Wednesday, May 31, 2006

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்

சிறிரங்கன் சிக்கல் குறித்த பதிவு.

இப்பதிவு இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு முதன்மைச் சம்பந்தமில்லாதது. எவ்விதத்திலும் அதுபற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இது உதவாது. எனவே ஏதோ விசயமிருப்பதாக நம்பி ஏமாற வேண்டாம்.
ஓர் எதிர்ப்புப் பதிவை இடவேண்டுமென்பதைத் தாண்டி எந்த நோக்கமுமில்லை. அப்பிரச்சினையைத் திசைதிருப்பும், கொச்சைப்படுத்தும் எண்ணமுமில்லை. இந்தத் தெளிவோடு மேற்கொண்டு படியுங்கள்.

"இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கண்டிக்கிறேன்".

இதுவரை நான் 'உண்மையாயிருக்கும் பட்சத்தில்" என்ற சொற்றொடரைப் பாவிக்கவில்லை. ஆனால் இப்போது பாவிக்கிறேன்.
இச்சொற்றொடர் பாவித்த சிலர் மீது பொடிச்சி போன்றவர்களிடமிருந்து விழுந்திருக்கிறது சாத்து. நான் பாவிக்கவில்லையென்றாலும் அதே நிலைதான் எனதும் என்பதாலும், எதிர்வினை இல்லாமலே விட்டால் தாங்கள் சொன்னதுதான் சரியென்று சிந்திக்கத் தலைப்படுவதோடு(ஏற்கனவே சிறிரங்கன், ஜனநாயகம், இராயகரன் போன்றவர்களுக்கு எதிர்வினை இல்லாததால் அவர்கள் சொல்வது சரியென்றும் புலி அடிவருடிகளின் ஆற்றாமையென்றும் பி.கே சிவகுமார் சொல்லித் திரிந்தது போல) தொடர்ச்சியாக இதுபோன்ற இலவச அறிவுரைகளை / கண்டனங்களை என்போன்றவர்கள் சந்திக்க வேண்டிவருமென்பதாலும்,
இச்சிறு பதிவு.

மீண்டும் சொல்கிறேன்.
சிறிரங்கனின் விசயம் "உண்மையாயிருக்கும் பட்சத்தில்" எனது கண்டனமும் அவருக்கு என் ஆதரவுமுண்டு.
மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பதிவு எழுத வந்த காரணத்தை மட்டும் பார்த்துச் செல்கிறேன்.

இந்த 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என் சொற்றொடர் சிலராற் பாவிக்கப்பட்டது சிறிரங்கனின் இரண்டாம் பதிவுக்கு முன்பு என்பதை ஒரு தகவலாகச் சொல்லிவிட்டு மேற்கொண்டு செல்கிறேன்.
யாரும் ஒருவர் சொல்வதை உண்மையென்று அப்படியே நம்பி துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுவும் இப்படியான விசயங்களின் போது தங்களின் சந்தேகத்தைத் தெரிவிக்க குறைந்தபட்சமாக இப்படியொரு சொற்றொடரைப் பாவிப்பதை எப்படித் தவறென்று சொல்ல முடியும்? அப்படிச் சொல்வதாலேயே அவர்கள் உண்மையில் அனுதாபம் தெரிவிக்காதவர்கள் ஆகிவிடுவார்களா? இப்படிச் சொல்லாமல் நேரடியாக வந்து சொல்பவர்களின் எத்தனை பேர் உண்மையில் சிறிரங்கனில் அக்கறையுள்ளவர்? புலியைச் சாட அருமையானதொரு சந்தர்ப்பமென்று வருபவர்கள் எத்தனை பேர்?

நிற்க, என்போன்றவர்கள் சிறிரங்கன் போன்றோரை எழுந்த மானத்தில் நம்ப முடியாமலிருப்பதற்கும், இப்படியான தருணங்களில் 'இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில்' என்று அடைமொழி போடுவதற்கும் வலுவான காரணங்களுண்டு. அவர் வலையுலகில் வந்தகாலம் முதல் வாசித்துவருபவன் என்ற முறையில் என் பட்டறிவு அதுதான்.

"புலிகளால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் போருக்கு வளர்க்கப்படும் வேள்விக் கிடாய்கள்" என்று சிறிரங்கன் எழுதினார். அதை விமர்சித்த போது, 'உங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கு எல்லாம் தெரியும். உலகம் முழுவதும் எனக்குத் தொடர்பிருக்கிறது' என்றுதான் பதில் வந்தது.
நேரே சம்பந்தப்பட்ட, அறிந்த, பழகிய விசயங்கள் மட்டில் இப்படியொரு பொய்யைச் சொன்னதையும் அதையே கேள்வியின்றி நிறுவியதையும் பார்த்துக்கொண்டு பேசாமலே இருக்க முடிந்தது. முல்லைத்தீவில் ஒரு சிறுவர் இல்லம் சுனாமியில் அகப்பட்டு அனைவருமே கொல்லப்பட்டதை, 'புலிக்காக வளர்க்கப்பட்டவர்கள் அழிந்தார்க்ள' என்று ஒருவித மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்ட ஊடகத்தின் தொடர்ச்சியாக்குமென்று நினைத்து விட்டாயிற்று.


மேற்படிச் செய்தியை உண்மையென்று நம்புவதாக நான் நினைக்கும் பொடிச்சி போன்றவர்களால் எந்தக் கேள்வியுமின்றி சிறிரங்கனின் கூற்றை நம்பமுடிவது சரியென்றால், நேரடி அனுபவத்தில் பொய்யென்று வலுவாகத் தெரிந்திருக்கும் என்போன்றவர்கள் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற அடைமொழியைப் போடக்கூடத் தகுதியில்லாமற் போயிற்றோ?

"காயடிக்கப்பட்ட போராளிகள், போராளிகளுக்குக் காயடித்தல்" என்று நானறிய இருமுறை சொல்லியுள்ளார். ஆனால் உந்த 'காயடிப்பு' எண்டதுல ஏதாவது உட்கருத்து, படிமம் எண்டு ஏதாவது கோதாரி இருக்கோ அல்லது நேரடியான அர்த்தம் தானோ எண்டு விளங்காததால (எனக்குக் கொஞ்சம் விளக்கம் குறைவுதான்.) அதைப்பற்றிக் கதைக்காமலே போறன்.

சிறிரங்கன் மட்டுமன்றி எந்தப் புலிவிமர்சகனையும நான் இதே கண்ணோட்டத்திற் பார்க்க வெளிக்கிட்டு பல மாதங்களாகிவிட்டன.
புலியை எதிர்த்துக் கருத்துச் சொல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதை வரவேற்கிறேன். ஆனால் ஏன் புளுகு மூட்டைகளை அவிழ்க்க வேண்டும். இது புலியெதிர்ப்புக் கருத்தாளிகளின் வங்குரோத்துத் தனத்தையல்லவா காட்டுகிறது?

தேனி போன்ற வடிகட்டின புளுகுத் தளங்களை விட வலைப்பதிவில் எழுதுபவர்களை நான் வித்தியாசப் படுத்தியே வைத்திருக்கிறேன். (தேனிக்கு எதிர்முனையில் நிதர்சனத்தை வைக்கலாமென்றாலும் நிதர்சனம் தேனியை நெருங்க முடியாதென்றே நினைக்கிறேன்)

"பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் உல்லாசமாகப் படிக்கிறார், அவருக்கு மகேஸ்வரன் தான் விசா எடுத்துக் கொடுத்தது" என்று ஒரு புளுகுப்பதிவு வருகிறது. அதில் ஒருவர், "அது பிழை, அவர் வன்னியில்தான் இருக்கிறார், போராளியாகவே இருக்கிறார்" என்று பதில் போட,
"அவர் வெளிநாடு போனாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அப்படிப் போகலாமா இல்லையா என்பதே இப்பதிவின் விவாதம்"
என்று ஒரு குத்துக்கரணம் அடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

சிறிரங்கனின் பதிவிலேயே, "வன்னியன் போன்றவர்களுக்கு மூளை சுகமில்லை, அவர்களைச் சரியானபடி எங்காவது காட்டி வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும் ,சிறிரங்கனுக்கும் இராகரனுக்கும் தான் மூளை இருக்கிறது, அவர்கள்தான் சிந்திக்கத் தெரிந்தவர்கள்" என்றும் ஒருவர் சொல்லிவிட்டு அதைப் பிறகும் வந்து நிறுவுவார்.

"பிரபாகரனின் மனுசி ஐரோப்பா சுற்றுகிறாள்" என்று இன்னொரு பதிவர்.
அண்மையில் கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது சம்பந்தமான பதிவொன்றில் ஒருவர்,
'சும்மா இருங்கோடாப்பா, அங்க பால்ராச்சை சுத்தி வளைச்சுப் போட்டாங்களாம். ஆள் தப்பிறது கஸ்டம்தான்' என்ற பாணியிற் சொல்லிவிட்டுப் போகிறார். தாங்கள் நடக்க வேண்டுமென்று நினைக்கும் சம்பவங்களை உண்மைபோல சிருஸ்டித்து அள்ளிவிட்டுக்கொண்டு போவார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் புளுகுகளை அவர்களே நம்பத் தலைப்பட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

பல சந்தர்ப்பங்களில் தேனி மனோபாவத்திலிருந்து மாற்றமில்லாத பதிவுகள் வரும். தேனி மனோபாவம் என்பதற்குப் பல காட்டுக்களைக் காட்ட முடியுமென்றாலும், சுனாமி நேரத்தில் புலிகளில் 2000 பேர் கொல்லப்பட்டனர் என்று தாங்களே உருவாக்கிச் செய்தி போட்டதும் தொடர்ச்சியா அதைச் சொல்லிக்கொண்டிருந்ததும், பிரபாகரன் இறந்துவிட்டாரென்ற கதையை அரசதரப்பே பின்வாங்கிவிட்ட நிலையிலும்கூட அது உண்மையென்று தொடர்ந்து சொல்லிவந்ததும், பிரபாகரன் நோர்வேத் தூதுவரைச் சந்தித்த பின்னும், தமிழ்ப் புத்திசீவிகளைச் சந்தித்து சுனாமி மீட்புப்பணி பற்றிக் கதைத்த பின்னும், "அது பிரபாகரன் இல்லை. அவரைப்போல ஒருவரை வெளிக்கிடுத்தித்தான் புலிகள் நாடகமாடுகின்றனர்" என்று தொடர்ந்து சொல்லும் மனோபாவத்தைச் சொல்லலாம்.

இவர்களில் யாராவது சிறிரங்கன் சொன்னதைப் போல ஒரு விசயம் சொல்லியிருந்தால் கட்டாயம் என்னிடமிருந்து கண்டனமும் ஆதரவும் வந்திருக்கும். ஆனால் 'இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு அல்லது அதே உணர்வோடுதான் அது வரும்.

மேற்கண்டவர்களில் இருந்து சிறிரங்கனை ஓரளவு தனித்துப் பார்க்கலாம்.
என் பார்வையில் பலநேரங்களில் குழப்பகரமான பார்வையைத் தருவார். ஒருவர் தான் இந்தப் பேரில் எழுதுகிறாரா என்று சந்தேகப்படும் அளவுக்குக் குழப்பங்கள் தருவார். அதாவது வாசிக்கும் பதிவைப்பொறுத்து உடனடியாகவே அதீத உணர்ச்சிவசப்பட்டு (ஆதரவாகவோ எதிராகவோ) கருத்துச் சொல்வார்.
ஒரேயொரு காட்டு:

ஒருமுறை walkman க்கு என்ன தமிழ்ச்சொல் சரிவரும் என்று டோண்டு அவர்களோடு விவாதம் தொடங்கி சில சொற்களைப் பரிசீலித்துக் கதைத்தார். பின்வந்த ஒரு நாளில் நட்சத்திரக்கிழமையில் வசந்தன் பதிவில் தனித்தமிழ் பற்றியும் புலிகளின் தமிழ்ப்படுத்தலை முழுதாக ஆதரித்தும் (ஓரளவு பரப்புரைப் பார்வையிலும்) எழுதப்பட்ட பதிவொன்றில்
"வசந்தன்,இது நீர்தாம் எழுதியதோ?உம்மிடம் இவ்வளவு காட்மான விசயமெல்லாமிருக்கோ?சும்மா படங்காட்டிவிட்டுப்போய்விடுவீரென நினைத்தேன்,ஆனால் நீர் பண்டிதனானாய். 1995இல் இதுபற்றி(தமிழ்ப்படுத்தல்)ஈழமுரசில் எழுதியுள்ளேன்.புலிகளின் தமிழ்ப்படுத்தலில் எனக்கும் உடன்பாடுண்டு.ரயிலுக்குத் தொடரூந்து எனும் வார்த்தை எவ்வளவு பொருத்தமாகவுள்ளது!இவை காலப்போக்கில் ஏற்கப்படும்."
என்று பின்னூட்டம் போட்டிருந்தார்.
நாலோ ஐந்தோ மணித்தியாலம் தான் கழிந்திருக்கும். கறுப்பி, சொற்களைத் தமிழாக்குவதையும், புலிகளின் தமிழாக்கத்தையும் நக்கலடித்து ஒரு பதிவு போட்டிருந்தார். உடனேயே அதில் சிறிரங்கன் பின்னூட்டம் போட்டார். முழுதும் கறுப்பிக்கு ஆதரவாக. அதில் வானொலி, தொலைக்காட்சி போன்ற சொற்களே தேவையற்றவை, நேரடியாக றேடியோ, ரெலிவிஷன் என்றே பாவிக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு வசந்தன் பதவில் வந்து மதிகந்தசாமி 'றேடியோ' என்று எழுதியிருந்ததைக் குறித்துக்காட்டி, 'பார்த்தீர்களா? றேடியோ எண்டுதான் சாதாரணமாகப் பாவிக்கிறோம். எணடபடியா வானொலி எண்டு சொல்லிறது தேவையில்லை. றேடியோ எணடே பாவிப்போம்' என்றார்.

walkman க்குத் தமிழ்ச்சொல் உருவாக்க விவாதம் நடத்தியவர், புலிகளின் தமிழ்ச்சொல்லாக்கத்தை ஆதரித்துப் பின்னூட்டம் போட்டவர், அதுபற்றி முன்பு ஈழமுரசில் எழுதியதாகச் சொன்னவர், சில மணித்தியாலத்தில் முற்றிலும் எதிர்மாறான கருத்தை - அதுவும் பல்லாண்டுகளாக வழக்கத்துக்கு வந்துவிட்ட வானொலியையும் தொலைக்காட்சியையும் தேவையற்ற சொல்லாக்கமென்று கறுப்பியின் பதிவிற் சொல்கிறார். இரண்டு பதிவிலும் இடப்பட்டவை அவரது கருத்துக்கள் என்பதைவிட இரு பதிவுகளும் அவருக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிகள் என்றுதான் சொல்லலாம்.

இதைவிட, தமிழ்மண -நந்தவன மாற்றத்தின் போது சிறிரங்கன் அடைந்த குழப்பம்; தொட்டதுக்கெல்லாம் தன் வலைப்பதிவை முடக்குகிறார்கள், தூக்குகிறாரகள், தனக்கெதிராகச் சதி செய்கிறார்கள் என்று பதிவுகள் போட்டது; பொடியன்கள் பிரச்சினையில் எல்லோரும் கோமாளிகளாகவும் நகைச்சுவையாகவும் கருதிக்கொண்டிருக்க சிறிரங்கன் மட்டும் குய்யோ முறையோ என்று குதித்தது; பின் டக்ளஸ் - இதயவீணை - பொடியன்கள் என்று ஒரு தொடர்பைக் கொண்டுவந்தது என்று பலவற்றுக்குள்ளால் இப்புரிதலைச் சொல்லிச் செல்லலாம்.

இவை சிறிரங்கனை இழுக்காகவல்ல. மாறாக இப்படியாகவற்றுக்குள்ளால் தான் சிறிரங்கன் பற்றிய என்போன்றவர்களின் புரிதல் தொடர்கிறதென்பதைச் சுட்டவே.

இப்படியாக நான் புரிந்து வைத்திருக்கும் சிறிரங்கனிடமிருந்து, (மற்றவர்கள் அப்படித்தான் புரிந்தார்களா என்று தெரியாது) வெளிவரும் எந்தக் கருத்தையும் இரட்டிப்புக் கவனத்தோடே எதிர்கொள்வேன், அது எனக்கோ என் தரப்புக்கோ ஆதரவானதென்றாலுங்கூட.
****************************

இங்கு நானெழுதிய எதுவும் சிறிரங்கனை மட்டந்தட்டவோ, கேலி செய்யவோ இல்லை. என்போன்றவர்களின் புரிதல் எப்படியாக இருக்கிறதென்பதைச் சுட்டவே. அதுகூட 'உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற ஒற்றைவரி பாவித்தவர்கள் மேல் சடுதியாக வைக்கப்பட்ட விமர்சனத்தாலேயே.

இதில் சிறிரங்கன் பொய் சொல்கிறார் என்றுகூடச் சொல்லத் தேவையில்லை. இத்தகவலில் இருக்கக் கூடிய தவறுகள், இயல்பாகவே சிறிரங்கனுக்கிருக்கும் சடுதியாக உணர்ச்சிவசப்படும், குழப்பமடையும் தன்மையால் வந்திருக்கக் கூடிய பயம் என்பவற்றையெல்லாம் ஒரு சகவலைப்பதிவர் யோசிக்கலாம். அதைவிட இயல்பாக இருக்கக்கூடிய சந்தேகங்களும் சேரும்.

இந்த நிலையில், சிறிரங்கனின் இரண்டாவது பதிவு வருவதற்கு முன்னர் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு ஒரு பதிவர் தன் கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதில் என்ன பெரிய தவறைக் கண்டீர்கள்? 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒப்பாரி வேறு. இப்படிக் கேட்டதுக்கூடாக சிறிரங்கனின் கூற்றுமீது நான் சந்தேகம் கொள்ளத்தக்க காரணங்களாகக் கருதியவை மட்டில், நீங்கள் சிறிரங்கனின் கூற்றுக்களை உண்மையென்று முழுமனதாக நம்புவதாக எடுத்துக்கொண்டு, உங்களிடம் அவைபற்றிக் கேட்டு, இறுதியில் 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒரு கேள்வியோடு முடிக்கலாம். சிறிரங்கன் மட்டுமன்றி அதே வகைகுள் நான் அடக்குபவர்களின் கருத்தையும் தூக்கிக்கொண்டு கேட்கலாமோ? அப்படியென்றால்,

"அண்மைக்காலத்தில் இராணுத்தாற் கொல்லப்படுபவர்கள், புலிகளாகவோ புலிகளின் செயற்பாட்டாளராகவோ அடையாளங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு தெரிந்தெடுக்கப்படடே கொல்லப்படுகிறார்கள்"
என்ற கருத்து முதற்கொண்டு நீங்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.
இப்படியே மாறிமாறி ஒராளை ஒராள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ?
****************************
இதில் சம்பந்தப்பட்டவர்கள் வலைப்பதிவுலகுக்குப் பழையவர்கள் என்றபடியால் சுட்டியெல்லாம் போட வேண்டியதாக நான் நினைக்கவில்லை.

Labels: , ,


Thursday, May 25, 2006

புலிகளின் இன்னொரு தளபதி இறப்பு.

நேற்று (24.05.06) புலிகளின் இன்னுமொரு முக்கிய தளபதி சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீரமணி எனப்படும் இவர் தவறுதலான வெடிவிபத்தில் சாவடைந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை புலிகளின் உயர்மட்ட தளபதியான கேணல் இரமணன் எதிரிகளால் பதுங்கிச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். புலிகள் இயக்கத்தில் கேணல் நிலையில் இறந்த நான்காவது தளபதி இவராவார். எனினும் பொதுவாக ஊடகங்களில் அதிகம் பிரபலமில்லாத தளபதி இவர்.

நேற்று தவறுதலான வெடிவிபத்தில் சாவடைந்த வீரமணி புலிகளின் முக்கியமான போர்த்தளபதி. நிறைய களங்கள் கண்டவர். நிறைய களங்களை வழிநடத்தியவர். ஓரளவு பிரபலமானவர். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவிற் கடமையாற்றி லெப்.கேணல் சேகரின் வீரச்சாவின்பின் அப்படையணிச் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டவர். வடபோர் முனையில் நடந்த பல சமர்களைத் தலைமை தாங்கி நடத்தியவர். சிறிலங்கா இராணுவத்தின் இறுதிப் பெருநடவடிக்கையான தீச்சுவாலையை முறியடித்த சமரில் முக்கியமான தளபதியாகச் செயற்பட்டவர்.
பின் வடமுனைப் போரரங்கின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்.

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் இளவயதிலேயே திறமைகளை வெளிப்படுத்தி உயர் நிலையை அடைந்தவர்.

குறிப்பிட்ட சில நாட்களுள் புலிகளுக்கு இரண்டாவது பெரிய இழப்பு.

இத்தளபதிகளுக்கு வீரவணக்கம்.

*******************
புதினத்தில் வெளிவந்துள்ள விவரம்:

கேணல் வீரமணி 1990 ஆம் ஆண்டு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் கைப்பற்றப்பட்ட தாக்குதல்,

1991 இல் வவுனியா சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்கள்,

ஆகாய கடல் வெளிச்சமர், மின்னல் எதிர்த்தாக்குதல், வன்னி விக்கிரம 1,2,3 எதிர் நடவடிக்கைகள்,

1992 இல் நடந்த கட்டைக்காடு சிறிலங்கா படைமுகாம் தகர்ப்பு தாக்குதல் வேவு நடவடிக்கை,

1993 இல் நடந்த தவளை நடவடிக்கைக்காக பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கைகள்,

1995 இல் நடந்த ராம்சக்தி எதிர்நடவடிக்கை,

திருகோணமலை படை முகாம்கள், காவல்துறை நிலையங்கள் மீதான தாக்குதல்கள்,

சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையில் வேவுப்பணி,

1997 கிளிநொச்சி படைமுகாம் மீதான வேவு நடவடிக்கைகள்,

மன்னார் படைமுகாம்கள் மீதான தாக்குதல்கள்,

ஜெயசிக்குறு எதிர்ச்சமர், வேவு நடவடிக்கைகள்,

1998 இல் நடந்த பரந்தன் கிளிநொச்சி படையினர் மீதான ஊடறுப்புத்தாக்குதல்,

ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை,

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கை,

1999 இல் வவுனியா படைநிலைகள் மீதான வேவு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.

லெப். கேணல் வீரமணி ஒயாத அலைகள் - 03 இல் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட்ட பகல் நேரத்தாக்குதலில் ஊடறுப்பு அணிப்பொறுப்பாளராக விளங்கினார்.

2000 ஆம் ஆண்டில் முகாவில் முன்னரங்க நிலைப்பொறுப்பாளராக செயற்பட்டார்.

ஆனையிறவுத் தளம் வெற்றிகொள்ளப்பட்ட தாக்குதலில் அணிகளின் பொறுப்பாளராக விளங்கினார். ஓயாத அலைகள் - 04 நடவடிக்கையிலும் முனைப்பாக வீரமணி செயற்பட்டார்.

அதன்பின் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதியாக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

தீச்சுவாலை முறியடிப்புச்சமரில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இறுதியாக நாகர்கோவில் களமுனைத்தளபதியாக லெப். கேணல் வீரமணி செயற்பட்டு வந்தார்.

Labels: , ,


Friday, May 12, 2006

வென்ற சமரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு.

இன்று மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாள இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமது மக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13.

1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம்; ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது.


ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப்படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்திலிருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப்பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள்.


போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. அதேநேரம் நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் நோக்கிய நகர்வு கேணல் ஜெயம் அவர்களின் தலைமையில் எதிர்கொள்ளப்பட்டது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர்.


கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறியபோதுதான் பெண்புலிகளின் பெயர்பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம்.

பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது.

சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது.

இந்நிலையில் இராணுவத்தளபதி மிக மோசமான செயலொன்றைச் செய்தார். மக்களுக்கான போக்குவரத்துப் பாதையை மூடிவிட்ட புலிகளுடன் பேரம் பேசினார். புலிகள் தங்கள் முன்னணி நிலைகளிலிருந்து 5 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றால் தாம் மக்களுக்கான பாதையைத் திறப்பதாகப் பேரம் பேசினார். சண்டையிட்டுப் பாதைபிடிக்க முடியாத இராணுவம் கேவலாமான நிலைக்கு இறங்கியது. இதுநடந்தது 1998 செப்ரெம்பர் மாதம். ஆனால் புலிகள் தெளிவாக மறுத்ததுடன், வேறொரு திட்டம் தீட்டினர்.

மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்று பெயரிட்டு இரவோடு இரவாக இரகசியமாய் நகர்ந்து சண்டையேதுமின்றி ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது சிறிலங்கா இராணுவம்.

றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள்.

முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997).
இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு.

இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல்.
இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு.

மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு.

நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும்.


2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?”
பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.
ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது.

இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம்.

இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான்.

இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள்.

வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது.

ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது.

ஜெயபாலனின் சொற்களில்,
"வன்னியில்
மயிர் பிடுங்க வந்தோரின்
தலை பிடுங்கி…."
வென்றவரின் கல்லறைகள் அவைகள்.

************************
ஜெயசிக்குறு நடவடிக்கை மீதான முதலாவது வலிந்த தாக்குதல் 10.06.1997 அன்று தாண்டிக்குளம் படைமுகாம் மீது நடத்தப்படட தாக்குதல். அத்தாக்குதல் வெற்றி நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.


************************
மேற்கண்ட பதிவு கடந்த வருடம் எழுதப்பட்டது. சில மாற்றங்களுடன் மீள்பதிவாக இடப்படுகிறது.

Labels: , , , ,


எங்கள் கடல் எங்களுக்கானது.

மே பதினோராம் திகதி சிறிலங்காக் கடற்படையினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை நிலைமை மோசமடைந்துள்ளது. அதேநேரம் தீர்க்கமான ஓர் அணுகுமுறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
சிறிலங்காக் கடற்படைக்குச் சொந்தமான இரு டோறாப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், 700 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கப்பலொன்று (கண்காணிப்புக் குழுவின் உதவியால்) தப்பியுள்ளது. இது சிங்கள அரசுக்கு விடுக்கப்பட்ட முக்கியமானதொரு செய்தி.

புலிகளுக்குக் கடலில் உரிமையில்லை என்று புதிதாக கண்காணிப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகள் பயிற்சி செய்யவோ கடற்பயணங்கள் செய்யவோ அவர்களுக்கு அனுமதியோ உரித்தோ இல்லையென்றும் சர்வதேச நடைமுறைகளின்படி கடற்பகுதி மீதான உரிமை அந்நாட்டுக்கே சொந்தமென்று அவ்வறிக்கை கூறுகிறது.

சர்வதேச நடைமுறைப்படி பார்த்தால், புலிகளுடன் பேசுவது கூடத்தான் இறைமைப்பிரச்சினை. அரச கட்டுப்பாட்டுப் பகுதி போலவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியையும் அங்கீகரிக்கும்போது கடற்பகுதியையும் அங்கீகரிக்கத்தானே வேண்டும்? மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புலிகளுக்கான கடல் தடையைப் பற்றி எந்தச் சரத்துமில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்றிலிருந்தே புலிகள் தங்களுக்கா கடலாதிக்கத்தைத் தெளிவாகச் சொல்லி வருகிறார்கள். அவ்வப்போது சலசலப்பு வந்தாலும் பிரச்சினை பெரிதாகாமல் அமுங்கிவிடும்.

அதைவிட சிறிலங்கா அரசும் கண்காணிப்புக்குழுவும் இவ்வளவுகாலமும் புலிகளின் கடல் இறைமையை அங்கீகரித்தே வந்துள்ளன. புலிகளின் படகுகள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் பயணித்துள்ளன. புலிகளின் பயணத்துக்கு கடற்பயணம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக (ரணில் பாராளுமன்றத்தில் தோற்கும்வரை) இருந்து வந்துள்ளது.
அதைவிட கண்காணிப்புக்குழுத் தலைவரும் சிலதடவைகள் கடற்புலிகள் கடலில் பயிற்சி செய்வது தொடர்பாக சாதகமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அப்போதெல்லாம் புலிகளுக்கிருந்த கடல் இறைமை இப்போது திடீரென இல்லாமற் போனதேன்?
****************************
புலிகளின் கடற்படையின் ஆதிக்கமுள்ள, கடற்பரப்பு உள்ளது. இதை இன்றுவரை சிறிலங்கா அரசும் ஒத்துக்கொண்டு புலிகளின் மறைமுகமான அனுமதியுடன்தான் தன் போக்குவரத்தைச் செய்துவருகிறது.
யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரும்வரைக்கும் முல்லைத்தீவுக் கரையிலிருந்து நூறு கிலோமீற்றர்களுக்குள் சிறிலங்காவின் கடற்படைக் கப்பல் தொடரணி சென்றதேயில்லை. புலிகள் திருகோணமலைத் துறைமுகத்தையும் தாண்டித்தான் கிழக்கிற்கான அவர்களது பயணங்களை மேற்கொண்டார்கள். அந்தப்பெரிய கடற்படைத் தளத்தைத் தாண்டிச் செல்லும் புலிகளின் கடற்படையை அவர்களால் அழிக்க முடிந்ததில்லை.

மாறாக யாழ்ப்பாணத்துக்கான படையினரின் வினியோகத்தை கடற்புலிகள் மிகமிக நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தனர். அடிக்கடி தொடரணி மீது தாக்குதலை நடத்துவது, சமயங்களில் பாரிய கப்பல்கைளத் தகர்ப்பது, சண்டைப்படகுகளைத் தகர்ப்பது என்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் மக்களைப் பயணக்கைதிகளாக வைத்து கப்பலில் இராணுவத்தினரை ஏற்றியிறக்கியது சிறிலங்காக் கடற்படை. 'City of Trinco' என்ற கப்பல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் யாழ்பபாண - திருகோணமலை மக்கள் போக்குவரத்துக்கென்று பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒருமுறை செஞ்சிலுவைச் சங்கக் கொடியைப் பறக்கவிட்டபடி 1300 இராணுவத்துடன் இக்கப்பல் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்றது. இடைவழியில் புலிகளால் வழிமறிக்கப்பட்டு அது மக்களின் போக்குவரத்துக் கப்பலென்று தாக்காமல் விடுவிக்கப்பட்டது. (பின் செஞ்சிலுவைச் சங்கம் இச்சம்பவத்தை ஒத்துக்கொண்டது).



ஆனையிறவுக்கான் மாபெரும் தரையிறக்கச் சண்டையின்போது கூட சிறிலங்காக் கடற்படையால் தரையிறக்கத்தைத் தடுக்கவும் முடியவில்லை, கடல்வழி வினியோகத்தை மட்டுமே நம்பியிருந்த தரையிறங்கிய அணிகளுக்கான வினியோகத்தையும் தடுக்க முடியவில்லை.

இப்படியிருந்தது தான் சிறிலங்காக் கடற்படை. (தயா சந்தகிரி பொறுப்பேற்றதன்பின் கொஞ்சம் முன்னேறி கடற்புலிகளுக்கு நிகரான நிலைக்கு இறுதிநேரத்தில் வந்திருந்தது சிறிலங்காக் கடற்படை. )

இப்படியிருந்த கடற்படை, இன்றுவரை சுதந்திரமாக முல்லைத்தீவைத் தாண்டிச் சென்று வருகிறது. அதுமட்டுமன்றி முல்லைத்தீவுக் கரைக்கே வந்து சேட்டை விட்ட காலங்களுமுண்டு. ஒப்பந்தம் கைச்சாத்தாகி கொஞ்சக் காலத்தின்பின் முல்லைத்தீவுக் கரையிலிருந்து இரண்டு மைல்வரைகூட வந்து மீனவருடன் சொறிந்துவிட்டுச் சென்றது சிறிலங்காக் கடற்படை டோறாக்கள். பலரைத்தாக்கியது. படகுகளை இடித்து மூழ்கடித்தது. முன்பெல்லாம் அறுபது, எழுபது கிலோமீற்றர்களுக்குள் நெருங்காதவர்கள் பின் கரைவரை வந்து சேட்டை விட்டனர். ஒரு கட்டத்தில் கடற்கரை வாழ் மக்கள், 'உடனடியாக யுத்தத்தைத் தொடங்குங்கள்' என்று புலிகளுக்கு மனு அனுப்பிய நிலைவரை வந்தது.



ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இன்றுவரை புலிகளின் மறைமுக அனுமதியுடன்தான் சிறிலங்காக் கடற்படை நடமாடுகிறது. அதாவது புலிகள் தாக்கமாட்டார்கள் என்ற உறுதிமொழியோடு புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக் கடலைப் பாவித்து வருகிறது.
ஆனால் புலிகளுக்கு இதுநாள்வரை அங்கீகரிக்கப்பட்டிருந்த போக்குவரத்து முறையை கண்காணிப்புக்குழுவும் அரசாங்கமும் மறுக்கிறது.
முதலில் கடல்வழிப் பயணத்தைச் செய்துவந்த புலிகளுக்கு அரசாங்கமே வான்வழியை ஒழுங்கு செய்து தந்தது. நீண்டகாலம் அதுதான் நடந்து வந்தது. பின் அவ்வழியை அரசாங்கம் மறுத்தபோது, புலிகள் தங்களது கடல்வழிப் பயணத்தைத் தொடர முடிவெடுத்தனர். அப்போது அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் இலங்கையின் போக்கு பெரும் சிக்கலுக்குள்ளானது.

இந்நிலையில் தாங்கள் கடற்பயணங்களை மேற்கொள்வோம் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டனர் புலிகள். அண்மையில் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்குமிடையில் இரு பயணங்களைப் புலிகள் மேற்கொண்டதும், இடையில் கடற்படை வழிமறித்தபோதும் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக பயணத்தை முடித்ததும் குறிப்பிடத்தக்கது.



புலிகளுக்கான போக்குவரத்து முறைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களைப் பேச்சுக்கு வா என்று சர்வதேசமும் சிறிலங்கா அரசாங்கமும் அழைக்கிறது. கிழக்குத் தளபதியோடு கலந்துரையாட ஏதுமில்லையென்ற நிலை இருந்தாலும்கூட புலிகள் அப்படியான சந்திப்பொன்றை ஏற்படுத்தவே முனைகின்றனர். அதன்மூலம் தமக்கான தடைகளிலிருந்து விடுபடுதல் அவர்களது நோக்கம்.

இந்நிலையில் சிங்களத்தரப்புக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழர் தர்பபிலிருந்து தெளிவான பதிலொன்று சொல்லப்பட வேண்டும்.

புலிகளுக்கான பயண வசதிகளை மறுத்துக்கொண்டு,
புலிகளுக்கான கடல் இறைமையை மறுத்துக்கொண்டு, சிங்களத்தரப்பு புலிகள் பகுதியூடாக எப்படிப் பயணம் செய்ய முடியும்?
புலிகளுக்கான கடல் இறைமை மறுக்கப்பட்டால்
சிங்களத்துக்கான கடல் இறைமையும் மறுக்கப்படும்.
புலிகள் கடலில் பயணம் செய்ய முடியாவிட்டால் சிங்களப்படையும் கடலில் பயணம் செய்ய முடியாது.
இந்தச் செய்தி உரத்துச் சொல்லப்பட வேண்டும். அதற்கான முதற்படியே இந்த கடற்படைமீதான தாக்குதல்.

தரையைப் போலவே கடலும் ஒரு பிரதேசம் தான். அதன்மீதான உரிமையும் இறைமையும் தரையைப் போலவே முக்கியமானது. என்ன விதப்பட்டும் அதன்மீதான ஆதிக்கத்தைத் தமிழர் தரப்பு இழந்துவிடக்கூடாது. இற்றை வரையான போராட்ட வெற்றிகளுக்கும் மீட்சிக்கும் கடற்பலமே முதன்மைக் காரணம். புலிகளைப் பார்த்துப் பயப்படுபவர்களும் அதன் கடற்பலத்தைத்தான் முதன்மைப்படுத்துகின்றனர்.

இதைவிடவும் சிறிலங்காக் கடற்படையை முடக்குவதற்கு முக்கிய தேவையொன்று இருக்கிறது. இன்று எடுத்ததுக்கெல்லாம் மக்களுக்கான போக்குவரத்துப் பாதையை மூடிவிடுகிறது இராணுவம். அதுமட்டுமன்றி அப்பாதையை வைத்துப் பேரம் பேசுகிறது இராணுவம். ஒரு கிழமைக்கு முன்னர், வவுனியா வழியாக யாழ்ப்பாணம் செல்லும் நெடுஞ்சாலையை மூடிவைத்துவிட்டு, நோர்வேத் தரப்பு ஊடாக புலிகளிடம் பேரம் பேசியது இராணுவம். அதாவது யாழ்ப்பாணத்தில் மக்கள் கதவடைப்பு, எழுச்சி நடவடிக்கைகளைக் கைவிட்டால் தாம் பாதையைத் திறப்பதாக புலிகளுடன் பேரம் பேசியது இராணுவம். பாதை மூடியது தெளிவான யுத்தநிறுத்த மீறல் என்பதைவிட, அந்தப் பேரத்துக்கு நடுநிலையாளர்கள் தூது போனதுதான் ஆச்சரியம். புலிகளின் தெளிவான மறுப்புக்குப்பின் பாதையைத் திறந்துவிட்டார்கள்.

இந்நிலையில் சிங்கள இராணுவத்தின் கேவலமான இன்னொரு பேரம் பேசல் ஞாபகம் வருகிறது.
1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம். ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையை திடீரென மூடிவைத்தார் அப்போதைய இராணுவத்தளபதி லயனல் பலகல்ல. மூடிவைத்துவிட்டு அவர் பகிரங்கமாகப் பேரம் பேசினார். என்ன பேசினார் தெரியுமா?
"புலிகள் அப்போதைய தங்கள் நிலையிலிருந்து 5 கிலோ மீட்டர்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்."
அடப்பாவி!
ஜெயசிக்குறு என்று பெயரிட்டு யாழ்ப்பாணம் வரையான பகுதியைப் பிடிப்பதுதானே உங்கள் இலக்கு?

நீங்கள் சண்டை பிடித்துக் கைப்பற்ற வேண்டியதை, இப்படி மக்களைப் பகடைக்காயாக்கி புலிகளிடமிருந்து இனாமாகப் பெற்றுவிடலாமென்று முடிவெடுக்க உங்களுக்கெல்லாம் வெட்கமேயில்லை.
ஆனால் புலிகள் இணங்கவில்லை. அந்தப் பேரம் நடந்துகொண்டிருந்தபோதே 'ஓயாத அலைகள் -2' என்று பெயரிட்டு கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இப்படி மக்களின் போக்குவரத்துப் பாதையை மூடி பேரம் பேசுவது இராணுவத்துக்கு வழக்கமாகிவிட்டது. இன்றும் அதைத் தொடர்ந்துகொண்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் மக்களுக்கான போக்குவரத்தை நிறுத்திப் பேரம் பேசுவதற்குச் சரியான மாற்று, புலிகளின் கடற்பகுதியூடான சிங்களக் கடற்படையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான். எங்கே வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.

*******************************
கண்காணிப்புக் குழுவினர் சிங்களப் படையினருக்குப் பாதுகாப்பாக வலம் வருவது தொடர்பாக புலிகள் கேட்ட கேள்வி நியாயமானதே. கடற்படையினருடன் அவர்களின் கலங்களில் பயணம் செல்ல வேண்டாமென்றும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென்றும் கண்காணிப்புக்குழுவுக்கு ஏற்கனவே புலிகள் எழுத்து மூலம் அறிவித்துவிட்ட நிலையில் தொடர்ச்சியாக கண்காணிப்புக் குழுவினர் கடற்படையினருக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புலிகளின் அடுத்த கடற்பயணத்தில் (அனுமதியற்ற பயணம்) தங்கள் படகுகளில் தங்களுக்குப் பாதுகாப்பாக வரும்படி கண்காணிப்புக் குழுவைப் புலிகள் கேட்டிருக்கிறார்கள்.
***************************


உரத்துச் சொல்வோம், எங்கள் கடல் எங்களுக்கானது.

Labels: , , ,


கடலில் நடந்த கலவரம்

மே மாதம் பதினோராம் திகதி தமிழக சட்டசபைத் தேர்தல் ஆரவாரங்களுக்குள் தமிழீழக் கடலில் ஓர் ஆரவாரம் நடந்து முடிந்திருக்கிறது. சிறிலங்காக் கடற்படை மீது புலிகளின் தாக்குதலில் இரு டோறா படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதுகூட அவ்வளவு முக்கியமன்று. ஆனால் அதைத்தொடர்ந்து வந்த செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ 400 பேர்வரையான (பின்னர் இது 700 பேர் என்று தகவல் வந்துள்ளது) இராணுவத்தினருடன் ஒரு கப்பலைப் புலிகள் சுற்றிவளைத்துள்ளனர் என்ற செய்தி பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களாலும் சொல்லப்பட்டன. பின்னர் அக்கப்பல் பன்னாட்டுக் கடலுற்பகுதி நேர்ககித் தப்பி விட்டதாகச் செய்திகள் வந்தன. புலிகள் தரப்புச் செய்தியும் அப்படித்தான் சொல்லிற்று.

தப்பிச் செல்லல் பற்றி வெளிவந்த செய்திகளின் படி பார்த்தால் ஏதோ உட்குத்து (நன்றி குழலி மற்றும் வலைப்பதிவுகள்) இருக்கும் போல் தெரிகிறது.
ஒன்றில் புலிகளே தப்பிச் செல்ல விட்டிருக்க வேண்டும். அல்லது உடனடியாகவே பல அழுத்தங்கள் புலிகள் மேல் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன இருந்தாலும் 700 இராணுவத்தினருடன் ஒரு கப்பலைத் தகர்ப்பதென்பது உலகளவில் பாரதூரமான விசயம். யாழ்ப்பாணத்தைப் புலிகள் நெருங்கிய 2000 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடந்தது நினைவுக்கு வருகிறது.


இதைவிட புலிகளின் சண்டைப்படகுகளினதும் அந்தக் கப்பலினதும் வேகத்தைக் கருத்திற்கொண்டால் தப்பிச் செல்லல் சாத்தியமேயற்றதென்று உணரலாம்.
அதைவிட, தம்மீது கடற்படை தாக்கியதாலேயே தாம் திருப்பித்தாக்கியதாகப் புலிகள் சொல்கின்றனர். புலிகள் தரப்பில் நாலு பேர் பலியாகியதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். அதாவது தற்காப்புத் தாக்குதலில்தான் இரு டோறாப்படகுகளும் தாக்கப்பட்டன என்பது புலிகளின் வாதம். இந்நிலையில் கப்பலைச் சுற்றிவளைப்பதோ கைப்பற்றுவதோ தகர்ப்பதோ பெரிய விசயமாகிவிடும்.

அல்லது, கப்பல் சுற்றிவளைக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது புலிகளுடன் பாதுகாப்புக் கலங்கள் மோதும்போதே ஏனைய பாதுகாப்புக் கலங்களுடன் கப்பல் அழ்கடல் நோக்கிச் சென்றிருக்க வேண்டும். இந்நிலையில் கப்பல் சுற்றிவளைக்கப்பட்டது என்ற கதை மிகையானது. பார்க்கப்போனால் இதுதான் உண்மைபோலுள்ளது. ஆழ்கடலுகுச் சென்ற கப்பலுக்கு இந்தியப்படை உதவிக்கு வந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இவை நடந்தபின் வழமைபோல (இது யுத்தம் நடந்த காலத்து 'வழமைபோல'. கிட்டத்தட்ட யுத்தம் தொடங்கி விட்டதை உணர்த்துகிறது) சம்பந்தமில்லாமல் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அரசபடை. கிளிநொச்சியில் வந்து மூன்றுமுறை வான்தாக்குதலைச் செய்துள்ளதுடன் கிழக்கில் எறிகணைத்தாக்குதலையும் நடத்தியுள்ளது. இதில் கிளிநொச்சியில் வான்படைத்தாக்குதல் நடந்தது முக்கியமானது. என்னதான் போலியானதென்றாலும் உலகுக்கு கிளிநொச்சிதான் புலிகளின் தலைமையகம். ஆக, புலிகளின் தலைமையகம் மீதே அரசபடை வான்தாக்குதல் நடத்திவிட்டது. (ஏன் கிளிநொச்சியில் நடத்தாமல் திருமலையில் வான்தாக்குதல் நடத்தப்பட்டது என்று கொஞ்சா நாட்கள் முன் யாரோ குழம்பியது போலிருந்ததே?)



வழக்கம்போல கண்காணிப்புக்குழு புலிகளின் கடல் நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கைவிட்டுள்ளது. புலிகளும் பதில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கடலில் கடற்படை மீதான தாக்குதலை மட்டும் கண்காணிப்புக்குழு கண்டித்ததையும், அதைத்தொடர்ந்து அரசபடை மக்கள் குடியிருப்புக்கள் மீது மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்திய வான், தரைத்தாக்குதல்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையென்பதையும் சுட்டிக்காட்டிய புலிகள், கண்காணிப்புக்குழு பக்கச்சார்பாக நடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடற்படை மீது தாக்குதல் நடந்தபோது அக்கலங்களில் கண்காணிப்புக் குழுவினரும் இருந்ததாகச் செய்திகள் வந்துள்ளன. அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் கண்காணிப்புக்குழு காட்டமான அறிக்கை வெளியிட்டது. ஆனால் புலிகள் தரப்போ, ஏற்கனவே பலமுறை, கண்காணிப்புக் குழுவினரை கடற்படையினரின் கலங்களில் பயணிக்க வேண்டாமென்று அறிவுறுத்தியதாகச் சொல்கிறது, கண்காணிப்புக்குழுவும் புலிகளால் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஒத்துக்கொண்டது.

கண்காணிப்புக்குழு கடற்படையினரின் கலங்களில் பயணிப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்குடனே என்று சொல்லும் புலிகள், தாங்கள் கடற்பயணங்கள் மேற்கொண்டபோது அவ்வாறான பாதுகாப்பு ஏதும் கண்காணிப்புக்குழுவால் தரப்படவில்லையென்கின்றனர். எனவே படையினருக்கும் கண்காணிப்புக்குழு பாதுகாப்பு வழங்கக் கூடாதென்று சொல்லும் புலிகள், தங்கள் நடவடிக்கைகளில் கடற்படை குறுக்கிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்பதைப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்படியான சந்தர்ப்பங்களில் சேதங்களைத் தவிர்க்கும் முகமாக கடற்படையினரின் கலங்களில் கண்காணிப்புக் குழுவினரைப் பயணிக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனாலும் கண்காணிப்புக்குழுவினர் தொடர்ந்தும் கடற்படையினரது கலங்களில் பயணம் செய்து வந்துள்ளனர்.

******************************
இவை பற்றி எனது கருத்துக்களை அடுத்த பதிவாக விரிவாக எழுதுகிறேன்.

இப்போது ஒரு பாடலைக் கேளுங்கள்.





படங்களுக்கு நன்றி: அருச்சுனா

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]