Wednesday, November 29, 2006
தமிழீழ மாவீரர்நாள் - விளக்கமும் வீடியோவும்
இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது.
புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று.
இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபாகரனின் உரையையும் அவரின் பிறந்தநாளோடு தொடர்புபடுத்தி எழுதி வருகிறார்கள்.
இவர்கள் தெரியாமற் செய்கிறார்கள் என்றில்லை, மாறாக வேண்டுமென்றே திரிபுபடுத்திச் சொல்லி ஒருவகை இன்பத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். புலியெதிர்ப்பைச் செய்ய கருத்துரீதியில் இவர்களிடம் இருக்கும் வங்குரோத்துத் தனத்தின் வெளிப்பாடே இவ்வகையான போக்கிரித்தனமான திரிப்புக்கள்.
இதற்கு முன்னாள் தளபதி கருணாகூட விதிவிலக்காகவில்லை.
அவரின் இவ்வருட உரையில் பிரபாகரனின் பிறந்தநாளைக்குரிய நிகழ்வாக மாவீரர்நாளைச் சித்தரித்திருக்கிறார்.
பிரபாகரின் பிறந்தநாள் நவம்பர் 26 ஆம் திகதி. அதாவது மாவீரர்நாளுக்கு முதல்நாள்.
பிரபாகரன் பிறந்ததையும் முதற்போராளி சங்கர் வீரச்சாவடைந்ததையும் மாற்ற முடியாது. அவை அந்தந்த நாட்களேதாம்.
தமது அமைப்பிலிருந்து வீரச்சாவடைந் முதற்போராளியான சங்கரின் நினைவுநாளையே மாவீரர்நாளாக புலிகள் பிரகடனப்படுத்தி இன்றுவரை அனுட்டித்து வருகின்றனர்.
முன்பு சிலவருடங்கள் நள்ளிரவில் தீபமேற்றி நடத்தப்பட்ட நிகழ்வு பின்னர் 27 ஆம் நாள் மாலை 6.05 க்கு மாற்றப்பட்டது. அது சங்கர் வீரச்சாவடைந்த நேரம்.
_____________________________________________
புலிகளின் முதற்போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் பற்றிய சிறு விவரணமும் அவர்பற்றியும் அவரின் சாவு பற்றியும் தலைவர் பிரபாகரன் வழங்கிய நேர்காணலும் சிறு வீடியோப்பதிவாக்கப்பட்டுள்ளது.
கீழுள்ள வீடியோவில் இவ்வாவணத்தைப் பாருங்கள்.
இங்குப் பார்க்க முடியவில்லையென்றால் நேரடியாக அந்தப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=0C-DzUdEpVw
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், ஒலி, ஒளி, கலந்துரையாடல், மாவீரர், வரலாறு
Monday, November 27, 2006
மாவீரர்நாள் உரை- வீடியோ
மாவீரர்நாள் உரை - வீடியோ
நன்றி: http://www.tamilflame.com
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், ஒளி, மாவீரர், வரலாறு
மாவீரர்நாள் உரை- ஒலிவடிவம்
2006 ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரை
நன்றி: தமிழ்நாதம்
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஒலி, செய்தி, மாவீரர், வரலாறு
Thursday, November 23, 2006
மாங்குளம் முகாம் தகர்ப்பு - நினைவுமீட்டல்
21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது.
இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது.
அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை விரிந்த கூட்டுப்படைத்தளத்தைக் கொண்டிருந்தனர். கிளிநொச்சியிலும் இராணுவ முகாம் அமைத்திருந்தனர். பின்னர் அம்முகாமைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர்.
வவுனியாவிலிருந்து தெற்குப்பக்கமாக தொடர்ச்சியாக சிங்களப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் - இன்று ஏ-9 என அழைக்கப்படும் - யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் இரு இடங்களில் சிங்கள இராணுவம் முகாம் அமைத்துத் தங்கியிருந்தது. கொக்காவில், மாங்கும் எனுமிடங்களில் இருந்த முகாம்களே அவைகள்.
வவுனியாவுக்கும் பரந்தனுக்குமிடையில் இருந்த இவ்விரு முகாம்களும் வன்னியைத் துருத்திக்கொண்டே இருந்தன.
சண்டை மூண்டதும் கொக்காவில் முகாம் தாக்கி வெற்றிகொள்ளப்பட்டது. அதன்பின் இடையில் துருத்திக்கொண்டிருந்த ஒரேமுகாம் மாங்குளம் முகாம்தான். தொடக்கத்தில் சிறிதாக இருந்த முகாம் பின்னர் ஒரு நடவடிக்கைமூலம் பெரிதாக்கிப் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் யாழ்.கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிய புலிகள் அடுத்துக் குறிவைத்தது மாங்குளத்தைத்தான்.
வன்னியில் விசாலமான நிலப்பரப்பொன்றையும் கண்டிவீதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டிய தேவையையும் புலிகள் அன்றே உணர்ந்திருந்தனர். அதன் வெளிப்பாடுதான் தமது முதலாவது பெரிய நடவடிக்கையாக கொக்காவில் முகாமைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. அடுத்து இடையில் துருத்திக்கொண்டிருந்த மாங்குளத்தையும் கைப்பற்றுவதென்று முடிவெடுத்தனர்.
அக்காலத்தில் புலிகள் தமது நினைவுநாட்களுக்காக பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் புலிகள் பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்படியே தாக்குதலும் நடந்தது.
இன்று கேணல் நிலையிலிருக்கும் தளபதி பால்ராச்சின் தலைமையில், இன்னொரு தளபதி தீபனின் துணை வழிநடத்தலுடன் மாங்குளம் முகாம் மீது 21 ஆம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
அப்போது பிரபலமாகவும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவுமிருந்த புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசீலன் -2000 என்ற எறிகணை செலுத்திகளின் துணையுடன் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. பல பகுதிகள் வெட்டையாக இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு தாக்குதலைச் செய்தன புலியணிகள்.
முடிவில் மாங்குளம் படைமுகாம் வீழும் நிலைக்கு வந்தது. இறுதி முயற்சியாக கரும்புலித்தாக்குதல் நடத்துவதென்பது திட்டம். முகாம் தாக்குதலுக்கான திட்டமிடலின்போது அக்கரும்புலித் தாக்குதலை நடத்துவது யாரென்று தீர்மானிக்கும் நேரத்தில், வன்னிமாவட்டத் துணைத்தளபதியாக இருந்த போர்க் தானே அதை நடத்தவேண்டுமென்று பிடிவாதமாக நின்று அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியில் திட்டமிட்டபடி தளபதி - கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் வெடிமருந்து வாகனம் படைமுகாம் வரை சென்று வெடித்தது. அத்தோடு மாங்குளம் படைமுகாமின் சரித்திரம் முடிவுக்கு வந்தது.
மாங்குளம் படைமுகாம் வன்னிக்காட்டில் தனித்து நின்ற ஒரு படைமுகாம். ஒன்றில் காடுவழியாக முல்லைத்தீவுப் படைத்தளத்துக்கோ அல்லது வவுனியாப் படைத்தளத்துக்கோதான் செல்ல முடியும். மாங்குளம் முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியோர் காடுகளில் புகுந்து திக்குத் தெரியாது ஓடினர். அவர்களைத் தேடுவதில் புலியணிகளோடு வன்னி மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இம்முகாம் தாக்குதலில் 65 வரையான விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
______________________________________-
தொடக்கத்திலேயே வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த, கண்டிவீதியைத் துண்டாடியிருந்த இரு படைமுகாம்களை அவசரஅவசரமாகக் கைப்பற்றியதன்மூலம் பின்னாளில் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்குரிய அத்திவாரத்தை இட்டனர் புலிகள். வன்னியில் எஞ்சியிருந்த ஒரே படைத்தளமான முல்லைத்தீவையும் பின்னர் கைப்பற்றி, அகன்ற வன்னிப்பகுதியைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்தனர். இதன்மூலம் இன்றுவரை போராட்டத் தலைமை வன்னியில் இக்கட்டின்றி செயற்பட, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வந்து தக்க வழிகோலினர் புலிகள்.
அன்று மீட்கப்பட்ட அந்த வீதிக்காக பின் ஆயிரம் சண்டைகள் நடந்தன. இன்றுவரை அந்த வீதிக்காக சண்டை நடந்துகொண்டே இருக்கிறது.
_____________________________
படம்: அருச்சுனா
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, சமர், சமர் நினைவு, படைபலம், மாவீரர், வன்னி
ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்
இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்
1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.
இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.
இனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.
இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.
அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.
மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு "வோட்டர்செட்" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.
மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.
இந்நிலையில்தான் "வோட்டர் செட் - இரண்டு" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.
ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.
ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.
அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.
-----------------------------------------------------------------
ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.
சம்பந்தமுள்ள வேறுபதிவு.
-வன்னியன்-
02.11.2005.
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், மக்கள் எழுச்சி, வன்னி
Monday, November 20, 2006
புலிகளின் குரல் - பதினாறாண்டு நிறைவு.
இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது.
அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது.
பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள்.
அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத் தொடங்கினார்கள் புலிகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1989. அப்போது 'மாவீரர் வாரம்" என்று ஒருவாரம் நினைவுகூரப்படும். அவ்வாரத்தின் இறுதிநாள்தான் மாவீரர் நாள் ஆகும்.
அதன்படி நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இவ்வாரம் நினைவுகூரப்படும். முன்பு மாவீரர் நாள் தீபம் ஏற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்து பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் தொடங்கும்போதுதான் புலிகளின் குரல் வானொலி சேவையும் தொடங்கப்பட்டது. 21.11.1991 அன்று தொடங்கப்பட்ட புலிகளின் குரல் வானொலிச் சேவை இரவு எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையே இடம்பெற்றது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப்ட்டதுடன் காலைச் சேவையும் இடம்பெறுகிறது.
அருமையான நிகழ்ச்சிகள் பல இவ்வானொலியில் ஒளிபரப்பப்பட்டன. பல படைப்பாளிகளின் முதற்களமாக இவ்வானொலி நிகழ்ச்சிகளே இருந்தன. பலரை வளர்த்துவிட்ட பெருமை இவ்வானொலிக்குண்டு.
தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் இவ்வானொலி செய்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்களை இவ்வானொலி மூலமே வழங்கினர் புலிகள். இதன் முழுப்பயன்பாடு ஓயாத அலைகள் -3 தொடங்கியபோது உச்ச அளவை அடைந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி சமர் செய்து நிலங்களை மீட்க இவ்வானொலியே உதவியது. எவ்வெவ் பகுதி மக்கள் எங்கெங்கு செல்லவேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ்வானொலி மூலம் வழங்கப்பட்டதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக விலகிக் கொண்டனர். புலிகள் மிகவிரைவாக நிலங்களை மீட்டனர்.
சிறிலங்காப் படையினருக்காகவும் சிங்கள மக்களுக்காகவும் புலிகளின்குரலின் சிங்கள சேவையும் பின்னர் தொடங்கப்பட்டது.
புலிகளின் குரல் சேவை கடந்துவந்த பாதை மிகமிகக் கடுமையானது. அடிக்கடி விமானத்தாக்குதலுக்கும் எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும் ஒலிபரப்புக் கோபுரத்திலிருந்து தவறாது ஒலிபரப்புச் செய்ய வேண்டும். ஒலிப்பதிவுகள் செய்வது ஓரிடம், ஒலிபரப்புச் செய்வது வேறிடம் என்றநிலையில்தான் இச்சேவை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து தென்மராட்சியில் கிடைத்த நேரத்தில் அவசரமான வீதிக்கரையிலேயே வைத்து ஒலிபரப்புச் செய்தார்கள். வன்னிவரும்வரை அங்குமிங்கும் நடமாடித்தான் ஒலிபரப்பு நடைபெற்றது.
வன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்துப்பட்ட சம்பவம்கூட நடந்தது.
பலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளானாலும் தப்பிப்பழைத்து தொடர்நது ஒலிபரப்பு நடைபெற்று வந்தது. நிறையத் தடவைகள் இடம்மாறியிருந்தது புலிகளின்குரல். யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்தது புலிகளின்குரல். அண்மையில் கொக்காவிலில் சிறிலங்கா வான்படை அக்கோபுரத்தின்மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழித்திருந்தது.
கடும் சவால்களை எதிர்கொண்டு போராட்டத்தில் காத்திரமான பங்காற்றி வந்த "புலிகளின் குரல் நிறுவனம்" இன்று தனது பதினாறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
நீண்ட இக்கடின பயணத்தில் தோளோடு தோள் நின்று உழைத்த கலைஞர்கள், ஊழியர்கள், போராளிகள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
தொடர்ந்தும் அவர்கள் தம் பணியைத் திறம்பட செய்ய வாழ்த்தும் ஆசியும்.
புலிகளின் குரலின் இணையமுகரி: http://www.pulikalinkural.com
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், நினைவு, வரலாறு
Sunday, November 19, 2006
தமிழீழக் காவற்றுறை -பதினைந்தாண்டுகள் நிறைவு
தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு - கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம்.
அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும்.
அக்கட்டமைப்பு நிறுவப்பட்டு 18.11.2006 அன்றோடு பதினைந்து வருடங்கள் நிறைவாகின்றன.
1991 ஆம் ஆண்டு இதேநாள் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது.
மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் திறம்பட இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. பலபத்து மைல்கள் போய் குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள்.
தாயக எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவற்றுயினர் செயற்பட்டார்கள்.1993 ஆம் ஆண்டு நடைபெற்ற 'யாழ்தேவி' முறியடிப்புச் சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள். சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.
ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை.
போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும்.
பதினைந்தாண்டுகள் அரும்பங்காற்றிய தமிழீழக் காவற்றுறை தொடர்ந்தும் தம் சேவையைத் திறம்படச் செய்ய எமது வாழ்த்தும் ஆசியும்.
Monday, November 13, 2006
தவளைப் பாய்ச்சல்
பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு.
ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூநகரிப்படைத்தளம்.
அப்போது யாழ்.குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி - நல்லூர் பாதையே இருந்தது. யாழ்ப்பாணத்தின் கிளாலிக் கடற்கரையிலிருந்து மன்னார் மாவட்டத்தின் நல்லூர் அல்லது ஆலங்கேணிக் கடற்கரைக்கு இரவில் படகிற் பயணம் செய்ய வேண்டும். அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவு, மறுபுறம் பூநகரி.
இரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் வஞ்சகமில்லாமல் நிறையப்பேர் அக்கடலிற் கொன்றுகுவிக்கப்பட்டனர். வெட்டுக்காயங்களோடுகூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்கின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ்.குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான்.
பூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன்துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.
இப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. ("உறங்காத கண்மணிகள்" என்ற தமிழீழ முழுநீளத் திரைப்படம், இப்பூநகரிப் படைத்தளத்துள் வேவு பார்த்த வீரர்களையும், அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களையும் தழுவி எடுக்கப்பட்டது)
யாழ். தென்மராட்சியில் இப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு புலியணிகள் பயிற்சியிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அந்நேரம்தான் யாழ்ப்பாணம் நோக்கி ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து 'யாழ்தேவி' என்ற படைநடவடிக்கை சிங்கள அரசால் தொடங்கப்பட்டது. பூநகரிப்படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த புலியணிகளைக் கொண்டு அவசரஅவசரமாக அந்நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள்.
நீண்ட தயார்ப்படுத்தலின்பின் அந்நாளும் வந்தது. நவம்பர் மாதம் பத்தாம் நாள் இரவு புலியணிகள் அத்தளம் மீது தாக்குதல் தொடுத்தன. கடல்வழியாலும் தரைவழியாலும் அக்கூட்டுப்படைத்தளம் மீது அகோரத் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியில் முக்கியமான சமர் அது. பெரும் சமரொன்றுக்கான வினியோகம், பாதுகாப்பு என்பவற்றை முதன்முதல் கடற்புலிகள் வழங்கினர்.
நீர் வழியாலும் நில வழியாலும் தொடுக்கப்பட்ட சமர் என்பதாலேயே இந்நடவடிக்கைக்கு 'தவளைப் பாய்ச்சல்' என்று பெயர் சூட்டப்பட்டது.
மூன்றுநாட் சமரின் பின் புலியணிகள் பின்வாங்கின. ஏராளமான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியிருந்தனர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சம்பவம், முதலும் கடைசியுமாக டாங்கியொன்றை (Tank) அரசபடையினரிடமிருந்து புலிகள் கைப்பற்றினர். இன்னொன்றை அழித்தனர்.
அன்று கைப்பற்றப்பட்ட அந்த ஒரேயொரு டாங்கி இன்றுவரை தன் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறது. பல முக்கிய வெற்றிகளை ஈட்டித்தந்துள்ளது.
நாகதேவன் துறையிலிருந்து ஐந்து 'நீருந்து விசைப்படகு'களைக் கைப்பற்றினர் கடற்புலிகள். அவையும் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருந்தன.
அத்தாக்குதலில்தான் விடுதலைப்புலிகளின் பெண்புலிகளின் முதலாவது 'லெப்.கேணல்' தரத் தளபதி வீரச்சாவடைந்தார்.
லெப்.கேணல் பாமா/கோதை என்ற கடற்புலிகளின் பெண்களணியின் தளபதி இந்நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்.
இச்சமரில் புலிகள் தரப்பில் லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் குணா, லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் அருணன்/சூட் எனும் முக்கிய தளபதிகள் உட்பட 469 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
__________________________________________________
பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சமநேரத்தில் பலாலி விமானப்படைத்தளம் மீதும் கரும்புலித்தாக்குல் ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றியாக அத்தாக்குதல் அமையவில்லை. இத்தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
__________________________________________________
பூநகரியில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் விதமாக யாழ்ப்பாணம் யாகப்பர் தேவாலயத்தின் மீது சிங்கள வான்படை குண்டுகளை வீசி அத்தேவாலயத்தைத் தரைமட்டமாக்கியது. ஆலயம் முற்றாக நாசமானதோடு அத்தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் பலியாகினர்.
_________________________________________________
அதன்பின்னும் பூநரிப்படைத்தளம் சிங்களப்படையினரிடமே இருந்தது. அனால் கிளாலிக் கடலில் கடற்படையினரின் தாக்குதல் அச்சமின்றி பொதுமக்களின் பயணம் தொடர்ந்தது. கடற்புலிகளின் பாதுகாப்போடு பகலிற்கூட பயணங்கள் தொடர்ந்தன.
யாழ். குடாநாட்டை படையினர் முழுதாகக் கைப்பற்றியபோது ஆயிரக்கணக்கான மக்கள் அப்பாதையூடாகவே வந்தார்கள்.
அதன்பின்னும் பூநகரி படையினரிடம்தான் இருந்தது.
முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்துக்கொண்டது அரசபடை. அந்நேரத்தில் சத்தம்போடாமல் அரசபடை ஒரு காரியத்தைச் செய்தது.
1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றுமுழுதாகப் பின்வாங்கி யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டது இராணுவம்.
சிறுசண்டைகூட இல்லாமல் பூநரிப்படைத்தளம் புலிகள் வசமானது.
இன்று அரசியற்களத்திலும் போரியற்களத்திலும் பூநகரிக்கு இருக்கும் முக்கியத்துவம் மிகப்பெரியது. பூநகரியை விட்டுப் பின்வாங்கியதால் அரசபடை கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் விலை அதிகம்.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம்
Subscribe to Posts [Atom]