Wednesday, January 25, 2006
அத்திவாரக் கற்கள்
பொதுவாக யாருக்குமே தம் பெயர் புகழடைவதில் மகிழ்ச்சியுண்டு. தம் பெயரைப் பிரபலப்படுத்திப் புகழடைய பெரும்பான்மையானோர் பின்னிற்பதில்லை. வாழும்போது மட்டுமில்லை, இறந்தபின்னும் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டுமென்ற விருப்பம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. இது மனித இயல்பு.
ஈழப்போராட்டத்தில், தம் உயிர்களை ஈந்தவர்கள் பலவிதமானவர்கள். அவர்களுக்களிற் பெரும்பான்மையோருக்கு உரிய கெளரவம் வழங்கப்படுகிறது. வீரமரணமடைந்தவர்களுக்குக் கல்லறைகளுண்டு. வித்துடல் கிடைக்காதவர்களுக்கு நடுகற்களுண்டு. அவர்கள் பற்றிய வரலாறுகள், குறிப்புக்களுண்டு. அவர்கள் பெயர்களில் வீதிகள், விளையாட்டரங்கங்கள், கல்விச்சாலைகள் எனப் பலவுண்டு. மாவீரர்களாக இராணுவ நிலைகளுடன் அவர்களின் பெயர்விவரங்கள் வெளியிடப்படும். பெற்றோர், குடும்பத்தினர் கொளரவிக்கப்படுவார்கள்.
இதேபோல் வெளித்தெரியாத பல தியாகங்களும் ஈழப்போராட்டத்திலுண்டு. வாழும்போதுமட்டுமன்றி, சாகும்போதும் தம் சுயத்தை அழித்துச் சென்றவர்கள் அவர்கள். அவர்களின் பெயர்கள் மாவீரர் பட்டியலில் வராது. அவர்களைப் போராளியாக யாருக்கும் தெரியாது. வாழ்ந்த சுவடும் தெரியாது; செத்த சுவடும் தெரியாது. தாய்க்குக்கூட தன் பிள்ளையைத் தெரியாது. அவர்களையறிந்த சிலருக்கு மட்டுமே அவர்களைப் பற்றியும் என்ன நடந்ததென்பது பற்றியும் தெரியும். அது அவர்களோடே இருந்துகொள்ளும். இறந்த பின்னும் தங்கள் பெயர்களை வெளித்தெரியாதபடி மறைத்தவர்கள் அவர்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் அத்திவாரக்கற்களே. எதிரியின் குகைக்குள் அவனது அத்திவாரத்தை அசைத்தவர்கள். இவர்களின் ஒவ்வொரு சாவும் போராட்டத்தின் பெரிய பாய்ச்சலே.
இவர்களின் வாழ்க்கையே வித்தியாசமானது. அவர்களின் இறுதிநாட்கள் பெரும்பாலும் போர்ச்சூழலுளிருந்திருக்காது. ஆடம்பரமான, பகட்டான, தடம்புரள ஏதுவான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் உல்லாச உலகத்துள்ளும் மனம்பிரளாது பாதைமாறாது காரியத்திற் கண்ணாயிருந்தவர்கள்.
குறிப்பிட்ட வெற்றிநாட்களில் முகமறியா அவர்களுக்கு மனத்துள் அஞ்சலி செலுத்துவதைத்தவிர வேறேதும் செய்வதற்கில்லை.
இவர்கள்
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்"
இவர்களை நினைத்து இருபாடல்களை இங்கே பதிவிடுகிறேன்.
முதற்பாடல்:
"வாய்விட்டுப் பெயர்சொல்லி அழமுடியாது - வெறும்
வார்த்தைகளால் உம்மை தொழமுடியாது.
தாய்க்குத் தன் பிள்ளையின் முகம்தெரியாது -எங்கள்
தலைமுறை உங்கள் பெயர் அறியாது."
இதைவிட அழகாக யாராற் சொல்லிவிடமுடியும்?
-------------------------
அடுத்த பாடல்,
"ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்"
தமிழ்ப்பதிவுகள்
Labels: நினைவு, மாவீரர், வரலாறு
Sunday, January 15, 2006
கேணல் கிட்டு நினைவாக.....
கேணல் கிட்டு தமிழீழப் போராட்ட வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத, ஈடு செய்ய இயலாத அத்தியாயம்.
யாரையும் இலகுவில் புகழ்ந்து கூறாத பிரபாகரனின் கூற்றின் படி,
"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்".
தொடக்க காலத்தில் அவரின் பணிகள் சொல்லற்கரியவை. (அதிகளவிற் சர்ச்சைக்குள்ளானவரும் கூட) யாழ்ப்பாணத்தை ஏறக்குறைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்.
காலிழந்த பின்னும் முழுவீச்சோடு செயற்பட்டவர். இந்திய இராணுவத்துடனான மோதற்காலத்தில் சென்னையிலிருந்து ஏராளமான வேலைகளைச் செய்தார். அந்நேரத்தில் ஈழத்து நடப்புக்களை ஓரளவுக்காவது வெளியுலகத்துக்குக் கொண்டு வந்ததில் இவரின் பங்கு முக்கியமானது. பின் தாயகம் திரும்பி, இயக்க வேலையாக வெளிநாடு சென்றார். இறக்கும் வரை தாயகம் திரும்பவில்லை.

வெளிநாட்டில் இவர் செய்த பணிகளும் காத்திரமானவை.
லெப்.கேணல் குட்டிசிறி உட்பட போராளிகள் சிலரோடு தாயகம் நோக்கிப் பயணித்த வேளையில் இந்தியக் கடற்படையால் சர்வதேசக் கடற்பரப்பில் இவரது கப்பல் வழிமறிக்கப்பட்டது. பலவந்தப்படுத்தி இந்தியக் கரையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டபோது, கப்பற்சிப்பந்திகளைக் கடலிற் குதித்துத் தப்பிக்க வைத்துவிட்டு அப்போராளிகள் அனைவரும் கப்போலோடு சேர்த்துத் தம்மையும் அழித்துக் கொண்டனர்.
அவர்கள் நினைவான பாடலொன்றைக் கேளுங்கள்.
தமிழ்ப்பதிவுகள்
Saturday, January 14, 2006
விடுதலைப்புலிகளின் தைத்திருநாள்
விடுதலைப்புலிகளின் படையணிகள் இன்று தங்களது முகாம்களில் தைத்திருநாளைக் கொண்டாடின. வழமையாக முகாம்களில் இந்நாள் கொண்டாடப்படுவதுண்டு.
இம்முறை சிறப்பு ஆயுதப்பயிற்சிக் கல்லூரியில் படையணிகள் தங்களது தைப்பொங்கலைக் கொண்டாடின.
இன்றுகாலை ஆறு மணியளவில் தேசியக்கொடியேற்றலுடன் இந்நிழ்வு தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.
அதுசம்பந்தமான படங்கள் சில:



படங்களைப் பெரிதாக்க அவற்றின் மேல் அழுத்தவும்.
------------------------------
மேலதிக செய்திக்கும் படங்களுக்கும் இங்கே அழுத்தவும்.
------------------------------
செய்தியும் படங்களும்: புதினம்.
தமிழ்ப்பதிவுகள்
Labels: செய்தி, படைபலம், பதிவுகள்
தைத்திருநாள் திருவிழா நிகழ்ச்சிகள்.

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்விழாவில் இன்று இரவு நிறையக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஈழத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலைஞர்கள் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பிக்கின்றனர்.

-------------------------------
செய்திகள், படங்கள்: புதினம், சங்கதி.
-------------------------------
மேலதிக செய்திகளுக்கும் படங்களுக்கும் செல்ல,
புதினம்
சங்கதி
---------------------------------------------
தமிழ்ப்பதிவுகள்
Labels: செய்தி, பதிவுகள், மக்கள் எழுச்சி
Tuesday, January 10, 2006
மேஜர் சோதியாவின் நினைவுநாள்.
'மைக்கேல் வசந்தி' என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார். மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.
மணலாற்றுக் காட்டுக்குள் இருந்தகாலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றார். பின் 11.01.1990 அன்று சாவடைந்தார்.
இவரின் பெயரில் 'சோதியா படையணி' என்ற பெண்கள் படையணி 14.07.1996 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னான அனைத்துக் களங்களிலும் அது சிறப்புறச் செயலாற்றியது. இன்றுவரை ஏறத்தாள ஐநூறு போராளிகளை இப்படையணி இழந்துள்ளது.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மேஜர் சோதியாவினது ஆளுமையும், திறமையும் இன்றுவரையான மகளிர் படையணியின் வளர்ச்சிக்கான அச்சாணி.
தமிழ்ப்பதிவுகள்
Labels: நினைவு, மாவீரர், வரலாறு
Sunday, January 08, 2006
ஆனையிறவுத் தாக்குதல் நினைவு.
1996 இன் இறுதிப்பகுதியில் கிளிநொச்சி நகரம் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்டது. முல்லைத்தீவு இழப்பை இதன்மூலம் ஈடுசெய்ததாக அரசு நினைத்துக்கொண்டிருந்தது. (ஆனால் தமிழர்தரப்புக்கு முல்லைத்தீவு வெற்றிக்கு ஒப்பான வெற்றி இன்றுவரை வேறெதுவுமில்லை. அவ்வெற்றியின் வேரிலிருந்துதான் இன்றுவரையான எல்லாமே. முல்லைத்தீவு புலிகளிடம் இருக்கும்வரை அவர்களை எதுவும் செய்யமுடியாதென்பதும் எல்லோரும் அறிந்ததே) கிளிநொச்சியை இழந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே பாரியதொரு தாக்குதலைப் புலிகள் நடத்தத் திட்டமிட்டனர்.
1997 இன் ஜனவரி ஒன்பதாம் நாள் ஆனையிறவுப் படைத்தளம் மீது பலமுனைகளால் நகர்ந்த புலிகளின் படையணிகள் தாக்குதல் நடத்தின. இதில் ஆனையிறவின் பிரதான ஆட்லிறி எறிகணைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அதில் பதினொரு ஆட்லறிகள் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அவற்றைவைத்து எதிரிமீதே தாக்குதல் நடத்தினார்கள்.
அவ்வேளை கிளிநொச்சி மீது எத்தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஆனையிறவிலிருந்து நேரடியான தரைவழிப்பாதை இருக்கவில்லை. பரந்தன் படைத்தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படைத்தளம் கைப்பற்றப்பட்டால் ஆனையிறவிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குத் தரைவழிப்பாதை கிடைக்கும். அனால் கடுமையாக முயற்சித்தும் அத்தளம் புலிகளிடம் விழவில்லை. உள்ளே ஊடுருவிய அணிகள் ஆனையிறவுத்தளத்தின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும் பரந்தன் கைப்பற்றப்படாதது பெரிய பிரச்சினையாக இருந்தது. கைப்பற்றப்பட்ட நீண்டதூர ஆட்லறி எறிகணை செலுத்திகளைக் கொண்டுவருவதற்குப் பாதையில்லை. பகல்நேரத்தில் ஆனையிறவு வெட்டையில் இழப்புக்கள் அதிகரிக்கத்தொடங்கின.
இந்நிலையில் கைப்பற்றிய ஆட்லறிகள் பதினொன்றையும் தகர்த்துவிட்டு கைப்பற்றிய இடங்களிலிருந்து பின்வாங்கினர் புலிகள். பாரியதொரு திருப்புமுனையாக நிகழ்ந்திருக்கவேண்டிய அச்சமர் பரந்தன் படைத்தளமொன்று கைப்பற்றப்படாமையால் எதிர்பார்த்த விளைவைத்தரவில்லை.
பின் ஜெயசிக்குறுசமர் தொடக்கம் பலகளங்களைக் கண்டபின்னர் 2001 இல் ஏப்ரல் மாதம் ஆனையிறவுப் படைத்தளம் புலிகளிடம் முற்றாக வீழ்ந்தது.
------------------------------------------
இன்று முன்னாள் யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் பாண்டியனின் நினைவுநாளும்கூட.
தமிழ்ப்பதிவுகள்
Labels: களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், வரலாறு
Tuesday, January 03, 2006
சீலன் எனும் ஆளுமை பற்றிப் பிரபாகரன்
ஏற்கெனவே மாவீரன் லெப்.சீலனின் இருபத்தியிரண்டாவது நினைவுதினத்தையொட்டி போடப்பட்ட பதிவிது. ஆனால் அந்நேரம் ஒலிப்பதிவகள் சீராக வேலைசெய்யவில்லையாதலால் பலராற் கேட்க முடியாமலிருந்தது. இப்போது மேலதிகமான இணைப்புக்களுடன் மீண்டும் அக்குரற் பதிவுகள்.
---------------------------------------------
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.
நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? இப்போது கைவசம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சீலன் பற்றிச் சொல்லும் காட்சிப்பதிவு கிடைத்தது. நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.
ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகள் கேட்க முடியாமலிருக்கும் பட்சத்தில் இரண்டு நாள் சென்ற பின் முயற்சிக்குமாறு கேட்கிறேன்.
திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.
தொடர்ந்தும் சீலனைப்பற்றிய மேலதிக தகவல்கள்:
சீலனின் விளையாட்டுத்தனங்கள்:
சீலனுக்கு 'இதயச்சந்திரன்' என தனிப்பட பெயர்சூட்டியதற்குரிய காரணம் பற்றியும் தன் மகனுக்கு அவரின் பெயரைச் சூட்டியமையும், முதலாவது மரபுவழிப்படையணிக்குப் பெயர் வைத்தது பற்றியும்:
சீலனின் ஆளுமையும் குணஇயல்புகளும்:
தொடக்க காலத்தில் போராளிகளின் பயிற்சிகள், இயங்கியவிதங்கள் பற்றிய ஒரு பதிவு:
இத்துடன் .Zip வடிவத்தில் முழுக் கோப்புக்களையும் வைத்துள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.
இணைப்பு ஒன்று.
இணைப்பு இரண்டு.
அல்லது இங்கே
நன்றி: விடுதலைத் தீப்பொறி-II
தமிழ்ப்பதிவுகள்
Subscribe to Posts [Atom]