திலே இருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் பன்னிரண்டு குழுக்களாக நாங்கள் பிரிந்து மக்களின் வீடுகளில் வைத்தே அவர்களை பரிசோதித்து வந்தோம். இதைத்தவிர ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று பற்சிகிச்சைளையும் ஏனைய சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம். இதை விட நாம் வீடுகளுக்குச் சென்று நோயாளிகள் என இனங்கண்டவர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். இதனூடாக அவர்களை அழைத்துவந்து இங்கு சத்திரசிகிச்சை, பற்சிகிச்சை கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம்.

இவ்வாறான நவீன வசதி களைக் கொண்டதான இந்த நடமாடும் மருத்துவ சேவையினை மருத்துவப்பிரிவினர் ஆரம்பிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த காரணி என்னவென்று கூறமுடியுமா?

எமது பிரதேசமானது போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதனால் தற்போது மீள்குடியமர்விற்குட்பட்டு வருகின்ற நேரத்தில் அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளான வைத்திய வசதி, பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதோடு மருத்துவ வசதி கூட போதிய அளவு கிடைக்கவில்லை. மிக நீண்ட தூரப் பயணத்தின் பின்பு தான் அவர்கள் மருத்துவத்தை பெறக்கூடியதாக இருப்பதனாலே உயிர் ஆபத்து ஏற் படுகின்ற கட்டங்களில் மட்டும் தான் அவர்கள் வைத்தியசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றதே தவிர, சிறிய நோய்களையோ அல்லது பாரதூரமாக வருகின்ற நீண்டகால நோய்களை குணப்படுத்தவோ இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வது மிகக் குறைவாகவே இருக்கிறது.இதைவிட இலங்கையின் மருத்துவ ஒழுங்கு விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற் கொருமுறை மருத்துவர்கள் பாட சாலைகளை தரிசிப்புச் செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்குள்ள நோய்களை இனங்காணுதல், சிகிச்சை யளித்தல், பற்சிகிச்சையளித்தல் என் பன நடைமுறையில் இருக்க வேண் டிய விடயங்கள். ஆனால் எமது பிரதேசங்கள் பின்தங்கிக் காணப்படுவதாலும் போரினால் பாதிக்கப்பட்டதனாலும் அரசாங்கமே இவர்களை பின்னடைவுக்குள்ளாக்கியதனாலும் இந்நடைமுறை பாடசாலைகளில் இல்லாதுள்ளன. எனவே கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையினூடாக நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்று இச்சேவையை செய்து வருவதோடு பின்தங்கிய பகுதியாதலால் பற்தூரிகை மூலம் பல்துலக்கும் முறையினையும் கற்பித்து பற்பசை, பற்தூரிகை போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.

இப்பகுதி மக்களினுடைய எதிர்கால மருத்துவத்தேவைகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இப்பகுதி மக்களுக்கான மருத்துவத் தேவை என்பது இரண்டு அல்லது ஐந்து வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இத்தேவையினைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவை எமக்கு நிச்சயமாக உண்டு. ஏனெனில் முற்றாக போக்குவரத்து வசதியற்ற நிலை காணப்படுவதும் வைத்தியசாலைகள் மிகத்தொலைவிலிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு இப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகள் என்று எதுவுமே இயங்கவில்லை. தியாகதீபம் திலீபன் மருத்துவமனை மட்டுமே இயங்கு கிறது. ஆகவே இப்பிரதேசத்தின் மிக அவசிய தேவை கருதி ஓரளவேனும் வசதியுடைய மருத்துவமனையையாவது அமைக்க வேண்டும் என்றார். இதேவேளை தாம் எதிர்பாராத வகையில் தமது மருத்துவத்தேவைகள் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டதை எண்ணிப் பெருமிதமடைந்த நிலையில் பாலமோட்டை, பனிச்சங்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் இம்மருத்துவர்களின் சேவை பற்றி இவ்வாறு கூறினார்.

நாங்கள் இப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து இப்போது மீளக் குடியமர்ந்து வருகின்றோம். ஆனால் எமது பகுதிக்கு இதுவரை போக்குவரத்து வசதிகளோ, மருத்துவ வசதிகளோ, ஏனையவசதிகளையோ செய்து தர எவரும் முன்வரவில்லை. நாங்கள் மிகநீண்ட தூரம் பயணம் செய்தபின்பே மருத்துவமனைகளுக்குச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மிக அவசரமான ஆபத்தான வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்கின்ற நோயாளிகள் செல்லும் வழியிலேயே இறந்து போகின்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. வவுனியா அல்லது மல்லாவி வைத்தியசாலைகளுக்குச் சென்றாலும் மருந்து பெற முடியாத நிலைகளும் ஏற்படுவதுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மருத்துவப்பிரிவினர் இப்பகுதிக்கு வந்து எமது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்து வருவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்தோடு ஒவ்வொரு வீடுகளுக்கும் மருத்துவ போராளிகள் வந்து எமது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றார்கள். அத்தோடு நாம் மிக நீண்ட தூரம் சென்றாலும் செய்யமுடியாத சத்திரசிகிச்சைகளைக் கூட இங்கு இலகுவாக செய் துள்ளோம் எனவே தொடர்ந்தும் எமது பகுதிகளுக்கு இவ்வாறான சேவையைச் செய்ய வேண்டுமென அவர்களை நான் கேட்டுக்கொள்ளதோடு இவர்களின் இந்த சேவைக்கு நன்றி யையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

எனவே லெப்.கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் இம் மருத்துவப்பணியானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியில் பெரும் பயனாற்றி வருகின்றதென்பது மட்டுமன்றி இதன் பணி மூலம் எதிர்காலத்தில் தமிழீழ மக்களின் மருத்துவக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

நன்றி:- ஈழநாதம்.

Labels: , , , ,


Comments:
This comment has been removed by a blog administrator.
 
நல்ல பதிவு. மருத்துவ சேவை என்பது மரபு வழி போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அப்போராட்டத்தை தாங்கி நிற்கும் மக்களுக்கும். நன்றி!
 
கருத்துக்கு நன்றி தங்கமணி.
யாழ்பாணம் புலிகளின் பிடியில் இருந்தவரை, மருத்துவ சேவை முழுவதும் சிங்கள் அரசாங்கத்திடமே தங்கியிருந்தது. காயமடைந்த போராளிகள்கூட அரச மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றனர். அரச வைத்தியர்களே கடமையாற்றினர். அனால் யாழ்ப்பாணம் எதிரியிடம் வீழ்ச்சியடைந்த பின்தான் தமிழர் தரப்பின் சுய மருத்துவத்;துறை வளச்சியடைந்தது. பின் வன்னியில் பொதுமக்களுக்கான மருத்துவம் கூட போராளிகளாலேயே நிவர்த்தி செய்யப்பட்டது, சில சந்தர்ப்பங்களில் மகப்பேற்று மருத்துவர்கள்கூட போராளிகளே.
இன்று அரச மருத்துவத்துறை சாராத பெரும் அமைப்பாக விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவு வளர்ந்துள்ளது.
-வன்னியன்-
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]