Monday, January 01, 2007

"முன்னொரு காலத்தே ஒரு தவறணை..."- விடுபட்ட குறிப்புகள்

தொலைந்துபோன வன்னி ஆளுமைகள்

கடந்துபோன 2006 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இராணுவ, இலக்கியத் துறைகளில் 'ஈடுசெய்ய முடியாத' இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. முக்கியசரிவுகள் பற்றிச் சிலகுறிப்புக்கள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன.

ஈழத்து இலக்கியத்தில் இவ்வாண்டில் நிகழ்ந்த குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இழப்புக்களில் வன்னி சார்ந்த இரு படைப்பாளிகளும் அடங்குவர்.

1. கவிஞர் நாவண்ணன்
2006 சித்திரையில் சுகவீனம் காரணமாக வன்னியில் இறந்த படைப்பாளி.


தொடக்கத்தில் ஏதோவொரு விதத்தில் தமிழ் மிதவாதக் கட்சிகளோடும் சக்திகளோடும் தொடர்பிருந்த கவிஞர் நாவண்ணன் பின் ஆயுதப்போராட்டத்தோடும் தன்னை ஒத்திசைவாக்கியதோடு, அப்போராட்டம் தனியொரு இயக்கத்தால் சுவீகரிக்கப்ட்டபின் அவ்வியக்கத்தோடும் ஐக்கியமானார்.

இயக்கத்தோடு ஐக்கியமாக முன்பே அவரெழுதிய படைப்புக்கள் முக்கியமானவை.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பேரில், 1957 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை நூலாக்கித் தொகுத்திருந்தார். அதைவிட மக்களுக்காக வாழ்ந்து ஆதிக்கத்தை எதிர்த்ததால் சிங்களப்படையினரால் தன் பங்குக்குரிய கோயிலடியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை அருட்திரு. மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலை 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.

புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக - கிட்டத்தட்ட தொடக்கம் முதலே தொடர்ந்து பணியாற்றி வந்தார். தொன்னூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடரை வானொலியில் வழங்கினார். ஏற்கனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளைத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக்குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தியதைக் குறிப்பிடலாம். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.

'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற கவிஞர் நாவண்ணனின் தொகுப்பு, தனியொரு இயக்கத்தைத் தாண்டி, ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கெனப் படைக்கப்பட்ட முக்கிய படைப்பு.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பேரில் எழுதினார். அதன் முதற்றொகுதி முடித்த நிலையில்தான் மரணமடைந்தார்.
"காவியமாய் புதுப் புறம்பாடி" -எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"
என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.

அக்காவியத்துக்கான அவரது உழைப்புப் பெரியது.
தனியொரு இயக்கம் சம்பந்தப்பட்டதென்றாலும் ஈழப்போராட்டத்தில் கரும்புலி காவியம் முக்கியமான படைப்பு மற்றும் ஆவணம்.


கவிஞர் நாவண்ணன் அவர்கள் தேர்ந்த சிற்பக்கலைஞரும்கூட.

இவரது ஒரே மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்)போராட்டத்தில் இணைந்து களமொன்றில் வீரச்சாவடைந்தார்.


நாவண்ணன் பற்றி சிறிது விரிவான பதிவு:
மக்கள் இலக்கியகாரன்

2. கவிஞர் பொன்.கணேசமூர்த்தி
2006 ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தன் பெரும்பாலான படைப்புக்களை விடுதலைப்போராட்டம் சார்ந்தும் - அதேசார்பில் விடுதலைப்புலிகளை மட்டும் சார்ந்தும் அமைத்துக் கொண்டவர். வாழ்க்கையை ஓட்ட, வங்கி ஊழியத்தைத் தொழிலாகக் கொண்டவர். கவிதை, பாடல் என்பவற்றாலேயே அதிகம் அறியப்பட்டாலும் அவற்றைத் தாண்டி பல கலைவடிவங்களில் கால்பதித்தவர்.

மிகவெற்றிகரமான நாடக நெறியாளர். இவரின் இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் பரவலாக அரங்கேறிய 'சந்தனக்காடு' நாடகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. இவர் எழுதிய 'இலங்கை மண்' என்ற 'இராவணனை நாயகனாகக் கொண்ட' நாடகமும் அவ்வாறே.
பல பட்டிமன்றங்களை திறம்பட நடத்தியுள்ளார். வில்லிசைக் கலையிலும் தடம்படித்தவர்.
இவரின் கவியரங்குகள் 'குறிப்பிட்ட' மக்களிடத்து மிகப்பிரசித்தம்.

யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னிக்கு ஓடிவந்த நேரத்தில்
நடத்தப்பட்ட, 'நாங்கள் பலமிழக்கவில்லை; தோல்வியுறவில்லை; இதுவொரு தந்திரோபாயப் பின்வாங்கல்;விரைவில் சிங்கள அரசுக்குப் பாடம் புகட்டுவோம்' என்றவாறான பலதரப்பட்ட பரப்புரைகளைவிட பொன்.கணேசமூர்த்தியின் 'புலியொரு காலமும் பணியாது' என்ற ஒரேயொரு பாடல் தந்த நம்பிக்கை மிகமிக அதிகம்.

இவரது இரண்டாவது மகன் வன்னிக்குள்ளேயே இனந்தெரியாத நோயொன்றுக்குப் பலியான வேதனையை நாவலாக்கினார். மூன்றாவது மகன் போராட்டத்திலிணைந்து 1996 ஆம் ஆண்டு படையினருடன் மோதி வீரச்சாவடைந்திருந்தான்.

__________________
மேற்குறிப்பிடப்பட்ட இரு படைப்பாளிகளும் வெளிப்பார்வைக்கு குறிப்பிடத்தக்க இலக்கியங்களேதும் படைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தாம் வாழ்ந்த சமூகத்தில், சுற்றத்தில் நடப்பவற்றையும் அச்சமூகத்துக்குத் தேவையானவற்றில் ஏதோ சிறுபகுதியையென்றாலும் பதிவாக்கியிருக்கிறார்கள். களத்தில் தமது மகன்களை இழந்திருக்கிறார்கள். இதுவொரு தகுதியல்லவென்றாலும் எதை எழுதினார்களோ, எந்த அரசியலைப் பேசினார்களோ அதையே செய்துகொண்டிருந்தார்கள்; எழுதுவதில் குற்றவுணர்வின்றி இருந்திருக்கிறார்கள்.

இவர்களிருவரும் வன்னியைப் பிறப்பிடமாகக் கொள்ளாவிட்டாலும் அச்சொல்லினூடு அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணமுண்டு.

___________________
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ ஆளுமைகளின் இழப்புக்களும் குறிப்பிடத்தக்கவை. எண்ணூற்றுச் சொச்சம் போராளிகளை இந்த ஆண்டில் இழந்திருந்தாலும் கேணல் இறமணன், லெப்.கேணல் மகேந்தி போன்ற மூத்த தளபதிகளதும், லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் குஞ்சன், லெப்.கேணல் அக்பர் போன்றவர்களதும் இழப்புக்கள் ஈடுசெய்யப்பட முடியாதவை.


________________________________
2006 இல் இழக்கப்பட்ட சில ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு:
அலைஞனின் அலைகள்: குவியம்: புலம்-20: "முன்னொரு காலத்தே ஒரு தவறணை...'- குறிப்புகள்"

தலைப்பின் பெரும்பகுதி அவரிடமிருந்து கடன்பெற்றதே.

Labels: , , , ,


கிளாலிப் படுகொலையும் அது சார்ந்தவையும்

இன்று கிளாலிப் படுகொலையொன்றின் நினைவுநாள்.
1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும்.

முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம்.
***
யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் 'கேரதீவு - சங்குப்பிட்டி' என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே முறையே ஆனையிறுவுப் படைத்தளம், பூநகரிப் படைத்தளம் என்பவற்றால் மறிக்கப்பட்டிருந்தன. சண்டை தொடங்கியபின் மக்களுக்களின் போக்குவரத்துக்கிருந்த இரண்டு பாதைகளுமே மூடப்பட்டன. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளிச்செல்லவோ உள்வரவோ மாற்றுவழிகளைத் தேடவேண்டிய நிலை.

முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும்.

இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. சும்மா விட்டுவிட முடியுமா? பாதையொன்றில்லாவிட்டால் யாழ்ப்பாணம் வாழாது. அன்றும்சரி, இன்றும்சரி இதுதான் நிலைமை. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.

தென்மராட்சியிலுள்ள கிளாலி என்ற கடற்கரையிலிருந்து மறுதொங்கலில் பூநகரிக்கு அண்மித்த நல்லூர், ஆலங்கேணி போன்ற பகுதிகளுக்கு கடனீரேரியூடாகப் பயணிப்பதே அந்த மாற்றுவழி. கிளாலியிலிருந்து நல்லூரை நோக்கிப்போகும்போது இடப்பக்கம் ஆனையிறவுப் படைத்தளம், வலப்பக்கம் பூநகரி கூட்டுப்படைத்தளம். இரண்டுபக்கமிருந்துமே ஆபத்துத்தான். அதிலும் பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் அங்கமான நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுதான் மக்களின் கிளாலிக் கடனிரேரிப் பயணம் நடந்தது.


[பெரிதாய்ப் பார்க்க படத்திற் சொடுக்கவும்.]

தொடக்கத்தில் பூநகரி - நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து வரும் கடற்படையினரால் பல தாக்குதல்கள் மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டன. பலர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அப் படுகொலைகளுள் அதிக எண்ணிக்கையான மக்கள் ஒரேதடவையில் கொல்லப்பட்ட சம்பவம்தான் 1993 ஜனவரியில் நடந்தது. அன்றைய படுகொலையில் ஐம்பது வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடற்படையினரில் நீடித்த படுகொலைகளால் மக்கள் அச்சமடைந்தாலும் கிளாலிக் கடனீரேரிப் பாதையை விட்டால் வேறு வழியில்லையென்ற நிலையில் தொடர்ந்தும் பயணித்தனர்.

இந்நிலையில் மக்கள்மீதான தாக்குதலை நடத்தும் கடற்படையினர் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்குதலொன்றை அதே கிளாலிக் கடற்பரப்பில் வைத்து நடத்தினர்.

26.08.1993 அன்று போக்குவரத்திலீடுபட்ட மக்களைத் தாக்கவென நாகதேவன்துறையிலிருந்து வந்த கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரு கரும்புலிப் படகுகள் கடற்படையினரின் இரு படகுகள் மீது மோதி அவற்றைத் தகத்து மூழ்கடித்தன. இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் வரதன், கரும்புலி கப்டன் மதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

அன்றுடன் கிளாலிக் கடற்பரப்பில் நிலைமை மாறியது. மக்களுக்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். மக்களைத் தாக்கவென வந்த கடற்படையினருடன் சில சண்டைகள் நடைபெற்றன. இக்கடல்வழிப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் சாள்ஸ், மக்களுக்கான பாதுகாப்புச் சமரொன்றில் அதே கிளாலிக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்தார்.




1993 நவம்பரில் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீது 'தவளைப் பாய்ச்சல்' என்ற பேரில் பெரும் நடவடிக்கையொன்றை புலிகள் மேற்கொண்டு அத்தளத்தை அழித்துப் பின்வாங்கினர்.

அதன்பின் சீராக, ஆபத்தின்றி கிளாலிக் கடற்பயணம் தொடர்ந்தது. யாழ்-வலிகாம இடப்பெயர்வைத் தொடர்நது பெருமளவான மக்கள் வன்னிக்கு வந்ததும் இதே பாதைவழியாற்றான். 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரிடம் வீழும்வரை கிளாலிக் கடற்பரப்பால் பயணங்கள் ஆபத்தின்றி நடந்தவண்ணமேயிருந்தன.


_______________________
படங்கள்: அருச்சுனா, Google

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]