Sunday, December 25, 2005

ஈழத்தில் நடப்பவை....

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். இக்கொலைக்குக் காரணமானவர்கள், சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் அவர்களின் கைக்குகூலிகளாக இயங்கிவருபவர்களுமேயெனப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிலர் இது கருணா குழுவின் வேலையென்று சொல்கின்றனர்.

இதுதொடர்பாகக் கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளனர் புலிகள். மேலும் அவருக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" விருது இன்று மாலை வழங்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்ட மூன்றாவது மாமனிதர் விருதுக்குரியவர் ஜோசப் பரராசசிங்கம். ஏற்கெனவே இக்காலப்பகுதியில் பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான தராகி எனப்படும் சிவராம் மற்றும் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோர் கொல்லப்பட்டவர்களாவர்.
-----------------------------------------

மன்னாரில் அண்மையில் நடைபெற்ற கடற்படை மீதான தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினரால் பேசாலைப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். நால்வர் காணாமற்போயிருந்தனர். அவ்வாறு காணாமற்போன நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் இன்று அப்பகுதி மக்களாற் கண்டுபிடிக்கப்பட்டனர்.
4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி), கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மற்றும் மாணவி அந்தோனிக்கா ஆகியோரே வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரே இக்கொலைகளுக்குக் காரணமென மக்கள் கருதுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுற்றிவளைப்பிற் கைதுசெய்யப்பட்டவர்கள் பலத்த அடிகாயங்களோடு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பேசாலை - தலைமன்னார்ப் போக்குவரத்தை கடற்படையினர் முற்றாகத் தடைசெய்துள்ளது.
------------------------------------

யாழ்ப்பாணத்தில் கோட்டைப்பகுதியில் நேற்று நடந்த மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஐவரை தாம் சுட்டுக் கொன்றிருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டிருந்தது. அத்தோடு ஐவரின் சடலங்களையும் இராணுவம் யாழ். மருத்துவமனையில் ஒப்படைந்திருந்தது.

ஆனால் இன்றுகாலை அச்சடலங்களில் ஒன்று தன் மகனுடையதென்று அவரின் தாயார் அடையாளம் காட்டியுள்ளார். தனது மகன் யாழ். மத்திய கல்லூரியின் இரவுக் காவலாளியாக வேலை பார்ப்பவரென்றும், மாலை இரவுணவை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்ற மகன் திரும்பி வரவில்லையென்றும் தெரிவித்துள்ளார். அவரது சடலம் யாழ் மத்திய கல்லூரிச் சுற்றாடலில் இருந்தே யாழ்.வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏனைய நால்வரும்கூட அப்பாவிகளாக இருக்கலாமென்ற ஐயம் நிலவுகிறது.

இதேவேளை யாழ்த் தாக்குதல்களுக்கு உரிமைகோரும் 'பொங்கியெழும் மக்கள் படை' இன்று எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த ஐவரும் அப்பாவிகளென்றும், அவர்களுக்கும் தாக்குலுக்கும் சம்பந்த்மில்லையென்றும் தெரிவித்துள்ளதோடு, அப்பாவிகளைக் கொன்று அவர்கள்மேல் பழிபோடும் இராணுவத்தின் இச்செயலுக்குப் பதிலடியாக 50 இராணுவத்தினரை தாம் கொல்லப்போவதாக அவ்வெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகவச்சேரியிலும் நேற்று இளம்பெண்ணொருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியிருந்தார்.
-----------------------------------

புரிந்துணர்வு ஒப்பந்தக் கண்காணிப்புக்குழு யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே இருக்கும் மோசமான நிலையில் இது மேலும் வன்முறைகளைத் தூண்டிவிடுமென்ற அச்சம் நிலவுகிறது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அலுவலகத்துள் அத்துமீறி நுழைய முற்பட்டார்கள் என்றும், வன்முறையைத் தூண்டிவிட்டார்களென்றும் கூறியுள்ள அவர்கள், அப்படிச் செய்பவர்கள் சிலரேயென்றும் அவர்களைக் கண்டறிந்து இராணுவம் கைதுசெய்ய வேண்டுமென்றும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்கள்.
-------------------------------------------


இதேவேளை, யாழ். இராணுவ வன்முறைகளுக்கு எதிர்ப்பு- நாளை முதல் அரச பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். அது தொடர்பான விரிவான செய்தி:

யாழில் சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்கள் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய தொழிற்சங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசியல்வாதிகளின் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையானது, தமிழின அழிப்பை பல்வேறு வழிமுறைகளிலும், சமாதானம் என்ற வெற்று முழக்கத்தை எழுப்பிக்கொண்டு பேரினவாத ஒடுக்குதலின் உச்சக்கட்டமாகிய தமிழின அழிப்பிற்கான போருக்கு மிகநுட்பமாக திட்டமிட்டு தயாராகிவிட்டது.
இதன் முதற்கட்டமாக கொடுமையான வன்முறைகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.


தாமே உறுதிப்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுலாக்காமல் விடுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வஞ்சகமான தந்திரமாகும். அத்துடன் பேரினவாத்திற்கு ஏற்ற வகையில் இராணுவ நோக்கில் தமக்கு சாதகமாக உடன்படிக்கையை வளைத்து விடவும் திட்டமிடப்படுகின்றது. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடிநாதமாக விளங்குவது மக்களது இயல்பு வாழ்க்கையே.

இதனை எவ்வகையிலும் சிதைத்து தமிழ்மக்கள் மீது வன்முறைகளையும், அச்சுறுத்தலையும் பிரயோகிப்பது தமிழ்மக்கள் மீதான போரின் முதற்கட்டமாகும்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின், நிழலாகத் தொடர்ந்த தமிழின விரோதக் செயற்பாடுகள், தமிழர் தாயகமெங்கும் இராணுவ வன்முறை வெளிப்பாடாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
கீழே தரப்படும் சம்பவங்கள் பேரினவாதத்தின் கொடுரத்தை தெளிவாக்குகின்றன.

  • அண்மையில் புத்தூர் கிழக்கில் குடும்பப் பெண் மீதான படையினரின் பாலியல் வல்லுறவுக்கான முயற்சியும் அதனைத் கண்டித்த அப்பாவி மக்கள் மீதான தாக்குதலும்,
  • நீர்வேலியில் விவசாயிகள் இருவர் கொல்லப்பட்டமை,
  • தேசப்பற்றும் சமூகப்பற்றும் கொண்ட வீடியோ கடை உரிமையாளர் உட்டபட கல்லூரி அதிபர்கள் இருவர் கொல்லப்பட்டமை,
  • மிருசுவிலில் சிறுமி மீதான பாலியல் முயற்சி,
  • புங்குடுதீவில் தர்சினி என்னும் இளம்பெண் கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, குதறப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை,
  • இப்பெண்ணின் உறவினருடன் பெற்றோருக்கு ஆதரவு கூற செல்ல முயன்ற பல்கலைக் கழக மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்,
  • பல்கலைக்கழகச் சூழலில் படையினர் குவிக்கப்பட்டு பொது மக்களும் மாணவர்களும் தாக்கப்படுதலை கண்டித்து போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவிவிடம் முறைப்பாடு செய்ய அமைதியான முறையில் ஊர்வலத்தில் சென்ற யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மீதான காட்டுமிராட்டித்தனமான தாக்குதலையும், துப்பாக்கிச்சூட்டினையும் படையினர் மேற்கொண்டமை.
  • ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் (இதே நாளன்று இனவெறி கொண்ட சிங்களத் தேசப்பற்றாளர் இயக்கம் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்ய வேண்டும் என்று கூறி கொழும்பில் நடாத்திய ஊர்வலத்திற்கு படையினர் ஒத்துழைப்பையும் பாதுகாப்பினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது).
  • இதற்கு அடுத்த நாள் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு நடாத்தியமை.
  • முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சாரதிகள் மீது யாழ் நகரத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதல், அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டமை.
  • தமது விளையாட்டு மைதானத்தினூடாக படையினர் பாதுகாப்பு அரணை அமைத்த போது ஹாட்லிக் கல்லுரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தபோது மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள்.
  • நல்லூர் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றலின் பின்னர் வீடு திரும்பிய மாணவர்கள் மீது தாக்குதல்.
  • தனியார் காணிகளின் ஊடாக வேலி பிரித்து சென்று வீடுகளில் உட்புகுந்து மோசமான முறையில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் அடித்து துன்புறுத்துவதோடு அவர்களை உடற்சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்துவது.
  • பரவலாக யாழ். குடாநாடெங்கும் மக்ளது சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறாக வழிமறிப்புக்கள், வீதித் தடைகள், உடற்சோதனை, தன்னிச்சையான கைதுகள், கண்மூடித்தமான தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையடித்தல்.
  • பணிபுரிந்து வீடு திரும்பும் ஆண் அரச ஊழியர்கள் உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்படுதல்.
  • படையினரின் இத்தாக்குதல் செயற்பாடுகளின் போது குண்டர்கள் போன்று கொட்டன்கள், சைக்கிள் செயின், கத்திகள் ஆகியவற்றுடன் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு காடைத்தனம் புரிகின்றமை.
  • இராணுவ புலனாய்வுத் துறையினராலும், தேசத்துரோகக் குழுக்களாலும் திட்டமிடபட்ட வகையில் இராணுவ உயர் மட்டத்தினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படுகின்ற தேசப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள்.

இவற்றில் இருந்து எமக்கு தெளிவுபடுவது என்னவெனில், தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற தந்திரோபாயத்தை சிறிலங்கா அரசின் சார்பில் படைத்தரப்பு கையாள்கிறது என்பதாகும்.

சிறிலங்கா அரசாங்கமும், அதன் ஏவலர்களுமாகிய இராணுவக் குண்டர்களின் இச்சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
மக்களது இயல்பு குறித்தோ அல்லது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தோ முடங்கிவிட்ட சமாதான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது குறித்தோ சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிஞ்சித்தேனும் அக்கறையில்லை என்பதை அனைத்துலகத்தினது கவனத்திற்கும் கொண்டுவரவேண்டிய தேவை தமிழ்மக்களாகிய எமக்கு உள்ளது.


தமிழ்மக்கள் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும், சுதந்திரமாகவும், தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா பேரினவாதம் தடையாக உள்ளது என்பதை பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களாகிய நாமே வெளிக்கொணர வேண்டும் என்ற பொறுப்பு எமக்கு உள்ளது.
சிங்கள அரசினதும் அதன் படைகளினதும் இத்தகைய அராஜக செயற்பாடுகள் யாவும் இன்று இங்கு போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வியை மக்களாகிய எம்மிடத்தில் தோற்றுவித்துவித்துள்ளது.
ஒரு சமூகத்தின் அதிஉயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழத்தின் துணைவேந்தருக்கு இங்கு கௌரவமும், பாதுகாப்பும் இல்லையெனில் சாதாரண மக்களின் கௌரத்திற்கும், பாதுகாப்பும் என்ன உத்தரவாதம் என்ற நியாயமான கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.


சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கும், அண்டிப்பிழைக்கும் தேசத்துரோகக் குழுக்கள் எமது மண்ணில் இருந்து முற்றாக அகற்றப்படல் வேண்டும்.
அத்துடன் பொதுமக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கு குந்தகமாக உள்ளதால் மக்களால் வெறுக்கப்படுகின்ற இராணுவக் காவலரண்கள் நீக்கப்பட வேண்டும்.
சிங்களப் படைகளின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயல்பு வாழ்க்கையையும், மனித கௌரவத்தையும் வென்றெடுக்க வேண்டும்.எமது பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்களாகிய நாம் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக மேற்கொள்ள உள்ளோம்.
வரும் திங்கட்கிழமை 26.12.2005 முதல் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக செய்வது என்ற என்ற தீர்மானத்தை யாழ். மாவட்டத்தில் இயங்குகின்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாகிய நாம் எடுத்துள்ளோம்.
இப்புறக்கணிப்பிற்கான ஒத்துழைப்பை அரச பணியாளர்கள் மற்றும் அனைவரும் வழங்குமாறு வேண்டுகின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------------------------------

மேற்குறிப்பிட்டவைகள் செய்திகளாக மட்டுமே தரப்பட்டுள்ளன.

Labels: ,


Friday, December 23, 2005

எதை வைத்துப் பேச்சுவார்த்தை? -இரண்டாம் பாகம்

முதற்பாகம்
முதற்பதிவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் புலிகளுக்குச் சார்பானதாகவும் அரசதரப்புக்குப் பாதகமானதாகவும் இருப்பதாகச் சொல்லியிருந்தேன். அப்படியானால் ஏன் அரசதரப்பு இதற்கு ஒத்துக்கொண்டது என்ற வினாவோடு முடித்ததிருந்தேன். அதன் தொடர்ச்சி இதோ.

முதலாவது தமிழர் தரப்பின் பலம்.
இதை ஏற்றுக்கொள்ளப் பலருக்குப் பிடிக்காமலிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தாபார் யாழ்ப்பாணம் இன்னும் சில நாட்களில் புலிகளின் கையில் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நேரம்; சிங்கள இராணுவத்தால் இனி தப்பியோடுவதைவிட வேறு வழியில்லையென்றுகூட பலராற் சிந்திக்கப்பட்ட நேரம்; இந்தியா இராணுவத்தினரை பத்திராக அப்புறப்படுத்த வேண்டுமென அதிகாரபூர்வமாக கோரிக்கைவிடப்பட்டு, இந்தியாவும் ஓரளவு சாதகமாக முடிபு தெரிவித்திருந்த நேரம். பின்னர் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ, புலிகள் தங்கள் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர். இராணுவம் மீண்டும் குறிப்பிட்ட பிரதேசங்களைக் கைப்பற்ற, புலிகள் பின்வாங்கினதோடு யாழ்க்குடாநாட்டிலுள்ள படையினரின் பாதுகாப்பு தற்காலிகமாக உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அரசபடையின் போர்வலு உயர்ந்ததாகவும் புலிகள் விழுந்ததாகவும் யாரும் நினைத்துவிட முடியாதபடி அடுத்துவந்த காலங்கள் அமைந்தன.

புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பை அரசதரப்பு நிராகரித்தாலும் புலிகள் அதை நான்கு மாதங்களுக்கு விடாமற் கடைப்பிடித்தனர்.(இந்த, புலிகளின் யுத்த நிறுத்த காலப்பகுதியில் அரசபடைகள் முன்னேறி சில இடங்களைப் பிடித்தன.) அதன் முடிவில் சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த படைப்பலத்துடன் இதுவரையில்லாதவொரு படைநடவடிக்கையை "அக்னி கீல - தீச்சவாலை" என்ற பெயரில் 20,000 இராணுவத்தினரை நேரடியாக் களத்திலிறக்கி இராணுவம் செய்தது. 4 நாட்கள் நடந்த தொடர்ச்சியான சண்டையின் முடிவில் இராணுவம் தன் மாபெரும் ஆட்பல ஆயுதபல இழப்புக்களோடு மனோபலத்தையும் முற்றாக இழந்திருந்தது. ஓர் அங்குலத்தைத் தானும் கைப்பற்ற முடியவில்லை. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் முன்னதாகவே கொழும்பிலிருந்து பத்திரிகையாளர்களை பலாலிக்கு வரவழைத்து வெற்றிச் செய்தியை அளிக்கவும் கைப்பற்றிய இடங்களைக் காட்டவும் காத்திருந்தனர் தளபதிகள். ஆனால் இராணுவத்தினரின் கொடூரமான இழப்பைத்தான் அவர்களால் பதிவுசெய்ய முடிந்தது. அத்தோடு அத்தோல்வி வழமையை விட அதிகமாகச் சிங்கள மக்களையும் உலகையும் சென்றடைந்தது. இனி புலிகளைப் போரில் வெல்ல முடியாதென்ற அளவுக்கு இராணுவம் வந்துவிட்டது. கிட்டத்தட்ட அடுத்த 8 மாதங்களுக்கு - புரிந்துணர்வு ஒப்பந்தம் வரை, வேறெந்த இராணுவ நடவடிக்கையையும் சிங்களப் படை செய்யவில்லை.

அதன்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுநாயக்க விமானப்படைத்தளத் தகர்ப்பு நடந்தது. கிட்டத்தட்ட ஐம்பது வீதத்துக்குமதிகமான விமானப்படைப் பலம் சிதைக்கப்பட்டதுடன் சிறிலங்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றது. எப்போதுமே இராணுவப்பலச் சிதைவைவிட சிறிலங்காவின் பொருளாதாரச் சிதைவுதான் தமிழர்தரப்புக்கு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இங்கும், ஏற்கெனவே ஒடிந்துபோயிருந்த இராணுவப்பலம், இத்தாக்குதலோடு மேலும் நொடிந்துபோனதுடன், நாட்டின் பொருளாதாரமும் சிதைந்தது. இந்நிலையில் எப்பாடுபட்டாவது ஒரு யுத்தநிறுத்தம் வேண்டுமென்பது சிங்களத்தரப்பின் தேவை. நாட்டின் மீளவைக்க என்ன விலைகொடுத்தும் ஒரு யுத்த நிறுத்தம் தேவைப்பட்டது சிங்களத்தரப்புக்கு. புலிகளுக்கும் இது தேவைப்பட்டதாயினும் அவர்களைவிட யுத்தநிறுத்தத்தின் தேவை சிங்களத்தரப்புக்கே பலமடங்கு அதிகம். புலிகளும் சிங்கள அரசின் நிலையை நன்கு புரிந்திருந்தார்கள். ஆட்சிமாற்றத்துடன் அதுவும் கைகூடி வந்தது.

இரண்டாவதாக நாம் சொல்லக்கூடியது:
புலிகளை யுத்தத்தைவிட்டு வரச் செய்து அரசியல் நீரோட்டத்தில் கலக்க வைத்து, கால இழுத்தடிப்பின் மூலம் போராட்டத்தை மழுங்கச் செய்வது. இது வேறும் பல போராட்டங்களில் நடந்ததுதான். கால இழுத்தடிப்பின்மூலம் போராட்ட உணர்வைக் குன்றச் செய்தல், போராளிகளைக் குறைத்தல் என்பனவுட்பட பல படிப்படியான காரணிகளால் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்தல் என்பது உலகமும் சிங்களத் தலைமையும் (ரணிலும்) எதிர்பார்த்தது. அக்காரணிக்கு முன்னால் புலிகளுக்குக் கிடைப்பதாகக் கருதப்படும் சலுகைகள் பெரிதானதாகத் தெரியாமலிருந்திருக்கலாம். அத்தோடு இராணுவ நிலைகளை மக்கள் வாழ்விடங்களைவிட்டுக் களைவதென்பதை, சும்மா பேருக்கு நடைமுறைப்படுத்தினாற் போதும், முழுவதும் நிறைவேற்றத் தேவையில்லையென முன்பே திட்டமிட்டு (அத்திட்டம்தான் இன்றுவரை நடந்துவருகிறது) இதை ஒப்புக்கொண்டிருக்கலாம். இவற்றைவிட எப்போதும் உலகத்தில் அரசதரப்பு இருக்கும் ஆதரவையும் சலுகைகளையும் கொண்டே இதைச் சமாளித்துவிடலாமென்றும் கருதியிருக்கலாம். (இதுவும் நடந்துவரும் அப்பட்டமான உண்மை)
-------------------------------------------

இவற்றில் முதலாவது காரணம் மிக முக்கியமான காரணமென்பதால் புலிகளால் தாங்கள் விரும்பியபடி அவ்வொப்பந்த உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்துள்ளது. அவ்வொப்பந்தம் பல திருத்தங்களுக்குட்பட்டே இறுதிவடிவம் தயாரானது. சில இடங்களில் நேரடியாகத் தங்களைக் கட்டுப்படுத்தாதவாறு புலிகள் பார்த்துக்கொண்டார்கள். ஆயுதக் கொள்வனவு பற்றி நேரடியாக எந்தப் பகுதியும் ஒப்பந்தத்தில் இல்லை. 'தாங்கள் ஆயுதக்கொள்வனவைச் செய்வதை ஒப்பந்தம் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்று புலிகளும்', 'இல்லையில்லை - இலங்கையின் இறையாண்மை என்ற பதத்துக்குள்ளால் ஆயுதக்கொள்வனவு ஒப்பந்த மீறலே' என அரசாங்கமும் பிறிதொரு நேரத்தில் வாதிட்டன. அந்த அளவுக்கு ஒப்பந்தத்தில் தங்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய சரத்துக்களை இடம்பெறாமற் செய்வதில் புலிகள் வெற்றி பெற்றார்கள்.

அன்று தங்களின் பலத்தால் ஆதிக்கம் செலுத்தி ஒப்பீட்டளவில் அதிக சாதங்களைக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றும் எண்ணம் புலிகளுக்கு இல்லை. அதேநேரம் இவ்வொப்பந்தத்தை மாற்றாமல் நடைமுறைப்படுத்த அரசதரப்பும் ஒருபோதும் தயாரில்லை.
எனவே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசபடைகளை மிகமிக இறுக்கத்துள் தள்ளுவதுடன் இராணுவரீதியிலும் அரசியல்ரீதியும் தம்மைப் பலப்படுத்தப் புலிகள் நினைக்கிறார்கள். அதனால்தான் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உடனடியாக பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டுமெனக் கோருகிறார்கள். இன்று நடக்கும் வன்முறைகளுக்கும் அதையே சாட்டாக வைத்து இக்கோரிக்கையை இன்னும் வலுவாக்குகிறார்கள் புலிகள். இதில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே. இப்போதைய நிலையில் முதற்கட்டப் பேச்சுக்கூட நடத்தப்படாமல் எல்லாம் முறிந்துபோகவே சாத்தியம் அதிகமுண்டு.
------------------------------------------------
நிற்க, இடையில் ஒரு கட்டத்தில் 'புரிந்துணர்வு ஒப்பந்தத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தாங்கள் பேச்சுக்குத் தயார்' என்று புலிகள் அறிவித்தார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம் தான். ஆனால் சில வாரங்களுள் சுதாரித்துக்கொண்டு பழைய நிலைமைக்கு வந்துவிட்டார்கள். ஏன் அச்சமயத்தில் அப்படிச் சொன்னார்கள் என்று பார்த்தால், அது கதிர்காமர் கொல்லப்பட்ட நேரம். அவர் கொல்லப்பட்ட மூன்றாவதோ நாலாவதோ நாள் புலிகள் இப்படியொரு அறிவிப்பை விட்டார்கள் - விட்டார்கள் என்பதைவிட விடவைக்கப்பட்டார்கள் என்பது பொருந்துமென்று நினைக்கிறேன். அவர்கள்மேல் கடும் அழுத்தமொன்று அந்த நேரத்தில் இருந்திருக்கவேண்டுமென்பது யாவரும் இலகுவில் ஊகிக்கக்கூடியதே. ஆனாலும் ஏன் இலங்கை அரசு அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறியதென்று புரியவில்லை. இப்போது மகிந்த ஆட்சிக்கு வந்தபின் புலிகளின் நிலையில் இன்னும் இறுக்கம் அதிகரித்துள்ளது.
--------------------------------------------
இதுமட்டில் தனிப்பட என்னுடைய கருத்து:
என்னைப் பொறுத்தவரை இறுக்கம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.
சிலர் விட்டுக்கொடுப்புத்தான் சமாதானத்தைத் தருமென்று வாதிடலாம். முதலில் சமாதானமென்று எதைச் சொல்கிறார்களென்பது என்னுடைய கேள்வி. அதைவிட யார் விட்டுக்கொடுக்க வேண்டுமென்பது அடுத்த கேள்வி.
உலகின் முன் கடைப்பிடிப்பதாகச் சொல்லி ஒத்துக்கொண்ட விடயங்களில் பலவற்றை(க்) கடந்த நான்கு வருடங்களாக அப்பட்டமாகவே மீறிவருகிறது அரசதரப்பு. புலிகளும் இடையிடையே மீறினார்களென்றாலும், அந்தந்த நேரங்களில் (சில சமயங்களில் தவறான நேரங்களிலும்) தேவைக்கு அதிகமாகவே புலிகள்மேல் கண்டனங்களையும் அழுத்தங்களையும் அள்ளிக்கொட்டிய நடுவர்களும் உலகமும் அரசதரப்பின் மீறலில்மட்டும் இதுவரை அழுத்தமோ கண்டனமோ தெரிவிக்காதது (ஏன் என்று கேட்க நான் முட்டாளில்லை. உலகத்தை நடுநிலைமையாகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தருமென்று நம்பும் நிலையிலும் நானில்லை) முக்கிய அவதானம்.
சிலவேளை அவர்களும்கூட,
"எழும்பு எழும்பு எண்டா அவங்களும் எங்கதான் போறது?" என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ?
---------------------------------------------
புலிகளின் ஒப்பந்த மீறல் பற்றியும் யாராவது எழுதுங்களேன்?
---------------------------------------------
புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்வடிவம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆங்கிலவடிவம்

Labels: ,


Thursday, December 22, 2005

எதை வைத்துப் பேச்சுவார்த்தை?

இலங்கை இனச்சிக்கலில் அமைதிப் பேச்சுக்கள் மட்டிலான இன்றைய தலையாய சிக்கல்கள் என்னவென்றால்;
எவ்விடயத்தைப் பற்றிப் பேசுவது, மற்றும் எங்குப் பேசுவது?
(பேச்சுக்கள் தொடங்குவதற்குள்ள தடைகள் பற்றி இங்கே சொல்லப்படவில்லை. பேச்சு என்று வரும்போது இருதரப்புமே அது பற்றிச் சொல்லும் கருத்துக்கள்தான் இவைகள்)

இவற்றில் எங்குப் பேசுவது என்பதை வைத்துப் பாரிய அரசியல் விளையாட்டு தற்போது நடந்து வருகிறது. ஆசியநாடொன்றில் தான் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமென சிங்கள அரசுதரப்பு விடாப்பிடியாக நிற்க, மறுபக்கத்தில் புலிகள், ஐரோப்பிய நாடொன்றில்தான் பேச்சுக்கள் - குறிப்பாக நோர்வேயில் முதற்கட்டப் பேச்சு நடத்தப்பட வேண்டுமென நிற்கின்றனர். இப்போதுவரை, இருதரப்பும் மீளமீள தமது நிலைப்பாட்டை இன்னுமின்னும் உறுதியாக்கி வருகின்றனர்.

இப்போது நாம் "எதைப்பற்றிப் பேசுவது" என்ற சிக்கலைச் சற்றுப் பார்ப்போம். பேச்சுக்களில் முதற்கட்டமாகவும் அவசரமாகவும் ஆராயவேண்டியதாக இருதரப்புமே சொல்லிக்கொள்வது ஒன்றைப்பற்றித் தான். அது 2002 இன் தொடக்கத்தில் இருதரப்புக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட, இப்போதும் நடைமுறையில் இருப்பதாக நம்பப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றியது. முதற்கட்டப்பேச்சு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றியதாகவே இருக்கவேண்டுமென இருதரப்பும் கூறுகின்றன. அதுவும் உடனடியாக அது பற்றிப்பேச வேண்டுமெனவும் கூறுகின்றன. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டில் எதைப்பற்றிப்பேசுவது என்பதில்தான் இருதரப்புமே முரணாக நிற்கின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டுமென அரசதரப்பும், மாற்றத்தேவையில்லை, அதை அமுல்படுத்துவது பற்றிப்பேச வேண்டுமென புலிகள் தரப்பும் சொல்லி வருகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டுமென அரசதரப்பு ஏன் விடாப்பிடியாக நிற்கிறது? அது மாற்றப்படத் தேவையில்லை, அமுல்படுத்தப்பட வேண்டுமென புலிகள் தரப்பு ஏன் விடாப்பிடியாக நிற்கிறது?

இருதரப்புக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தைப் பார்த்தால், ஒப்பீட்டளவில் புலிகளுக்கு அதிக சாதகங்களும் அரச தரப்புக்கு அதிக பாதகங்களும் உள்ளதாகத் தெரியும். முக்கியமான ஒரு சரத்து, மக்கள் வாழ்விடங்கள், பாடசாலைகள், கோயில்களில் இருந்து படைநிலைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமென்பது. இன்றுவரை அது முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரைவாசியாவது நடைமுறைப்படுத்தப்பட்டதா எனவும் தெரியவில்லை. அதாவது கடந்த நான்கு வருடங்களாக புரிந்துணர்வு உடன்படிக்கையின் முக்கிய பகுதியொன்று படைத்தரப்பால் முழுதாக நிறைவேற்றப்படாமலுள்ளது. விலக்கிக் கொள்ளப்பட்ட படைநிலைகள்கூட மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாடசாலை வளவுகளுக்குள் காவலரண்கள் வந்துகொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் வலிகாமத்தில் பெரும்பகுதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் தான். நிறையக் கோயில்களும் பாடசாலைகளும் இராணுவ முகாம்களாகவே உள்ளன. யாழ்க் குடாநாட்டுக்குள்ளேயே ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் இடம்பெயர்ந்தவர்களாக 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
அரச திணைக்களத் தகவற்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் 24178 குடும்பங்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தைவிட ஏனைய பிற மாவட்டங்களிலும் இதே நிலைமைதான். வவுனியாவில் 3114 குடும்பத்தினர் உள்மாவட்டத்திலேயே இடம்பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மன்னார் மாவட்டத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி படையினர் விலகவேண்டடிய 213 பொதுவிடங்கள் இன்னும் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்றன. கிழக்கிலங்கையிலும் இதுதான் நிலைமை.

புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசதரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
கிட்டத்தட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்பு சிங்கள அரசபடைகள் இருந்த நிலைக்கு (பின்பு புலிகளால் கைப்பற்றப்பட்டவைகளை விட) இராணுவம் செல்ல நேரிடும். இவ்விடயம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோதே பலராற் சொல்லப்பட்டது.

ஆனால் நடைமுறைப்படுத்தப்படாத இந்த நடைமுறை மட்டில் நடுவன் நாடும் மற்றவர்களும் மென்போக்கையே கடைப்பிடித்தனர். யாழ் மாநகர சபைப்பகுதியை விட்டு இராணுவத்தை வெளியேறச் சொல்லி இடையிடையே அழுத்தம் கொடுத்த போது, முன்னாள் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அவர்கள் சொன்னார்:

"எழும்பு எழும்பெண்டா அவங்களும் எங்கதான் போறது? உப்பிடிக் கதைச்சா ஆனையிறவையெல்லாம் நாங்கள் அவங்களிட்ட திருப்பிக் குடுக்க வேண்டி வருமெல்லோ?"

வக்காலத்து வாங்கும் சிறந்த வக்கீல்த்தனமான வாதம் அவருடையது.
அடுத்து, பொருளாதாரத் தடை சம்பந்தமானது. ஒப்பந்தப்படி அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருளாதாரத்தடை முற்றாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஓரளவுக்கு வடக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் கிழக்கில் படைத்தரப்பால் இது சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு இன்னும் பொருளாதாரத்தடை நிலவுகிறது, அல்லது பொருட்கள் மட்டுப்படுத்தப்படுகிகின்றன. இடையிடையே அத்தியாவசியப்பொருட்களுக்குக்கூட தடைகள் விதிக்கப்படுவதும், பின் சிலநாட் போராட்டங்களின்பின் அனுமதிக்கப்படுவதும் வழமையாக இருந்தது. இதற்கு, வடக்குக் கிழக்குக்கு இடையிலான ஊடகங்களின் முக்கியத்துவ வேறுபாடும் முக்கிய காரணம். கண்காணிப்புக் குழுவும் பெரியளவுக்கு இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இவற்றைவிடவும், அரசபடைகளைவிட ஏனைய குழுக்களின் ஆயுதக்களைவு விடயத்திலும் பல சிக்கல்கள். போராளிகளின் அரசியற்பணியும் அவர்களின் பாதுகாப்பும் எனப் பல விசயங்களில் இப்போதும் சிக்கல்.
பயங்கரவாதத் தடைச்சட்டமும், அதையொட்டிய கைதுகளும்கூட ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சரத்தை மீறும் செயல்களே. மீன்பிடித்தொழில் மீதான கட்டுப்பாட்டுகள், தடைகள் என்பனவும் (ஒப்பந்தத்தில் கூறப்பட்ட இடங்களைவிடவும் இராணுவம் பாரியதொரு அழுத்தத்தை மீன்பிடித்தொழில் மீது கொண்டுள்ளது) புரிந்துணர்வு ஒப்பந்த மீறலே.

உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்துச் சரத்துக்களும் நடைமுறைப்படுத்தப்படும்போது புலிகளின் கை ஓங்கும் என்பது வெளிப்படை. இந்நிலையில் ஒப்பீட்டளவில் தமக்குச் சாதகமாகவும், அரசதரப்புக்குப் பாதகமாகவும் இருப்பதாகத் தாங்கள் கருதும் ஒப்பந்தத்தை மாற்றயமைக்கப் புலிகள் தயாரில்லை. மாறாக அதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசதரப்பை அழுத்துவதே அவர்களின் முக்கிய நோக்கம்.

மறுவளத்தில், தமக்குப் பாதகமாகவும் புலிகளுக்குச் சாதகமாகவும் இருப்பதாக தாங்களும் கருதும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதைவிட அதில் திருத்தங்கள் கொண்டுவரவே அரசதரப்பு முயல்கிறது.

சரி, இவ்வளவுதூரம் பாரதூரமான ஓர் ஒப்பந்தத்தில் அரசதரப்பு ஏன் கைச்சாத்திட வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பானது. அதற்கு அவ்வொப்பந்தம் உருவாக்கப்பட்ட காலத்தைக் கருத்திற்கொள்ள வேண்டும். அத்தோடு இரண்டு முக்கிய காரணங்களையும் கவனத்திற் கொள்ளலாம்.
இவை பற்றிய பதிவை அடுத்ததாக இடுகிறேன்.
--------------------------------------------

புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் வடிவம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆங்கில வடிவம்.

Labels: ,


Tuesday, December 20, 2005

யாழ்ப்பாணத்தில் இன்றும் இராணுவம் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இராணுவத்தினரது வன்முறைகள் அதிகரித்தவண்ணமுள்ளன. நேற்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், மற்றும் மாணவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய இராணுவம் இன்றும் பல்கலைக்கழகத்துள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பௌதீகத்துறை பீடாதிபதி மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் மாணவர் கௌரி செந்தூரன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.


இதேவேளை, கல்லூரியின் முன்பாக உள்ள இராமநாதன் வீதியில் காவல்துறையின் வாகனம் மீது முற்பகல் 11.30 மணியளில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லெறிந்ததாக இராணுவத்தரப்பினர் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் இளம்பிறையன், வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------

இதேநேரம் இன்று முச்சக்கரவாகனச் சாரதிகள்மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் படையினரால் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஓட்டோ சாரதியை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்த ஓட்டோ தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக யாழ். நகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் தங்களது வாகனங்களுடன் யாழ். நகரில் குவிந்தனர்.

ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி ஆகியவற்றை ஓட்டோ சாரதிகள் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் ஓட்டோ சாரதிகள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
நூற்றுக்கும் மேலதிகமான படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு அந்த இடத்தை இராணுவத்தினர் போர்க்களமாக்கினர். இந்தத் தாக்குதலில் ஓட்டோ சாரதிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகின.

இராணுவத்தினரின் இந்த வன்முறைச் செயல்களால் யாழில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே மணற்காடு, குடத்தனை, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
---------------------------------------------

புங்குடுதீவில் தர்சினி என்ற இளம்பெண்ணொருவர் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
--------------------------------------------
செய்திகள்: புதினம், தமிழ்நெற்

Labels: ,


Monday, December 19, 2005

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் இராணுவ வன்முறை

என்ன நடக்கிறது?

நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எனப் பலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. பதினைந்து பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தனியொரு சம்பவமாக இன்றி பல சம்பவங்களின் தொடர்ச்சியே. கடந்த 3 நாட்களுக்குள் நடந்த பலசம்பவங்களின் கோர்வையே இது.
இதுபற்றிய செய்திகள்:

இரு தினங்களின் முன் "தர்சினி" என்ற இளம்பெண் புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, கிணறொன்றினுள் வீசப்பட்ட சம்பவத்துடன் இது தொடங்குகிறது. இக்கிணறு சிங்கள இராணுவத்தினரின் முகாமருகே இருக்கும் கிணறு. இப்பாலியல் வன்புணர்வுக் கொலை இராணுவத்தால் தான் செய்யப்பட்டதென மக்கள் தெரிவிக்கின்றனர். புங்குடுதீவில் இதுதான் முதல்தடவை என்றில்லை. ஏற்கெனவே இவ்வாறான பாலியல் வன்புணர்வுக்கொலைகள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுள்ளன. 'சாரதாம்பாள்' என்ற பெண்ணின் கொலை நீதிமன்றம் வரைகூட வந்தது. அவ்வழக்கில் இராணுவத்தினருக்கெதிரான சாட்சிகள் கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு இறுதியில் வழக்கு நீர்த்துப்போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது தர்சினியின் கொலை. மருத்துப்பரிசோதனையும் பாலியல்வன்புணர்வுக்கொலையை உறுதிப்படுத்துகிறது.

இக்கொலையைக் கண்டித்து மக்களால் பல்வேறு போராட்டங்கள் செய்யப்பட்டன. சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன், பல்கலைக்கழக மாணவர்களுடன் புங்குடுதீவில் அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினரால் வழிமறித்துத் திருப்பியனுப்பப்பட்டார். அவ்விடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு 25 வரையான பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்தனர்.

இச்செயலைக் கண்டித்தும், எற்கெனவே பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட அட்டூளியங்களைக் கண்டித்தும், (பல்கலைக்கழத்துள் இராணுவப் பிரவேசம், அடையாள அட்டைகளைக் கிழித்தெறிந்தது, பல்கலைக்கழகச் சுற்றாடலில் என்னேரமும் இராணுவக் காவல்) யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு ஆட்சேபனை மனுவொன்றைக் கொடுப்பதற்காக மாணவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எனப்பலரும் கண்காணிப்புக்குழுப் பணிமனையை நோக்கிச் சென்றனர். அப்போது இடைமறித்த 'சிங்கள' இராணுவம் இவர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. முதலில் வானை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், பின் இவர்களை நிலத்துக்குச் சமாந்தரமாகவும் சுட்டுள்ளார்கள். தங்களை நோக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து மாணவர்கள் கலைந்து வந்துள்ளார்கள். இச்சம்பவத்தில் காயமடைந்த 15 பேர்வரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதில் காயமடைந்த பேராசிரியர் பேரின்ப நாதனும் இன்னொரு மாணவரும் துப்பாக்கிச் சூட்டிலேயே காயமடைந்தனர் எனச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையிட்டு இராணுவம், 'அவர்கள் எங்கள்மேல் கல்லெறிந்தார்கள். அதனால்தான் நாம் வானைநோக்கிச் சுட்டோம்' என்கிறது.
இவர்கள் பின்னால் புலிகள் உள்ளார்கள் என்றும் சொல்கிறது.
ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக நின்ற யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனதாஸ், 'அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் அமைதியாகத்தான் சென்றோம். இராணுவம் தாக்கியபோதும் அவர்களோடு பாராளுமன்ற உறுப்பினரும் நானும் பேசினோம். ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிச் சூட்டை நிலத்திலும் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து உயிர்க்கொலைகளைத் தவிர்ப்பதற்காக நாம் கலைந்துசென்றோம்' என்கிறார்.


புங்குடுதீவில் நடந்த பாலியல்வன்புணர்வுக் கொலையையடுத்துத் தொடர்ச்சியாகப் பலசம்பவங்கள் நடந்துள்ளன. இந்நேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே 'பொங்கியெழும் மக்கள்படை' என்ற பெயரில் இராணுவத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, இனியும் இராணுவம் எல்லை மீறினால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டிருந்தன. கண்காணிப்புக் குழுவுக்கும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இப்போது புங்குடுதீவுச்சம்பவமும் அதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினருட்பட மாணவர்கள், பேராசிரியர்கள, பொதுமக்கள் எனத் தொடர்ந்து இராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இனிவரும் சிலநாட்களில் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாம். (ஏற்கெனவே, நடைபெற்றுவரும் உயர்தரத் தேர்வுக்கு இடையூறு விளைவிக்காதிருக்கவே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகக் கதைகள் கசிந்ததுண்டு)


யாழ். பாராளுமன்ற உறுப்பினருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் நடக்கும் சம்பவங்கள், அரசியல் மட்டத்தில் தெளிவாகவே ஒரு செய்தியைச் சொல்கிறது.


பேரணி சென்ற பல்கலைக்கழகச் சமூகம்.



பேரணியை "எதிர்கொண்ட" படையினர்










-----------------------------------------

படங்கள்: சங்கதி

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]