Sunday, February 20, 2005

உண்மையின் எண்ணங்கள்...

வணக்கம்!
யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் வன்னியே விடுதலைப்போராட்டத்தின் அச்சாக இருந்து வருகிறது. அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை வன்னியே முதன்மைப் போர்க்களமாகவும் இருந்து வந்துள்ளது. அதன் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தமிழர் விடுதலைப்போராட்டத்தின் முக்கியமான அம்சங்கள். ஏறக்குறைய அனைத்து வெளித்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு கடுமையான பொருளாதாரத்தடை, மருந்துத்தடை என்பவற்றோடு போராடி நமிர்ந்த நிலமது. அத்தகைய காலகட்டத்தில் செய்திஊடகங்களின் பாராமுகம் வேறு தமிழரைச் சினக்க வைத்தது. பி.பி.சி. உட்பட பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் வன்னியின் நிலைமைகளை இருட்டடிப்புச் செய்தோ திரிபுபடுத்தியோ செய்திகள் வெளியிட்டன. இலங்கை வானொலியின் தரவை வைத்துக்கொண்டு சொல்லும் செய்தி வேறு எத்தகையதாயிருக்கும்? இந்த நேரத்தில்தான் வெளிநாடொன்றிலிருந்து எமது செய்திகளை எம்மிடையே நடப்பவற்றைத் தெரிவிக்க வானொலியொன்று செயற்பட்டு வந்தது. அதுதான் “வெரித்தாஸ்” வானொலி.

“உண்மை ஓங்குக” என்ற மகுட வாக்கோடு வரும் அவ்வானொலி ஈழத்தமிழர் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டது. அத்தனைத் துன்பத்துள்ளும் இரவு 7.30 க்கு வானொலிக்கருகில் கூடிவிடும் கூட்டம். வானொலி கேட்க மின்கலம் இல்லை. சைக்கிள் டைனமோவைச் சுற்றி வானொலி கேட்கும் வழக்கமே அன்று இருந்தது. புலிகளின் குரலும் வெரித்தாஸ் வானொலியும் கேட்பது அம்மக்களுக்கு இன்றியமையாத ஒரு செயற்பாடு.

செய்திகளில் உண்மையும் நேர்மையும் கொண்டிருந்த அவ்வானொலியின் ஏனைய நிகழ்ச்சிகளும் தரமானவையே. குறிப்பாக சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் “உண்மையின் எண்ணங்கள்” கேட்பதற்கு ஆவலோடு இருப்போம். அவ்வானொலியின் பணிப்பாளர் அருட்திரு ஜெகத் கஸ்பர் அவர்களின் கம்பீரக் குரலும் அவ்வசீகரத்துக்குக் காரணம். அவரின் நேர்மையும் கண்ணியமும் என்னை மட்டுமல்ல அனைத்து மக்களையும் கவர்ந்தது. தான் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையைக் கூட அவர் விமர்சிக்கத் தவறவில்லை. அவ்வானொலி வன்னிச் சிறுவர் சிறுமியர்களுக்கென சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி புலம் பெயர்ந்த தமிழரிடம் நிதி திரட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரனையுடன் அருட்திரு கருணரத்தினம் அடிகளாரின் மூலமாக செய்த தொண்டு காலத்தால் மறக்க முடியாதது. அச்சிறுவர்களைப் பற்றியதும் அப்போதைய வன்னி நிலைமை பற்றியதுமான அவரது பேச்சுக்கள் உணர்ச்சிமயமானவை.

யுத்த நிறுத்தத்தின் பின் அவர் வன்னிக்கு வந்திருந்தார். பல இடங்களையும் பார்வையிட்டார். விடுதலைப்புலிகளின் வரி சேகரிப்பு முறை பற்றி ஒரளவு விமர்சனமும் அவர்களின் சோதனை முறைபற்றி அதிருப்தியும் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையானவர். ஜெகத் கஸ்பார் அடிகளார் என்றால் எம்மக்களுக்குக் கொள்ளைப் பிரியம். அவர் வெரித்தாஸ் பணிப்பாளர் பதவியிலிருந்து மாற்றலானபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர் எம்மக்கள். அவரைப் பற்றியும் அவரது வெரித்தாஸ் ஆற்றிய பங்கு பற்றியும் ஏராளமாகச் சொல்லலாம்.

இங்கே நான் அவரைப்பற்றியும் வெரித்தாஸ் பற்றியும் கூற வந்ததன் நோக்கம் வேறு. அதற்கான தேவையொன்று வந்துவிட்டது. காஞ்சி பிலிம்ஸின் பதிவிலே அவரைப் பற்றி எழுதப்பட்ட அவதூறான பிரச்சாரத்தைப் பார்த்தபின் சும்மா இருக்க முடியவில்லை. அப் பதிவுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேணுமா என்று யோசித்ததுண்டு. எனினும் தாங்கமாட்டாமல் இப்பதிவை எழுதுகிறேன்.

//அந்த பாதிரியாரின் இஷ்ட உணவு பற்றி ஒரு பிலிப்பைன்ஸ் நன்பர் கூரியது. 15முதல் 17 நாட்கள் அவயம்(அடைகாப்பது)வைத்த கோழி முட்டையை சுடுதண்ணீரில் இட்டு வேகவைத்து உரித்து பின்னர் உண்பது தான். அதாவது முழுவதுமாக முட்டையினுள் குஞ்சு வளர்ந்த நிலைஇ அதே நேரத்தில் அந்த பிஞ்சு ஜீவணுக்கு உரோமம்(இறகுகள்) முளைதிறுக்காது. //

இப்படி எழுதுகிறார் அந்தக் காஞ்சி பிலிம்ஸ். எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு. நானறிந்த அப்பாதிரியார் அப்படியில்லை என்று என்னால் அடித்துக் கூறமுடியும். ஈழத்தமிழர்கள் அறிந்த ஜெகத் கஸ்பார் அடிகளும் அப்படியில்லை. இதை எழுதியவருக்கு முதலில் முட்டை அடை வைத்துப் பழக்கமிருக்கிறதா தெரியவில்லை. (அடை வைத்து குஞ்சு உருவான முட்டையொன்றை 17 நாட்களில் உடைத்துப் பாரும் அது எப்படியிருக்கிறதென்று.) இடிஅமீன் மனித மாமிசம் சாப்பிட்டான் என்ற தொனியில் சொல்லியிருக்கும் அவரது சொற்றொடர் அருவருக்கத்தக்கது. மாமிசம் உண்பதே பிழையென்று கூறுவது வேறுவகை. ஆனால் கோழி உண்பது பிரச்சினையில்லை, 17 நாள் அடைகாத்து வந்த குஞ்சு உண்பதுதான் பிரச்சினை (அவர் சொல்லும் கதை உண்மையென்று ஒரு பேச்சுக்கு எழுத்துக்கொண்டால் கூட )என்று சொல்ல வருகிறாரா? அபாண்டமாக இப்படி ஒருவர் மேல் பழிபோடுவதன் மூலம் என்ன சாதிக்க முயல்கிறார்?

அடுத்து ஒரு விடயமும் சொல்கிறார். தனது பணத்திலிருந்து 80 இலட்சம் வரை செலவழித்தேன் என்று ஜெகத் கஸ்பார் சொல்லியுள்ளார். அது பற்றிக் கேள்வி கேட்பது சரி. எப்படி ஒரு பாதிரியாருக்கு 80 இலட்சம் வந்தது என்பது சர்ச்சைக்குரியதுதான். பாதிரியாரொருவர் தனிப்பட அப்படிப் பணம் வைத்திருக்க முடியாதுதான். அவர் தமிழ் மையம் என்ற ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். அந்தப் பணம் அவ் அமைப்புக்குரியதாயிருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை அவர் பகிரங்கமாய் வெளியிட்டதால் அவர் சார்ந்த திருச்சபைக்குக் கூட பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். அதைவிட வருமான வரித்துறை என்ன செய்கிறது? கறுப்புப் பணம் வைத்திருப்பவன் எப்படி அதைப் பகிரங்கமாகச் செலவு செய்து கணக்கும் காட்டுவான்? சரி அந்த 80 இலட்சம் பற்றிக் கேள்வி கேட்பது சரிதான். ஆனால் அதுபற்றி அவர் கூறுகிறார்:

//ஒரு பாதரியாரான இவருக்கு என்பது லட்சம் எங்கிருந்து வந்தது. வெரித்தாஸ் வானொலியில் கிடைத்த சம்பளப் பணமா? அல்லது ஈழத்து ஆதரவற்ற பிஞ்சு முகங்களை ஐரோப்பிய தமிழ் தொலைக் காட்சிகளில் காட்டி திரட்டிய கருப்புப் பணமா?//

இவர் என்னவும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் ஈழத்துப் பிஞ்சு முகங்களுக்கு அவர்காசு சேர்க்கும்போது அள்ளிக்கொடுத்த மக்களுக்கு இதன்மூலம் இவர் காட்ட விரும்பும் பூச்சாண்டி என்ன? கறுப்புப் பணமென்று எதைச்சொல்கிறார்?

ஏன் வெளிநாடுகளில் போய் இசையமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். எனக்கும் அந்தக் கேள்வியுண்டு. ஆனால் அதற்கு இளையராஜா “அவர்களின் (வெளிநாட்டு இசைவல்லுநர்களின்) நேரந்தவறாமை, பொறுப்புணர்ச்சி என்பனவே காரணம்” என்று கூறுகிறார்.

திருவாசம் இசையமைத்தது பற்றி எனக்கு எந்த எதிர்க்கருத்தோ ஆதரவுப் பார்வையோ இல்லை. ஆனால் ஒரு சினிமாப் படம் எடுப்பதை விட அல்லது பார்ப்பதை விட இது உயர்ந்ததாக எண்ணுகிறேன். அவ்வளவே.

அவர் சாதிபற்றியும் காஞ்சிமடம் பற்றியும் இந்துமதம் பற்றியும் எழுதிவரும் பதிவுகளைப்பற்றி எனக்கு எந்தக் கருத்துமில்லை. அது எனக்குப் புரியாத விசயமும் கூட. அதை விமர்சிக்க வேண்டியவர்களும் பேசாமலிருப்பதாகவே படுகிறது. தான் சொல்வதெல்லாம் சரி என்று அந்நபர் தொடர்ந்து செய்யக் கூடாது என்பதற்காகவே என்தரப்பிலிருந்து இப்பதிவு.

***காஞ்சி பிலிம்ஸின் பதிவையே அப்படியே படியெடுத்துத் தடித்த எழுத்தில் ஒட்டியுள்ளேன். அதில்வரும் எழுத்துப்பிழைகளுக்கு நான் பொறுப்பல்லன்.

Labels: ,


Friday, February 18, 2005

அவசர உதவி...

முந்தி (90 இன் ஆரம்பத்தில்) யாழ்ப்பாணத்தில சிங்கள அரசு குண்டு போடுறதுக்கு Y-08, Y-12 எண்ட விமானங்கள பயன்படுத்தினது. அதுகள் போடும் குண்டுகள் வித்தியாசமாயிருந்தது. மனிசரக் கொல்லுறது, பயப்படுத்திறது மட்டுமில்லாமல் வேற அரியண்ட வேலையளையும் அந்தக் குண்டுகள் செய்யும். மலம் அள்ளியந்து கொட்டுறான் எண்டு அப்ப சனம் கதச்சது. நானும் ரெண்டு மூண்டு முற அதுக்க மாட்டுப்பட்டிருக்கிறன். நாத்தமெண்டா அப்பிடித்தான் ஒரு நாத்தம். ஆனா அது உண்மையில மலமோ இல்லாட்டி அப்பிடி நாத்தம் தாற இரசாயனம் ஏதும் கலந்து குண்டு செய்யிறவனோ தெரியேல. ஆனா தாங்கேலாத அவஸ்தை.

இப்ப என்ர சந்தேகத்துக்கு வாறன். அந்த குறிப்பிட்ட ரெண்டு விமானத்துக்கும் எங்கட சனம் "சகடை" எண்டு பேர் வச்சுதுகள். (சின்னச் சகடை, பெரிய சகடை). ஏன் அந்தப்பேர் வந்தது எண்டு இண்டை வரைக்கும் தெரியாது. ஏதாவது காரணம் இருக்கத்தான் வேணும். ஆனா அதப்பற்றி அப்பவும் சரி அதுக்குப்பிறகும் சரி ஆராயவேயில்லை. இப்ப இந்தப் பேர் ஆராய்ச்சிக்கு அவசியம் வந்திட்டுது. நேற்றுப் பாத்த திருப்பாச்சி படத்தில "சனியன் சகடை" எண்டு வில்லனொருவன் வாறான். (வாற வில்லனுகளுக்குள்ள முதன்மை வில்லன் அவன்தான்) அவனுக்குப் பாருங்கோ அந்த "சகடை" எண்ட பேர் பாவிச்சிருக்கிறாங்கள். அந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம் எண்டு அறிய ஆவலாயிருக்கு. வில்லனுக்கு வச்சபடியா அந்தச் சொல்லிண்ட விளக்கமும் எங்கட சனம் விமானத்துக்கு வச்ச பேரின்ர விளக்கமும் ஒத்துப்போகலாம். சகடை எண்ட சொல் தமிழ்நாட்டிலயும் பாவிக்கினம் எண்ட உடன அதப்பற்றியறியிற ஆவல் வந்திட்டுதுங்கோ.

இப்ப இது அவசரமான, அவசியமான (தலைப்புப் பொருந்தீட்டுது தானே) ஆராய்ச்சியா இருக்கிறதால வலைப்பதியும் மொழியறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் (வலைப்பதியிற எல்லாருமே இதுக்குள்ள அடக்கம்) இதுக்கு உதவ வேணுமெண்டு கேக்கிறன். படம் போட்டு ஆராய்ச்சி பண்ணுற ஆக்களும் தான். (என்ன அவசரமெண்டு ஆரென் கேட்டா இதுசம்பந்தமா புத்தகமொண்டு எழுதிறன் எண்டு சொல்லலாம்).

நன்றி.
-வன்னியன்-

Labels: ,


Wednesday, February 16, 2005

மன்மத பாணம்...

வணக்கம்!
மன்மதராசா பற்றி கறுப்பி எழுதியதும் பதிலாக பெயரிலி எழுதியதும். கறுப்பியின் பதிவில் பின்னூட்டம் இடப்போன நேரத்தில் அதுகொஞ்சம் நீண்டு விட்டதால் இங்கே தனிப்பதிவாக அதை இடுகிறேன். (மன்மதன் திரைப்படத்தை விட ஈழத்துப்பாடல்கள் ஆபத்தானவை என்கிற ரீதியில் கறுப்பி எழுதியிருந்தார்.)

கேட்பதன் மூலமும் பார்ப்பதன்மூலமும் அடையும் தாக்கத்திற்கிடையில் வித்தியாசமுண்டா? பின்னையது சற்றுக் கூடுதலான தாக்கத்தைத்தரும் என்றே நினைக்கிறேன். சமமானதுதான் என்றே எடுத்துக்கொள்வோம், அதெப்படி பாடல்கள்மூலம் ஏற்படும் தாக்கம் படங்கள் மூலம் இல்லாமற்போகும். ஒன்றில் இரண்டுமே அவர்களுக்கு விளையாட்டாய் இருக்கும். அல்லது இரண்டுமே தாக்கத்தை விளைவிப்பவையாயிருக்கும். இரண்டுமே சிறுவர்களால் புரிந்து கொள்ளப்பட்டால் ஏற்படும் தாக்கம் வித்தியாசமானது. கறுப்பி சொல்வதுபோல் பாடல்களைக் கேட்பதால் சிறுவர்கள் ஆயுதம் தூக்கினால் அது ஈழத்திலேதான். (புலம் பெயர்ந்த நாட்டிலல்ல) ஏனென்றால் பாடல்களில் தெளிவாகவே சொல்லப்படுகிறது யாரைக் கொல்ல வேண்டுமென்றும் எங்கே தூக்க வேண்டுமென்றும். இன்னொரு விசயம், கறுப்பி சொல்லும் கலாச்சாரத்திலிருந்து (This is my mom’s boy friend) ஒருவன் பாடல்களைக் கேட்டு ஆயதம் தூக்குவது சாத்தியப்படுமா? ஆயதம் தூக்க அவ்வளவு காரண காரியங்கள் இருந்தும் யாருமே ஈழத்தில் பாடல்களை மட்டும் கேட்டு ஆயதம் தூக்கியதில்லை. (பாடல்கள் ஓர் உந்துசக்தியே தவிர அதுமட்டுமே காரணியாகமுடியாது). ஆனால் படங்களில் சொல்லப்படும் வன்முறைக்கான காரணிகள் அவர்களின் காலடியிலேயே நடப்பவை. எங்குமே அவை சாத்தியப்படக்கூடியவை.

இரண்டுமே தவறு, இரண்டையுமே தடைசெய்ய முயற்சிக்க வேண்டுமென்று கூறுவது ஒருவகை. ஆனால் மன்மதன் பிரச்சினையில்லை, ஈழத்துப்பாடல்கள்தான் பிரச்சினை அவற்றைத் தடைசெய்ய முயற்சிக்க வேண்டுமென்று கூறுவது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. தரமிழந்த சினிமாப்பாடல்களைக் கூடத்தான் சிறுவர்கள் பாடி ஆடுகிறார்கள். இவர்கள் கல்யாணம் கட்டிக்கொண்டு ஓடிப்போகப்போகிறார்கள் என்று எவர் கவலைப்பட்டார்? ஆயுதம் தூக்கி வங்கி கொள்ளையிடவோ வழிப்பறி செய்யவோ இன்னும் என்னென்னவெல்லாமோ செய்யத் தூண்டும் சூழலை விட (திரைப்படங்கள் உட்பட) ஈழத்துப்பாடல்கள் ஆயுதம் தூக்க உந்துகிறது எனச்சொல்வது கேலிக்கிடமானது.
அட! விடுதலைப்புலிகளுக்கும் கூடவா இது பிடிபடாமற்போனது. பேசாமல் காசு தரச்சொல்லி நிறையப்பாட்ட வெளியிட்டா இப்ப குடுக்காட்டியும் அந்தப்பாட்டக் கேட்டு வளருற பிள்ளையள் பின்னொரு காலத்தில அள்ளியள்ளிக் குடுப்பினமெல்லே.

Labels: ,


அப்பா துவக்குச் செய்வார்...

வணக்கம்!
இப்போது நான் எழுதப்போவது எனக்கு ஏற்பட்ட அனுபவமும் அதுசார்ந்த சிந்தனைகளும். (அனுபவம், சிந்தனை என்றவுடன் ஏதும் முக்கியமாகவோ பயன்பாடானதாகவோ இருக்குமென்று எண்ணி விட்டால் அதற்கு நான் பொறுப்பல்லன்)

ஒருக்கா புதுக்குடியிருப்பில (இது வன்னியில் இருக்கும் ஒரு பிரதேசம்) எங்கட வீட்டில படம் ஓடினது. எங்கட சனம் படமோடுறது எண்டாத் தெரியுந்தானே எப்பிடியெண்டு. நாலு படம் ஒரே இரவில ஓடும். ஏன் பகலில ஓடலாந்தானே எண்டு நானும் யோசிச்சிருக்கிறன். ஆனா ஏன் அப்பிடி ஓடுறேல எண்டு எனக்கு இதுவர விளங்கேல. இருட்டில படம் பாக்கிறதெண்டது அப்பிடி ஊறிப்போச்சு. அனேகமா படம் முடியேக்க விடிஞ்சிடும். அடிபாடுகள் வந்தா எழுப்பி விடு எண்டுவிட்டு படுக்கிற பெடிபெட்டையள் (பெட்டையள் எண்டதால ஆருக்கும் கோவம் வருதோ?) பிறகு எழும்பிறதேயில்ல. பாட்டுக்காட்சியள் பாக்கிற கோஸ்டியள் பாடு பரிதாபம். அனேகமான படங்கள் பாட்டுக்காட்சிகள் இல்லாமல்தான் இருக்கும். ஒரு வீட்ட படமெண்டா கிட்டத்தட்ட அந்தக் குறிச்சியில இருக்கிற எல்லாரும் பாக்க வந்திருப்பினம்.

சரி, விசயத்துக்கு வாறன். அண்டைக்கு முதல்படமா சேரனின் "தேசியகீதம்" படம் போட்டாங்கள். (அதில ரம்பா ஆடுற ஆட்டம் வெட்டுப்படேல) அதில ஒரு கட்டத்தில முரளியும் அவற்ற சகாக்களும் முதல் மந்திரிய கடத்திறதுக்குப் போவினம். அப்ப முதல் மந்திரியின்ர பாதுகாப்புக்கு நிப்பினமே, கறுப்புப் பூனையளெண்டு அவயள சொல்லுறது, அவயள் வச்சிருக்கிற ஆயுதங்களப் பாத்த எங்கட வட்டனொண்டு சொல்லிச்சு “ஐ… எங்கட அப்பா இத விட நல்ல வடிவா துவக்குச் செய்வார்.” (அப்பாடி ஒரு மாதிரி தலைப்பு வந்திட்டுது)

அதுக்குப்பிறகுதான் நானும் அந்தக் காட்சிய உத்துப்பாத்தனான். அவனின் நையாண்டி புரிந்தது. பார்வைக்கு துவக்குப் போல் (கொமிக்ஸ் கதைகளில் வருவதைப்போல) ஏதோவொண்டை வச்சிருந்தீச்சினம். நிச்சயமாய் நாங்கள் பார்த்த எந்த ஆயுதங்களுக்கும் கிட்டவாகக் கூட அவை வரேல. (கிட்டத்தட்ட பாவனையிலுள்ள சிறுரக ஆயுதங்கள் அனைத்தையும் பார்த்து விட்ட எங்களுக்கு அது வேடிக்கையாகவே இருந்தது.) ஆகக்குறைந்தது ஆங்கிலப்படங்களைப் பார்த்தாவது ஏதாவது செய்திருக்கலாம். உத ஏன் பாக்கிறியள்? கதயப் பாருங்கோவன் எண்டு சொல்லிற ஆக்களும் இருக்கின தான். (“காசும் குடுத்துப் பாக்கிறேல இதுக்க நக்கல் வேறயோ” எண்டு என்னக் கேட்ட ஆக்களும் இருக்கினம்) எண்டாலும் ஒரு ஆதங்கம் தான். எங்கட ஆக்கள் உப்பிடியே குண்டுச்சட்டிக்குள்ள குதிர ஓட்டிக்கொண்டு இருக்கிறது எனக்கு பிடிக்கேல எண்டதத் தான் சொல்ல வாறன்.

சரி திரும்ப வாறன். எங்கட அப்பா நல்லா துவக்குச் செய்வார் எண்டு அந்தப் பெடியன் சொன்னது சரிதான். அவன்ர அப்பா ஒரு தச்சுத் தொழிலாளி. வன்னியில 1999 இல எல்லப்பட (எல்லைப்படை) பயிற்சி எல்லாருக்கும் குடுத்தது தெரியும் தானே. அறுபது வயது கிழவன் கிழவி கூட அந்தப்பயிற்சி எடுத்தவை. (கிழவன் கிழவியெல்லாம் விரும்பித்தான் எடுத்தவ) அப்ப முதலில வெறும் தடி (இத பொல்லு எண்டும் சொல்லிறனாங்கள்.) வச்சிருந்து அந்தப் பயிற்சி நடக்கும். பிறகு கொஞ்ச நாளிலயே ரெண்டொரு பேர் அந்தப் பொல்லுகள சீவி துவக்கு மாதிரி செய்து கொண்டு வரத் துவங்கீச்சினம். அதோட துவங்கினது தான் பாருங்கோ, அழகழகான துவக்குகள் நிறமெல்லாம் அடிச்சு புதுசு புதுசா எல்லாம் வரத்துவங்கீச்சு. அம்பது யாரிலயிருந்து பாத்தா வித்தியாசம் தெரியாது கண்டியளோ. பிறகு இது விற்பனைக்கெல்லாம் வரத்துவங்கி களகட்டுற நேரத்தில சண்டையும் மும்முரமானதோட பயிற்சியும் நிண்டுபோச்சு.

எங்கட சனத்துக்கு (நான் வன்னியில இருந்தாக்கள சொல்லுறன். மற்றாக்களுக்கு இப்பிடி சந்தர்ப்பம் கிடைக்கேல) ஆயுத விசயத்தில புருடா விடுறது கஸ்டம் தான். அதுகள் எப்பிடி இயங்குது, அத வச்சு என்ன செய்யலாம் எண்ட விவரங்களெல்லாம் நிறையவே தெரியுமெண்டு நினைக்கிறன். எறிஞ்ச கைக்குண்ட கச் பிடிச்சு திருப்ப எறிஞ்சு எதிரியள கொல்லுறப் பாத்துச் சிரிக்கிற ஆக்கள் ஒரு கைக்குண்டாலேயே பெரிய கட்டிடங்களத் தரமட்டமாக்கிறதப் பாத்தும் சிரிப்பினம்.
போன வருசம் கொழும்பில ஒரு தமிழ்ப்படம் பாத்தனான். ரஜனி நடிச்ச படம். அதின்ர கடைசிக் காட்சிதான் பாத்தனான். ரகுவரனும் ரஜனியும் சண்ட பிடிக்கிற காட்சி. (மனிதன் எண்டு நினக்கிறன்) அதில ரஜனி துவக்கொண்டு வச்சு சுடுவார். அவர் எப்பிடி சுடுகிறார் எண்டா துப்பாக்கியின் விசைவில்லுக்குள் (trigger) கைவைத்துச் சுட மாட்டார். மாறாக குண்டு ஏற்றும் தாழ்பாளை (cocking handle) இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருப்பார். குண்டு சரமாரியாகப் பாயும். இதையெல்லாம் பாக்கிற சின்னப்பிள்ளையள் கூட சிரிக்கும்.

அத விடுங்கோ சினிமா எண்டாலே புருடா விடுறது தான் எண்ட நிலம வந்திட்டுதெல்லே. இதுகள கதச்சு என்ன பலன்.
இதன் மூலம் நான் சொல்ல வரும் நீதி: ஒண்டுமில்ல.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கவனமாயிருக்கோணும். என்ர பதிவ உங்கட பிள்ளையள் பாக்காம இருக்கிறத உறுதிப்படுத்திப் போடுங்கோ.
இல்லையெண்டா உவயள் உங்க ஆயுதம் தூக்கிப் போடுவினம். பாட்டுக்கள் காரணமாயிருக்கிற மாதிரி என்ர பதிவும் காரணமாயிருக்கிறத நான் விரும்பேல கண்டியளோ.

நான் எழுதிறது விளங்குதே? வசன நடை விளங்கேல எண்டாச் சொல்லுங்கோ மாத்தி எழுதிறன். இதுகள் அப்பப்ப எனக்கு நேர்ந்த அனுபவங்கள் தான். அண்மைய காலம் வரை வன்னியிலே இருந்ததால் சொல்வதற்கு ஏராளமுண்டு. (இதயெல்லாம் கேக்க உங்களுக்கென்ன தலையெழுத்தா என்ன)
--வன்னியன்--(ஈழநாதன்!- நாச்சியார் இன்னும் கிடைக்கேல)

Labels:


Tuesday, February 15, 2005

வ.ஐ.ச.ஜெயபாலனும் ஜெயசிக்குறு காவியமும்...

வணக்கம்!
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனை உங்களிற் பலபேருக்குத் தெரிந்திருக்கும். அவரை ஒருமுறை சந்தித்த அனுபவத்தையே இங்கே பதிகிறேன். அவர் வன்னி வந்து நின்றபோது புதுக்குடியிருப்பில் தற்செயலாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் எப்படியென்றால் எனக்குத் தெரிந்த ஒருவர் அவரோடு கதைக்க வேண்டும் (பேட்டியெடுத்தல் என்று சொல்ல முடியாது) என்று புறப்பட்டபோது அவரோடு ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

இருவருக்குமே ஜெயபாலனைத் தெரியாது. பத்திரிகைகளின் மூலமாக அறிந்திருக்கிறோமே தவிர அவரின் படைப்புக்களை அதிகம் வாசித்ததும் கிடையாது. (அவரின் பல படைப்புக்கள் பேசப்பட்டன என்பதும் குறிப்பாக “நெடுந்தீவு ஆச்சிக்கு” தமிழகத்திலே அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் என்பதும் தெரிந்திருந்தன) அந்த நேரத்தில் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த இரண்டொரு கவிதைகளையும் அறிந்திருந்தோம்.

அவர் வந்திருக்கிறார் என்று அறிந்து ஒரு மணிநேரத்திலேயே சென்றுவிட்டோம். அச்சந்திப்பு சும்மா ஒரு படைப்பாளனைச் சந்திக்கும் ஆர்வம் தானேயொழிய வேறெதுவுமில்லை. இவ்வளவுக்கும் நாம் இருவரும் படைப்பாளிகளோ விமர்சகர்களோ இலக்கியவாதிகளோ அல்லர். குறிப்பாகச் சொல்லப்போனால் ஜெயபாலனின் படைப்புக்களை நாம் வாசித்தே இருக்கவில்லை. (அவர் எழுதிய நெடுங்கவிதை வடிவிலான ஒரு நாவல்; பெயர் தெரியவில்லை. பாலியாற்றையும் ஒரு காதலியையும் போராட்ட ஆரம்ப காலத்தையும் கலந்து வந்திருந்தது. 1986இல். அதை மட்டுமே படித்திருந்தோம். “செக்குமாடு” எனக்குப்பிடித்திருந்தாலும் அதை இவர்தான் எழுதினார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.) எல்லோருக்கும் இருக்கும் பிரபல்யமான படைப்பாளியொருவரைச் சந்திக்கும் குறுகுறுப்பு மட்டுமே இதற்குக் காரணம்.

அரையடி நீளக்குடுமி வைத்திருந்தார். அன்பாக வரவேற்றார். பேச்சு இயல்பாகவே தொடங்கியது. ஈழத்து இலக்கியப் போக்குப் பற்றிக் கொஞ்சம் கதைத்தார். கவிதையில் முன்னேறிய அளவுக்கு பிற இலக்கியவடிவங்களில் முன்னேற்றமில்லை என்றார். புலம்பபெயர்ந்த இலக்கியச் சூழ்நிலை பற்றிச்சொன்னார். அடுத்த தலைமுறை தமிழ் தவிர்ந்த பிற மொழிகளில் இலக்கியங்களைப் படைக்கும்; அவற்றிற் குறிப்பிட்டளவு ஈழத்தைப்பற்றியதாக இருக்கும் என்றார். போராட்ட காலத்தில் வன்னியிலோ யாழ்ப்பாணத்திலோ உருவான படைப்புக்களை தான் படிக்கவில்லையாதலால் அவை பற்றிக் கருத்துக் கூற முடியாது; ஆனால் கருணாகரன் நிலாந்தன் போன்றோர் தரமான படைப்பாளிகளாக வெளியே அடையாளங் காணப்படுகிறார்கள் என்றார்.

இலக்கிய உலகில் அவரது தொடர்புகள், படைப்பாளிகளுடனான உறவுகள் என்று கதை மாறியபோது, சில படைப்பாளிகளைப்பற்றிச் சொன்னார். குறிப்பாக ஜெயக்காந்தனைப்பற்றி அதிகம் கதைத்தார். அவரின் படைப்புக்களைப் போலவே தலையிலும் கனம் அதிகம் என்றார். (தலைக்கனத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்). இலக்கியத்தைப்பற்றி எம்மோடு அதிகம் கதைக்க முடியாததால் சினிமா பற்றி கொஞ்சம் கதைத்தார். வன்னியில் சினிமாப்படங்கள் மீதான தணிக்கை சம்பந்தமாக விமர்சனம் செய்தார். நல்ல படங்களை வெளியிடுவதன் அவசியத்தைச் சொன்னதோடு சில படங்களை எடுத்துக்காட்டினார் (குட்டி, முகம், ஹேராம்) நல்ல சினிமா வன்னியில் உருவாக வேண்டுமென்பதைச் சொன்னார்.

நாம் அவரின் வன்னி வருகையை வழமை போல புலம்பெயர்ந்தவர்களின் வருகை போலவே நினைத்திருந்தோம். ஆனால் தான் வந்த காரணம் மிக முக்கியமானதென்று கூறினார். அதாவது தான் ஜெயசிக்குறு மீதான ஒரு காவியம் எழுதப் போவதாகவும் அதற்காகவே தான் வன்னி வந்துள்ளதாகவும் கூறினார். ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை தான் தமிழரின் மிகப்பெரிய வெற்றி என்றும் அது நிச்சயம் சரியான விதத்தில் பதியப்படவேண்டும் என்றும் கூறினார்.

பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது. அவரின் முஸ்லீம் மக்கள் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டோம். ஏனெனில் முஸ்லீம் பிரச்சினை பற்றி இவர் அதிகமாகவே கதைப்பவர் என்று முன்னரே கேள்விப்பட்டிருந்தோம். மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் கதைத்தார். “நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். எல்லாவற்றையும் மறந்து இனி நல்ல உறவைப் பேணுவோம் என்று எழுந்தமானமாக சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது நீண்ட கால அடிப்படையில் பயன் தரப்போவதுமில்லை. இருதரப்புமே நடந்தவைகளைப்பேசி விமர்சனப்பாங்கோடு அணுகி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இருதரப்புமே தம்மால் மற்றவர்க்கு இளைக்கப்பட்ட தீமைகளை ஏற்றுக்கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்” என்று சொன்னார். தமிழர் தரப்பிலேயே கூடுதல் தவறிருப்பது போன்ற பார்வை அவரிடமுள்ளதாகத் தோன்றுகிறது. (நேரடியாகக் கூறுவதில் அவருக்குள்ள சங்கடம் தெரிந்ததே)

யாழ்பாண மேலாதிக்க வாதத்தைப்பற்றிக் காட்டமான விமர்சனம் கொண்டிருந்தார். எனினும் அவர் எழுதிய காலப்பகுதிக்கும் தற்போதிருக்கும் காலப்பகுதிக்குமிடையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டியபோது, அதை ஏற்றுக்கொண்டார். எனினும் முழுமையான மனமாற்றத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். அவரின் வாதங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களை அடிப்படையாக வைத்தே இருந்தது.

அவர் படைப்பாளி என்பதற்கப்பால் விடுதலைப்புலிகளல்லாத மாற்றுப் போராட்ட இயக்கமொன்றின் முன்னை நாள் உறுப்பினர் என்ற வகையில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். இயன்றவரை பதிலளித்தார். ஆனால் இடையிலேயே தான் வெளியேறி விட்டதாக அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். மாற்றுக் குழுக்கள் மீதான விடுதலைப்புலிகளின் தடையும் அக்குழுக்கள் ஒழிக்கப்பட்டமையும் குறித்து கேட்டபோது, “இக்கேள்வி வெளிநாடுகளில் அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் கேள்வி. எப்போதும் என் பதில் இதுதான். இது தவிர்க்க முடியாதது. ஒரு நிலையில் ஏதோ ஒரு தலைமை தான் போராட்டத்தைப் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை வரும். அப்படி வந்த நிலையில் தான் புலிகள் முந்திக்கொண்டார்கள். இல்லாவிட்டால் ஏனைய இயக்கங்களும் இதையே தான் செய்திருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் முந்தியதால் இற்றை வரையான போராட்டம் நடந்தது. வேறெவரும் முன்னெடுத்திருந்தால் பாதியிலேயே திசை திரும்பியிருக்கும்.” என்று பதிலளித்தார்.

ஆரம்பத்தில் தனிநாடு தேவையில்லையென்ற சோசலிசப் பாதையில்தான் தான் இருந்ததாகவும் யாழ் நூல் நிலைய எரிப்பின் பின் தான் தனிநாடு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாகவும் கூறினார். எனினும் ஆரம்பகால கதைகளின்போது சற்று இடறுப்படுவது போல தெரிந்தது.
விடுதலைப்புலிகளின் போர்த் தந்திரத்தையும் விமர்சித்தார். தான் ஒரு பூகோளவியலாளன் என்ற அடிப்படையில் சில கருத்துக்களைச் சொல்ல முடியுமென்று சொன்னதோடு மட்டுமன்றி, யாழ்ப்பாண பூகோள அமைப்புக்கு ஏற்றமாதிரி எப்படிச் சண்டை பிடிக்க வேண்டுமென்றும் மனிதர் விளக்க ஆரம்பித்துவிட்டார். அது எமக்குத் தேவையில்லாததால் அத்தோடு அவ்விடயத்தைக் கைவிட்டோம். அனேகமாக அவரிடம் மாட்டிய புலி உறுப்பினர் யாருக்காவது வகுப்பு நடந்திருக்கும்.

அவரிடம் அவரைப்பற்றி வேறு சில கதைகள் கேட்க இருந்தாலும் கேட்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று முறை சந்திப்பு நடந்திருந்தால் கேட்டிருப்போம். (அவர் பொட்டம்மானை விடுதலைப்புலிகள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக சஞ்சிகையொன்றில் ஒருமுறை கூறியதாக கதைகள் அடிபட்டதுண்டு. மேலும் தனிப்பட்ட சில சம்பவங்கள்) பிரியும் போது என் நண்பன் அவனது ஞாபக் கையேட்டை நீட்டியபோது “ஈழம் என் தொட்டில்; இலங்கை என் முற்றம்; தெற்காசியா என் வீடு; உலகம் என் கிராமம்” என்று எழுதினார். (இவ் வசனத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம். நினைவில் வைத்து எழுதுகிறேன்.)

இச்சந்திப்பு 2002 நடுப்பகுதியில் நடந்தது. ஏறக்குறைய ஆறு மாதத்தின் பின்பு பளை முகாம் தகர்ப்பு வெற்றி விழாவில் இவரைக் கண்டேன். ஒரு குடும்பத்தோடு நின்றிருந்தார் (மனைவி பிள்ளைகளாக இருக்க வேண்டும்) அவரைக்கண்ட மகிழ்ச்சியிலும் ஜெயசிக்குறு காவியம் பற்றி அறியும் ஆவலிலும் அவரைச்சந்தித்து என்னைத்தெரிகிறதா என்று கேட்டபோது, உற்றுப்பார்த்து விட்டு “இல்லையே தம்பி நீங்கள் ஆர்” என்றார். எனக்குச் சீ... என்று விட்டது. எனினும் என்னை அறிமுகப்படுத்தாமல் சாமாளித்து விட்டு வந்து விட்டேன். பிறதொரு நாளில் நோர்வேயைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அவரைப்பற்றிச் சொன்னபோது சிரிப்புத்தான் வந்தது.
அதாவது அவரும் ஜெயபாலனும் ஒன்றாக பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள் (பேருந்து என்று தான் நினைக்கிறேன்.) அப்போது ஜெயபாலன் அவர் இறங்க வேண்டிய தரிப்பிடத்துக்கு முன்னருள்ள தரிப்பிடத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார். பின்னொரு நாள் அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது சிரித்த படியே சொன்னாராம்: “இது கனதரம் நடக்கிறது. ஏதேனும் யோசினையில நாலஞ்சு தரிப்பு தாண்டி இறங்கி நடந்து வாறத விட கிட்டவாகவே நினைப்பு வாற இடத்திலயிருந்து இறங்கி நடக்கிறது பிரச்சினையில்லத் தானே

இப்போது நான் அறிய நினைப்பவை: ஜெயபாலன் ஜெயசிக்குறு காவியம் எழுதுகிறாரா? அவர் அதை எழுதுவதற்கு எவ்வளவு தூரம் ஒத்துழைப்புக் கிடைக்கிறது. ஏனெனில் விடுதலைப்புலிகளின் தயவில்லாமல் அவரால் எதுவுமே எழுதமுடியாது. ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர் அக்காவியத்தை எழுதுவதைப்பற்றி கடுமையான சர்ச்சை நிலவக்கூடும். வேறு யாராவது அதை எழுத முயல்கிறார்களா? என்ன இருந்தாலும் பதிவாக்கப்பட வேண்டிய மிகமுக்கிய காலப்பதிவு அது.

Labels: , ,


Sunday, February 13, 2005

வணக்கம் அன்பர்களே!

வணக்கம் அன்பர்களே!
பூராயம் உங்களை வரவேற்கிறது. நான் இப்பகுதியில் எழுதப்போகும் சில பதிவுகள் பலருக்குப் பிடித்தமில்லாமற் போகலாம். எனினும் நான் கண்ட கேட்ட சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் அனுபவங்களையும் பதியப்போகிறேன் (எப்போதாவது இருந்து விட்டுத்தான்).
உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கலாம்.
-வன்னியன்-

Labels: ,


உங்களோடு சில நிமிடங்கள்..

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே!
பூராயம் உங்களை வரவேற்கிறது.
பூராயம் என்பதன் சரியான அர்த்தம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இது ஆக்கபூர்வமான பகுதியாக இருக்கும்.

-வன்னியன்-

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]