Thursday, March 17, 2005
முற்போக்கும் வயிற்றுப் போக்கும்...
வெங்கட்டின் பதிவில் கறுப்பி பின்னூட்டமிட்டதை வைத்து இப்பதிவு எழுதப்படுகிறது. வெங்கட்டின் பதிவிலேயே எழுதியிருக்கலாம். ஆனால் அது அவ்விவாதத்தின் கோணத்தை மாற்றிவிடும் என்பதால் இங்கே பதிகிறேன்.
“சாதிக் கொடுமை ஒழிப்பு சாத்தியப்படும் என்று நம்பி வேலையில் இறங்குவோம்” என்று வெங்கட் சொன்னதற்கு, கறுப்பி சொல்கிறார்.
//இந்தக் கொடுமை தீரும் என்று தாங்கள் கனவு கண்டால் உங்களை
நான் கோழை என்றுதான் சொல்லுவேன்.//
இவர் என்ன சொல்ல வருகிறார்? மாற்றங்கள் வரும் என்று நம்பமுடியாதா? அப்படியானால் பெண் விடுதலை என்பதுகூட சாத்தியமற்ற வெறுங்கனவோ? சாத்தியமற்ற வெறுங்கனவுகளுக்காகத் தான் நீங்களும் மற்றவர்களும் மாய்ந்துமாயந்து கதைக்கிறீர்களோ? பெண்ணியவாதியாயும் முற்போக்குவாதியாயும் உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொண்டு இப்படிக் கதைக்கலாமா? முற்போக்கு என்ற பெயரில் மற்றவர்களுக்கு நீங்கள் தருவது வாழ்வு பற்றியதும் மாற்றங்கள் பற்றியதுமான அவநம்பிக்கைகளையா? பிறகெதற்குப் பெண்விடுதலை, மாற்றுச் சினிமா பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள்? நடக்காத வெறுங்கனவுகளைச் சுமந்து கொண்டு ஏன் திரிகிறீர்கள்? சாதி வேறுபாடுகள் ஒழியும் என்று நம்பும் வெங்கட்டை நீங்கள் கோழை என்றால், பெண்ணியம், தமிழில் நல்ல சினிமா என்றெல்லாம் எதிர்பார்ப்போடு எழுதும் உங்களை எப்படித் திட்டுவது?
இதற்குப் பதிலாக "சாதி வேறுபாடு ஒழிக்கவே முடியாது, ஆனால் மற்றவை மாறக்கூடியன" என்று சொல்ல வருகிறீர்களா? சாதிவேறுபாடு மனித இனத்திற்குப் பொதுவான அம்சமன்று. எல்லா இடங்களிலும் இப்பிரச்சினை பூதாகாரமாக இல்லை. குறிப்பிட்ட சில நாடுகளில், இனங்களில் மட்டுமே உள்ள பிரச்சினை. ஆனால் பெண் அடக்குமுறையென்பது மனித இனத்திற்கே பொதுவானது. அது தன் சந்ததிகளினூடு தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவது. மேலும் உடல் ரீதியான வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டதால் இலகுவில் மாற்றமடைய முடியாத அடித்தளத்தைக் கொண்டது தான் பெண்ணிய அடக்குமுறை. சாதிவேறுபாடுகள் தோன்றமுதலே, மனித இனத்தோற்றத்தின் போதே தோன்றிவிட்ட பெண் அடக்குமுறையை, அழிக்கவே முடியாது என்பதற்கு தர்க்க ரீதியல் வலுவான காரணிகளைக் கொண்ட பெண் அடிக்குமுறையை முறியடித்து பெண்விடுதலை பெற முடியுமென்று நீங்கள் கருதினால், ஏன் சாதிமுறை ஒழிய முடியாது? எல்லோரும் பெண்விடுதலை பற்றி ஆவலோடு கதைத்துக்கொண்டிருப்பது அது பெறப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான். யாருக்கும் தெரியாது எப்போது பெண் முழுவதும் விடுதலையாவாள் என்று. குறைந்த பட்சம், சாத்தியமா என்பதுகூட எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அதைவிட இலகுவான சாத்தியமுள்ள (பார்க்க: பெண்விடுதலையோடு ஒப்பிட்டுத்தான்) சாதிவிடுதலை பற்றி ஒருவர் நம்பிக்கை கொள்ளல் பெண்விடுதலை பேசும் உங்களுக்கு நகைப்பாக இருக்கிறது.
சாதி விடுதலை சாத்தியமென்பது என் வலுவான நம்பிக்கை. (மேலை நாடுகளில் ஆண்டுக்கணக்காக வாழ்ந்து விட்ட உங்களுக்கு இதன்மீது நம்பிக்கை வராதது நான் சற்றும் எதிர்பார்க்காதது). என் வன்னி அனுபவத்தின் அடிப்படையில் இது ஒழிக்கப்படும் என்று நம்புகிறவன் நான். அங்கே எல்லோரும் தான் பதுங்குகுழி வெட்டினோம். எல்லைக்குப் போனோம். போரின்போது இடம்பெயர்ந்தோம். ஒன்றாகவே உணவுண்டோம். ஒன்றாகவே அடிவாங்கினோம். ஒன்றாகவே செத்துப்போனோம். வெற்றிகளின் போது ஒன்றாகவெ மகிழ்தோம். அவலங்களின் போது யாரும் அங்கு சாதிபார்த்து வாழவில்லை. உள்ளுக்குள் அந்த மனப்பான்மை பலருக்கு இருந்தாலும் வெளியில் அவர்களால் காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலை. இளஞ்சமுதாயம் ஏறத்தாள முழுமையான சாதிபற்றின மனமாற்றத்துக்கு வந்திருந்தது. சாதி பார்க்கப்படும் ஒரே சந்தர்ப்பமாக இருந்த திருமணபந்தம் கூட மாறிவிட்டது. ஒப்பீட்டளவில் பல கலப்புத்திருமணங்கள் நடந்தன. அதற்கு புலிகளும் தமிழீழக் காவல்துறையினரும் துணைநின்றனர். காதலுக்கு புலிகள் அதிகளவு ஆதரவளிப்பதாக ஒரு விமர்சனம் எம்மக்களிடையே உண்டு. ஆனால் அவர்கள் சாதி மற்றும் மதங்களைக் கட்டுப்படுத்த காதல் திருமணங்களை ஒரு காரணியாகப் பார்க்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் விரிவாக இன்னொரு பதிவிலிடுகிறேன். இப்படி வன்னியில் எனக்கு சாதிஒழிப்பு மீதான நம்பிக்கை வலுவடைந்தது. ஆனால் நீண்ட இடைவெளியின்பின் சொந்த ஊர் (யாழ்ப்பாணம்) சென்றபோது அங்கே என்னிடம் “பொடியளில வெள்ளாளரோ கரையாரோ அதிகமா இருக்கினம்?” என்று கேட்கப்பட்ட போது என் மனக்கோட்டையில் சில கற்கள் சரிந்து விழுந்தன. அந்த நம்பிக்கை வீதம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முற்றாகபப் போய்விடவில்லை. என்ன… கொஞ்சக் காலம் கூடுதலாக எடுக்கும். ஆனால் தமிழகம் பற்றி எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சாதிச்சான்றிதழ் பாவனையிலிருக்கும் நாட்டில், சாதி ரீதியாகவே கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அடையாளங்காணப்படும் நாட்டில், இன்னும் தலித் இலக்கியம் என இலக்கியங்களும் வந்துவிட்ட நாட்டில் (கவனிக்க: இவை தவறென்று சொல்லவில்லை. அது வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியது) எல்லோரும் சமனென்று வர எவ்வளவு காலமெடுக்கும் எனச் சொல்லத் தெரியவில்லை.
முன்னர், நம்பிக்கை கொண்ட வெங்கட்டை கோழை என்றவர் பின்னர் கீழே ஓரிடத்தில் சொல்கிறார்:
//நம்பிக்கைதான் வாழ்க்கை//
இது எப்பிடி இருக்கு?
//தங்கள் வாழ்க்கை குடும்பம் செழிப்பாகவே இருக்கப்
போகின்றது. அதற்குத் தாங்கள் பார்ப்பனாகப் பிறந்தது ஒரு காரணம் இல்லையா?//
வெங்கட் யார், என்ன செய்கிறார், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. வாசித்த அளவில் முக்கியமான ஒரு அறிவிலாளர் என்பது புரிகிறது. மேற்குறிப்பிட்ட ஒரு வசனம் மூலம் ஒருவரின் உழைப்பு, படிப்பு, பிரயாசை எல்லாவற்றையும் சாதியொன்றின் பெயரில் அடக்கி விட்டார் கறுப்பி. தன் திறமைக்குக் கடவுளைக் காரணம் காட்டுபவனைக் கண்டாலே கோபம் வருகிறது. அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகளை விரித்தபோது முதலில் அவரெழுதிய கவிதையைப் பார்த்ததுமே கோபம் தான் வந்தது. சிறுவயதில் வறுமையின் பிடிக்குள் சிக்கி, அதற்குள்ளிருந்து தன் உழைப்பால் முன்னேறிய ஒரு வழிகாட்டி அவர். தான் சிகரத்தை அடைந்தது தன் தாயின் கண்ணீரால் என்று தாயைப் போற்றுகிறார். மெத்தச்சரி. ஆனால் அதோடு சேர்த்துக் கடவுளின் கிருபையையும் காரணமாகச் சொன்னவர், தன் முயற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. இது அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால் தன் திறமையையும் உழைப்பையும் சொல்லாமல் வானத்தைப் பார்த்துக் கைகாட்டுவது பிடிக்கவில்லை. அதுபோலவே கறுப்பியும் ஒற்றைப்படையாக ஒரு காரணம் கூறுகிறார். எனக்குப் பார்ப்பான்களின் வாழ்க்கைத் தரம் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் அவர்களிலும் ஏழைகள் இருக்கக் கூடுமென்றே எண்ணுகிறேன். எனவேதான் சாதியைக் காட்டி ஒருவரது செல்வத்தையோ திறமையையோ குறிப்பிட்டு அவரது திறமையை ஒளிப்பது சரியன்று எனச்சொல்ல வந்தேன். இந்த வாதமெல்லாம் முற்போக்கானவையாகத் தெரியவில்லை.
//யாரோ செய்த பாவம்,"கர்மா" போன்றவற்றில் எனக்கு
நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?//
கர்மா பற்றி நம்பிக்கையில்லாத “முற்போக்காளராகிய” நீங்கள், பார்ப்பான்களைக் கொலை செய்வதற்கு அதே கர்மாவை துணைக்கழைக்கிறீர்கள். வெங்கட் அப்பாவியான தன் பக்கத்துவீட்டுக்காரர் கொலை செய்யப்பட்டதாகச் சொன்னதற்குத்தான் இப்படி கருத்துச் சொல்லியுள்ளீர்கள் என்று கருதுகிறேன். பார்ப்பான் இப்படியான சமூகத்தை உருவாக்கியது எப்போது? அல்லது செத்துப்போன அந்த அப்பாவிப் பக்கத்து வீட்டுக்காரரும் அதற்குள் அடங்குவாரா?
சரி! உங்கள் கருத்துப்படி கொலைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது விடிவுக்காக கொலை செய்வது பிழையே இல்லை என்பது உங்கள் கருத்து. இங்கே தான் நான் உங்கள் மீது விமர்சனம் வைக்கிறேன். முற்போக்கு என்ற முகமூடி போட்ட படியே நீங்கள் கொலைகளை ஆதரிக்கிறீர்கள். இது சரியா? அதுவும் சம்பந்தமில்லாத ஒருவரைப் பழிவாங்கக் கொல்வதை ஆதரிப்பது. (நான் தான் முற்போக்கு என்பதைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளேனோ தெரியாது) இதே முற்போக்கு முகமூடிகளைப் போட்டுக்கொண்டு புலிகளின் செயல்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தற்பாதுகாப்புக்காக, தமது இருத்தலுக்காக, தமது நோக்கத்துக்காக (பல்லாயிரம் மக்களின் விடுதலை சார்ந்தது) செய்யப்படுபவை என நியாயப்படுத்தக் கூடிய கொலைகளையே சாடிக்கொண்டிருக்கும் முற்போக்காளர்களின் பார்வை உங்ளைப் போல்தான் இந்த இடத்தில் (வெங்கட்டின் இடத்தில்) செல்லுமா?
புலிகளில் 2000 பேர் சுனாமியில் இறந்துவிட்டதாகவும் அதன் தலைமை ஆட்டங்கண்டுள்ளதாகவும் தாமே செய்தியை உற்பத்தி செய்துவிட்டு, பின் “புலிகள் பலவீனமாயுள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழருக்கு உரிமையைப் பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் இனிச் சந்தர்ப்பமே இல்லை” என்று “புத்திசாலித்தனமாக” அரசியல் போதிக்கும், தம்மைத்தாமே முற்போக்காளர்கள், சோசலிச வாதிகள், இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலைப்பாடுகளில் நாம் “யதார்த்தமான, சரியான” மதிப்பீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் முற்போக்காளராகவும் பெண்ணியவாதியாகவும் தன்னை அடையாளங்காட்டும் கறுப்பி கொலைகளை ஆதரிக்கிறார். அதுவும் சம்பந்தப்படாதவர்களைக் கொலை செய்தல். தலித் விடுதலைக்கு கொலை பயன்படுமோ இல்லையோ, கொலை செய்து விடுதலை பெற வேண்டிய (குறைந்த பட்சம் உயிர்வாழவாவது கொலை செய்தே ஆகவேண்டிய) தேவையிலிருக்கிற ஈழ நிலைப்பாட்டை எப்படி இதே முற்போக்காளர்கள் பிழையெனச்சொல்லலாம்?
கறுப்பி! ஈழத்துப் பாடல்களையே வன்முறை போதிக்கிறது என்பதால் தடை செய்யவேண்டும், பிடுங்க வேண்டுமென்று வாதித்த நீங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் வெங்கட்டின் பதிவில் உங்கள் ஆழ்மனத்திலுள்ளதைக் கொண்டு வந்துவிட்டீர்கள். அந்த விதத்தில் வெங்கட்டின் பதிவுக்கு நன்றி.
இப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஒரு முற்போக்காளராக இருப்பதால் உங்கள் பார்வையைக்கொண்டே முற்போக்காளர்களை எதிர்கொள்ளலாமா? முற்போக்குச் சித்தாந்தத்திலே கொலைகள் பற்றிய பார்வை என்ன? மரணதண்டனை பற்றின உங்கள் பார்வை என்ன? முற்போக்கு முகமூடிகள் கொலையை ஆதரித்தால் அதை எல்லா இடத்திலும் அவர்களே சொல்லும் நியாயங்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்ய வேண்டும். மாறாக தேவையான சந்தர்ப்பத்தில் மட்டும் அந்த முகமூடியும் முற்போக்கும் தேவையில்லை.
(முகமூடியென்பது முகத்தை மறைக்கவன்று, உள்ளத்தை மறைக்க)
Labels: பதிவர் வட்டம், விமர்சனம்
Wednesday, March 16, 2005
"பாவனை" பண்ணல்' ...பெட்டைக்குப் பின்னூட்டம்
நேற்று இரவு பெட்டைக்குப் பின்னூட்டமிட எழுதியது. ஆனால் நிறைய நேரம் செலவழித்தும் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. (அதென்னவோ தெரியேல. பொடிச்சியளெண்டா என்ர கணிணிக்கு அலர்ஜி வந்திட்டுது போல. நேற்று ஷ்ரேயாவின் தமிழ் முயற்சிக்குப் பின்னூட்டமிடவும் சரியாக் கஸ்டப்பட்டனான். மொடர்ன்கேர்ள் விதிவிலக்கு) மற்றவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு பின்னூட்டத்தைத் தவிர வேறேதுவும் வரவில்லை. எனவே எனது பின்னூட்டத்தை என் பதிவில் இடுகிறேன். பெட்டையின் பதிவில் இட முடிகிறபோது இதை அழித்துவிடுவேன். பின்னூட்டமாக இட எழுதியதால் விரிவாக எழுதவுமில்லை; இப்போது அவசரமாகப் பதிவதால் திருத்தங்களேதும் செய்யவுமில்லை.
பொடிச்சி!
அவசியமான பதிவு. வன்னியில் பல பெயர்களில் (வின்சன்ற் ஜோசப், அருளாளன், இன்னும் பிற..) மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் எழுதும் ஒருவர் ஒருக்கிறார். குழல் என்ற பெயரில் ஆபிரிக்கக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் யுதர்களின் இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம், அவர்களின் போராட்டம் பற்றிய 'எக்ஸோடஸ்' (?) என்ற புத்தகத்தைத் தமிழில் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். மேலும் (சிங்களம் உட்பட) 60 க்கும் மேற்பட்ட படைப்புக்கள், கையேடுகள் என்று மொழிபெயர்த்து வெளியிட்டவர். சொந்த ஆக்கமாகவும் தமிழில் சில கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.
இப்போதும் முழுநேர மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் அவரோடு எனக்குப் பழக்கமுண்டு. அவர் ஆபிரிக்கக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் போது சந்தித்துக் கதைத்தேன். அப்போது "ஏன் நீங்கள் தமிழில் படைப்புக்கள் எழுதுவதைக் குறைத்து விட்டீர்கள்" என்று நான் கேட்டபோது, படைப்பது என்பது என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பதைவிட இலகுவானது. எல்லாரும் அதத்தானே செய்யினம்? ஆனா எங்கட தேவை இப்ப மொழிபெயர்ப்புக்களில பெரிதும் தங்கியிருக்கு" என்று விளக்கிக் கொண்டு வந்தவர், இறுதியாகச் சொன்னார்:
'வரவேற்பு இல்லாவிட்டாலும் படைப்பாளியாக யாரும் இருந்துவிட்டுப் போகலாம்.
ஆனால் மொழிபெயர்ப்பாளனாக யாரும் "பாவனை" பண்ண முடியாது'
.
Labels: ஈழ இலக்கியம், உலக இலக்கியம், பதிவர் வட்டம்
Saturday, March 12, 2005
பெயரை மாற்றவா?...-ஒரு கருத்துக் கணிப்பு.
வன்னியன் எண்ட புனைபேரில 'பூராயம்' எண்ட இந்தப் பகுதிய நடத்திக்கொண்டு வாறன். புனைபெயரில எழுத வேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கு இருக்கேலதான். சும்மா ஒரு விளையாட்டுத் தனத்திலதான் இப்பிடிச் செய்தனான். இப்ப வன்னியன் எண்ட பேரோட வீரமான ஒருத்தரும் பதிவு வச்சிருக்கிறார். அங்க கொஞ்சம் சீரியசான விவாதங்கள் நடக்குது. இதுக்க நானும் வன்னியன் எண்டு பேர் வச்சுக்கொண்டிருக்கிறது கொஞ்சம் சங்கடமாயிருக்கு.
அதால ஏற்கெனவே என்ர சொந்தப் பேரில வச்சிருக்கிற வலைப்பக்கத்த மாதிரி இதயும் அதே பேரிலயே பதிவு செய்யலாமெண்டு நினைக்கிறன். இதில சில சிக்கலுகளும் இருக்கு. என்ன... முந்தின பின்னூட்டங்களில வன்னியன் எண்டு இருக்கும். மற்றாக்களும் வன்னியன் எண்டே என்ன விளிச்சிருப்பினம். இப்ப திடீரெண்டு மாத்தினா புதுசா வாற ஒராளுக்கு இது குழப்பத்தத் தான் தரும். அதோட தமிழ்மணம் பதிவுகளிலயும் ஏதேனும் பிரச்சின வருகிதோ தெரியேல. அதால என்ன செய்யிறதெண்டு யோசிக்கிறன்.
உண்மையில என்ர மற்றப் பதிவ விட வித்தியாசமா எழுதுவோம் எண்டுதான் இதத் துவக்கினனான். ஆனா நினைச்ச மாதிரி இன்னும் சரியா வரேல. என்ன மாதிரி கொண்டுபோறது எண்டும் தெரியேல. இப்போதைக்கு சும்மா சளாப்பிக் காலத்தக் கடத்தலாம்.
அதுக்குள்ள ஏதோ ஒரு வீறாப்பில சந்திரவதானா அக்காவிட்ட (அக்கா எண்டு சொன்னாக் கோவிக்க மாட்டியள்தானே) “நான் ரெண்டு பேரில எழுதிறன். ஏலுமெண்டாக் கண்டுபிடியுங்கோ பாப்பம்” எண்டு சவாலும் விட்டிட்டன். இப்ப எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தானே. எதுக்கும் மனுசி வந்து பின்னூட்டம் குடுக்க முதல் பேர மாத்திறது உசிதமெண்டு நினைக்கிறன்.
இருந்தாலும் வாசகரிண்ட (அப்பிடி ஆராவது இருக்கிறியளோ?) விருப்பத்தத்தான் எதிர்பாக்கிறன். உங்கட கருத்துக்கள எழுதுங்கோ.
Labels: பதிவர் வட்டம்
Friday, March 11, 2005
வன்னியின் முதுகெலும்பு...வன்னியின் முகம்-3.
வணக்கம்!
முந்தைய பதிவொன்றில் இரணைமடுக்குளம் பற்றிச் சிறிது எழுதியிருந்தேன். அதுபற்றி மேலும் எழுதுவதாகவும் தெரிவித்திருந்தேன். சென்ற பதிவில் 'தி.தவபாலன்' அனுப்பிய இரணைமடுக்குளம் பற்றிய வரலாற்று ஆக்கத்தை வெளியிட்டிருந்தேன். சர்ச்சைக்குரிய விடயமொன்றையும் அதில் இணைத்திருந்தேன். அதாவது “125000 ஆண்டுகளின் முன்னரான மனித மூதாதைகள் இரணைமடு படுகையில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் தொல்லியல் ஆணையாளர் சிரான் தெரனியகலை கல்லாயுதங்களை எடுத்தார்.” என்ற தகவலே அது. அதுபற்றிக்கூட எவருமே கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. நிறையப் பேர் வாசிக்கவில்லையென்றே நினைக்கிறேன். எனக்கும்கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதனால்தான் அதனை அப்பதிவில் முதலில் சேர்க்கவில்லை. பின்னர்தான் அதனைச் சேர்த்தேன். இதுபற்றி விசயமறிந்தவர்கள் சொன்னால் நன்று. குறிப்பாகக் கண்ணன் போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
சரி, இக்குளத்தின் அணைக்கட்டு மட்டுந்தான் ஒரு நேரத்தில் வன்னியின் இரு பகுதிகளை இணைக்கும் ஒரே பாதையாக இருந்தது; மக்களுக்கான ஒரே பயணப்பாதையாகவும் இது இருந்தது என்றும் அதைப்பற்றிப் பின்னர் எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதன்படி இப்போது எழுதுகிறேன்.
வன்னியென்று இன்று சொல்லப்படும் பிரதேசம் யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையில் உள்ள பிரதேசம். கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் தொடங்கி வவுனியா ஊடாக மன்னார் வரை ஒரு கோடு கிழித்தால் அக்கோட்டிலிருந்து தெற்குப் பக்கமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். ஏறத்தாள இன்றிருக்கும் நிலைபோலவே 1997 இற்கு முன்பும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது. பக்கத்தில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசமாகவே இருந்தது (1998 வரை).
இந்த நிலையில் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலுள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குமிடையில் தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் நோக்கோடு கண்டிவீதியைக் கைப்பற்றவென்று நடத்தப்பட்ட படைநடவடிக்கைதான் ஜெயசிக்குறு. (அந்நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு தரைவழித்தொடர்பேதும் தென்னிலங்கைக்கு இருக்கவில்லை. கடல்வழி மட்டும்தான். அதுகூட கடற்புலிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.) கண்டிவீதி வன்னியை ஏறக்குறைய நடுப்பகுதியால் ஊடறுத்துச் செல்வதால், இப்பாதை கைப்பற்றப்பட்டால் வன்னி மேற்கு கிழக்கு என இரண்டு துண்டாகும் வாய்ப்பு உள்ளது.
சண்டை தொடங்கி விட்டது. மெதுவாக முன்னேறிய இராணுவம் புளியங்குளத்தில் கடுமையான சவாலை எதிர்கொண்டது. என்ன விலைகொடுத்தும் புளியங்குளத்தை இழப்பதில்லை எனப் புலிகள் திடமாகவே நின்றனர். இச்சண்டை ரஸ்யாவின் ஸ்டாலின்கிராட் போன்றது என அப்போது சிலரால் வர்ணிக்கப்பட்டது. மாதக்கணக்கில் முயன்றும் அரச படை கடும் தோல்வியைச் சந்தித்தது. கவசப்படை பாரியளவில் பயன்படுத்தப்பட்டது போலவே பாரியளவில் இழப்பையும் சந்தித்தது. நிறைய டாங்கிகள் நொருக்கப்பட்டன. நேரடியாக முன்னேறாமல் காடுகளுக்குள்ளால் இரகசிய நகர்வாக புளியங்குளத்தைச் சுற்றி வந்து கனகராயன்குளப்பகுதியில் கண்டிவீதியைக் கைப்பற்றினர் இராணுவத்தினர்.
இந்நிலையில் புளியங்குளத்தில் நின்ற அவ்வளவு போராளிகளும் முழுமையான முற்றுகைக்குள். உணவுகூட வினியோகமற்ற நிலை. ஆனால் இரண்டு நாட்கள் கூட இந்நிலை நீடிக்கவிடாமல். தம்மீதான முற்றுகையைத் தகர்த்ததோடல்லாமல் இராணுவத்தை அவர்களது பழைய நிலைகளுக்கே துரத்திவிட்டனர்.
வரைபடத்தில் பார்த்தீர்களானால் மாங்குளம் சந்திக்கும் கிளிநொச்சிச் சந்திக்குமிடையில் வன்னியின் கிழக்குப்பகுதிக்குப் பாதையெதுவும் பிரியவில்லை. அதாவது கண்டி வீதியிலிருந்து முல்லைத்தீவு சார்ந்த கிழக்குப் பகுதிக்கு பாதையெதுவுமில்லை. அத்தோடு மாங்குளத்திலிருந்து இரணைமடுக்குளம் வரை அடரந்த காடுகளைக்கொண்ட பகுதி. இந்நிலையில் ஒரேயொரு பாதை மட்டுமே வன்னியின் இரு பகுதிகளையும் இணைப்பதற்கு இருந்தது. அதுதான் இரணைமடுக்குளப் பாதை. (இது வரைபடத்தில் வராது. குளத்தின் அணைக்கட்டுத்தான் அந்தப் பாதை.)
கிளிநொச்சி இராணுவத்துக்கு மிக அண்மையாகவே இப்பாதை செல்கிறது. அதுவும் உயரமான அக்குளக்கட்டில் ஏறிநின்றால் ஆபத்தான இடமுங்கூட. ஆனால் இதைவிட்டால் வேறு பாதை எம்மக்களுக்கு இல்லை. வாகனப்போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தான பாதையாகவே இது இருந்தது. குளக்கட்டின் இரு பக்கமும் எந்தவித தடுப்புக்களுமில்லை. ஏறக்குறைய இரண்டு கி.மீ. நீளமுள்ள இவ் அணைக்கட்டில் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே. செல்ல முடியும். குளக்கட்டில் வாகனத்தை ஏற்றும்போது பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டுத்தான் தனிவாகனமாக மேலே ஏற்ற வேண்டும். பின் இறக்கும் போதும் அவ்வாறே பயணிகள் இல்லாமல் வெறும் வாகனத்தை இறக்க வேண்டும். இந்தக் குளக்கட்டில் சில தடவைகள் பயணிகள் பேருந்து உட்பட சில வாகனங்கள் உருண்டு விழுந்துள்ளன. பலர்
காயமடைந்துள்ளனர். இரண்டொருவர் இறந்துமுள்ளனர். மிக ஆபத்தான இப்பாதையை விட்டால் வேறு மார்க்கமில்லாததால் மக்களும் இதனூடாகவே பயணத்தை மேற்கொண்டனர்.
மாங்குளம் வரை இராணுவம் வந்துவிட்ட சந்தர்ப்பத்தில் வன்னி நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரிந்தே விட்டது. “றோட்டுக்கு அங்கால, றோட்டுக்கு
இஞ்சால” என்று இரண்டு பிரிவாகவே மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டதுமல்லாமல் அந்தச் சொற்களாலேயே இடங்களை அடையாளப் படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். அனைத்துச் சேவைகளும் இரண்டு பிரிவாக பிரிந்தே இயங்கத்தொடங்கின.
இதற்கிடையில் இருக்கும் இந்த ஒரே பாதையையும் மூடிவிடுவதென்ற நோக்கோடு கிளிநொச்சியிலிருந்து இராணும் பல முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டது. எப்படியும் பிடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது. எல்லா முயற்சிகளும் மூர்க்கமான முறையில் முறியடிக்கப் பட்டாலும் இராணுவம் விடுவதாயில்லை.
இதற்கிடையில் புலிகள் முந்திக்கொண்டு கிளிநொச்சி நகரையே இராணுவத்திடமிருந்து கைப்பற்றிவிட்டனர். அதன்பின் இப்பாதைக்கு இருந்த ஆபத்து நீங்கிவிட்டது. பின் ஜெயசிக்குறுவில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட அனைத்துப்பகுதிகளும் புலிகளால் மீட்கப்பட்டபின் வன்னிக்கிருந்த ஆபத்து நீங்கிவிட்டது.
ஒரு நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு எப்படி கிழாலி நீரேரி இருந்ததோ, அதேபோல் சிலகாலம் இரணைமடுக்குள அணைக்கட்டு இருந்தது. ஆம், அதுமட்டுமே இருந்தது. அந்தவகையில் எம்வாழ்வின், போராட்டத்தின் அசைக்கமுடியாத ஒரு பாத்திரம்; சாட்சியம் தான் இந்த இரணைமடுக்குள அணைக்கட்டு.
Thursday, March 10, 2005
இரணைமடுச் சரித்திரம்...
இரணைமடுக் குளத்தைப் பற்றிய நிறையத் தகவல்களோடு இம்முறை நானுங்களைச் சந்திக்கிறேன்.
Labels: தொன்மை, வரலாறு, வன்னி
Tuesday, March 08, 2005
அவர்கள் பார்வையில்... –மகளிர் தினக் கவிதை.
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈழத்துப் பெண்கவிஞை ஒருத்தியின் கவிதையொன்றைப் பதிகிறேன். இது 1987 இல் பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” எனும் தொகுப்பில் “அ.சங்கரி” இன் கவிதையொன்று.
அவர்கள் பார்வையில்
எனக்கு
முகமில்லை
இதயமில்லை
ஆத்மாவுமில்லை.
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமையாகும்.
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கு
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரை
இதுவே வழக்கம்.
Labels: ஈழ இலக்கியம், கவிதை
Sunday, March 06, 2005
கொதி கிழப்பல்…
வணக்கம்!
அவர் கூறுவது இலங்கை வானொலியின் தேசிய சேவை பற்றித்தான் என்றாலும் அதன் மற்றைய கிளை ஒலிபரப்புக்கள் கூட சினமூட்டுபவையாகவே இருக்கிறன. அவர் தன்பத்தியில், குறிப்பிட்ட ஒரு கட்சியையும் சிலரையும் தாக்குவதைப்பற்றி எனக்குக் கருத்தில்லை.
அவர் வானொலி ஒலிபரப்புப் பற்றி கேட்கும் இரண்டு கேள்விகள் என்னை ஈர்த்தன.
பௌத்த மத சிந்தனை நாள்தவறாமல் தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பவேண்டுமானால் ஏன் சிங்கள, ஆங்கில ஒலிபரப்புகளிலும் நாட்டின் ஒவ்வொரு மதத்தினது நற்சிந்தனைகளும் ஒலிபரப்பக் கூடாது?
- ஒவ்வொரு நாளும் இரவில் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதத்தின் மெட்டு ஒலிபரப்பாகு முன்பு சமாதானத்தை வேண்டுகின்ற ஒரு பாடல் தவறாமல் ஒலிபரப்பாகிறது. சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளில் ஏன் சமாதானம், சாந்தி, சகோதரத்துவத்தை வற்புறுத்துகிற பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை?
எனக்கும் மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலமாக உண்டு. குறிப்பாக சமாதானப் பாடல் பற்றியது. ஏதோ தமிழருக்கு மட்டுந்தான் சமாதானத்தைப் போதிக்க வேண்டும்; அவர்கள் தான் சமாதானத்தின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் அரசியற் கட்சிகளும் சில ஊடகங்களும் பொது நிறுவனங்களும் செயற்படுகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதும் தான் தாமதம், சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரைகள், ஊர்வலங்கள் என்று அமர்க்களப்பட்டது. எங்கு தெரியுமா? எல்லாம் வடபகுதி நோக்கி, குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி. தென்னிலங்கையிலிருந்து சமாதான ஊர்வலம் என்ற பேரில் யாழ்ப்பாணத்துக்கு சைக்கிள் விட்டினம். (இத வண்டில் விடுகிறது எண்டும் சொல்லலாம்). புத்த பிக்குமார் யாத்திரை போச்சினம். இவற்றில் மறைமுகப் பரப்புரை என்னவென்றால், தமிழரைச் சமாதான வழிக்குக் கொண்டு வருதல் என்ற பெயரில் அமைந்திருந்தன.
யாருக்கு யார் சமாதானம் பற்றிப் போதிப்பது? ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என இருந்தவை பின் அந்தச் சங்கம் இந்தச் சங்கம் என்ற பெயர்களில் யாழ்ப்பாணத்துக்கு சமாதான யாத்திரை வெளிக்கிட மனிசருக்கு கொதி வந்தது தான் மிச்சம். இவ்வளவத்துக்கும் முதல் சமாதான யாத்திரை துவங்கேக்க சீமெந்துக்கு முற்றுமுழுதா தடை எடுபடேல. உண்மையா சனத்துக்கு சரியான எரிச்சல்தான். வன்னிக்குள்ளால அவயள் போகேக்க மண்ட கொதிக்கும். நாங்கள் பேயன்விசரணெண்ட மாதிரி எங்களுக்கு நோட்டீசுகளும் தந்துகொண்டு பிரச்சாரம் செய்துகொண்டு போவினம். பிறகு அதுகள படம்பிடிச்சு எல்லா செய்தித் தாபனங்களும் போடும். இதத்தான் பேய்ப்பட்டம் கட்டிறதெண்டு சொல்லுறது. அவைக்கு தமிழீழ காவல்துறை பாதுகாப்புக் குடுத்துக்கொண்டு போயிருக்காட்டி ஊர்வலங்கள் யாழ்ப்பாணம் போய்ச்சேந்திருக்குமெண்டது ஐமிச்சம்தான்.
பிறகு யாத்திரைகள் ஓஞ்சு போச்செண்டாலும், இப்பவும் தமிழருக்கு சமாதானத்தை வலியுறுத்தல் அல்லது போதித்தல் என்ற தொனியில்தான் செயற்பாடுகள் இருக்கின்றன.
Labels: அனுபவம், ஈழ அரசியல்
Saturday, March 05, 2005
இரணைமடுக்குளம்... வன்னியின் முகம் ---2
வன்னிக்கு வந்தபிறகு நான் பாத்த முதல்குளம் இரணைமடுக்குளம் தான். ஒருநாள் விடியவெள்ளன போய் அணைக்கட்டில ஏறிநிண்டு பாத்தன். உதென்ன கடலோ எண்டு ஆச்சரியப்பட்டுப் போனன். பனிப்புகாரா இருந்ததால தொங்கல் எல்லை தெரியேல. கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தண்ணிதான். இடக்கிட பரவலாப் பட்ட மரங்கள். எவ்வளவு காலமா இதுகள் இந்தத் தண்ணிக்குள்ள நிக்குதுகளோ தெரியேல. குளம் உருவாக முதல்கொண்டு நிக்கத்தான் வேணும்.
நான் குளமெண்டா இவ்வளவு பெரிசா இருக்குமெண்டு ஒருக்காலும் நினைக்கேல. ‘வடபிராந்தியத்தில் மிகப்பெரிய குளம் இரணைமடுக்குளம் தான்’ எண்டு பொதுஅறிவுச் சோதினைக்குப் படிச்சு வச்சிருந்தனான். இடைக்கிடை பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின்ர கண்காட்சியள் கருத்தரங்குகளிலயும் இதப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தனான். அவ்வளவுதான். யாழ்ப்பாணத்தின்ர ஆரியகுளத்தயும் அதப்போல சிலதுகளையும் தான் குளமெண்டு தெரிஞ்சு வச்சிருந்த எங்களுக்குக் குளமெண்டா அப்பிடியொண்டு தான் ஞாபகம் வரும். ஆனா வன்னியில அப்பிடியான நீர்த் தேக்கங்களுக்கு ‘மோட்டை’ எண்டு பேர் வச்சிருக்கினம்.
இந்தக் 'குள பிரமிப்பு' எனக்கு மட்டமில்ல, கனபேருக்கு நடந்திருக்கு. அதே மாதிரி முத்தையன்கட்டுக்குளம், கட்டுக்கரைக்குளங்களும் நல்ல விசாலமானதுதான். குளத்துத்தண்ணியில விவசாயம் செய்யிறதெண்டு புத்தகங்களில படிச்சிருந்ததோட சரி. ஆனா அத நேர பாக்கேக்க ஆச்சிரியமாத்தான் இருந்திச்சு. அப்பிடி குளத்திலயிருந்து வயலுக்குத் திறந்துவிடுகிற தண்ணி தான் சனத்துக்குக் குளிக்கிற இடமெண்டது முதலில அருவருப்பாவும் சங்கடமாயும் இருந்திச்சு. பிறகு அதுவும் பழகீற்றுது.
குளங்கள் வான் பாயேக்கயும் மேலதிகமா இருக்கிற தண்ணியத் திறந்து விடேக்கயும் போய் விடுப்புப் பாக்கிற சுகமே தனி. அதுவும் இரணமடுக்குளம் பாக்கிறதுக்கு அந்தமாதிரி. அப்பிடியான நாக்களில ஞாமான சனம் வந்து பாத்திட்டுப்போகும். படங்களும் எடுக்கிறனாங்கள். தண்ணி திறந்து விடேக்க மீனடிக்கிறதுக்கெண்டே ஒரு கூட்டம் அலையும். விடலயளோட நாங்களும் சேந்து அடிச்சிருக்கிறம்.
அஞ்சு மாசத்துக்கு முதல் நண்பனொருவன் சொன்னான் “டேய் இரணமடுக்குளமெல்லே வத்திப் போச்சு. நடுவில மட்டும் மோட்ட மாதிரி சொட்டுத்தண்ணி நிக்கிது”. எனக்கு ஆச்சிரியம். இரணமடுக்குளம் கூட வத்துமோ? அதென்னெண்டு சாத்தியம்? அவனிட்ட வடிவா விசாரிச்சதில, குளம் திருத்தவெண்டு வருசத்துவக்கத்திலயே தண்ணியெல்லாத்தையும் திறந்து விட்டாச்சு. அதுக்குப் பிறகு மழயுமில்ல. இப்ப முழுத்தண்ணியும் வத்திப்போச்சு. எண்ட தகவலுகள் கிடச்சுது.
“அது நல்லந்தானேடா, குளத்த திருத்தினா இன்னும் அஞ்சாறு அடித்தண்ணி சேத்து வக்கலாமில்லே” எண்டு சொன்னன்.
“திருத்தியிருந்தாத் தானே சந்தோசப்படுகிறதுக்கு. அங்க ஒரு வேலயும் நடக்கேல.” எண்டான்.
என்ன செய்யிறது? எல்லாம் எங்கட காலம். செய்தியளிலயும் இந்த வருச சிறுபோகம் செய்யேலாதெண்டு சொன்னாங்கள். எண்டாலும் குளம் முழுக்க வத்தியிருக்குமெண்டு என்னால நம்பமுடியேல. போய்ப் பாக்கவும் நேரமில்ல. ஆனா அவன் ரெண்டு போட்டோ அனுப்பினான். பாத்தா அப்பிடித்தான் இருக்கு. பச்சயான வெளியாக்கிடக்கு; அந்தப் பட்டுப்போன மரங்களெல்லாம் அப்பிடியே நிக்குது; நிறைய ஆடுமாடுகளும் மேஞ்சுகொண்டு நிக்குதுகள்; நடுவிலமட்டும் கொஞ்சத் தண்ணி நிக்கிது. குளத்தின்ர பரப்பளவில அது ஒரு துளிமாதிரித்தான். இவ்வளவு காலமும் தனக்குள்ள என்ன இருக்கிதெண்டு வெளியில தெரியாமல் பொத்திப் பொத்தி வச்சுக்கொண்டிருந்த குளம், பூடகமான குளம் எல்லாத்தையும் திறந்து காட்டீட்டிது. ஆனாப் பாருங்கோ அதப்பாக்கிற பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கேல. (சில காட்சிகள் சிலருக்கு ரசனை, சிலருக்கு வேதனை. அப்படித்தான் இக்குளத்தின் நிர்வாணமும். குறிப்பாக விவசாயிக்கு நரக வேதனை).
இந்தக்குளத்தில எனக்கு தீராத பாசமொண்டு இருக்கு. இரணைமடுக்குளம் எங்கட சனத்தின்ர வாழ்க்கையில பிரிக்க முடியாத குளம். ஒருநேரத்தில எங்கட சனத்த இணைச்சதே இந்தக்குளம் மட்டுந்தான். அது ஒண்டுதான் வன்னியின்ர ரெண்டு பகுதியயும் இணைச்சிருந்த ஒரே பாதை. இதப்பற்றிப் பிறகொருக்கா எழுதிறன்.
Friday, March 04, 2005
கூப்பிடு தூரம்… வன்னியின் முகம் ---1
உங்களெல்லாருக்கும் 'கூப்பிடு தூரமெண்டா' என்னெண்டு தெரிஞ்சிருக்கும். எனக்கு அதின்ர அர்த்தம் விளங்கின கதயத்தான் இப்ப நான் சொல்லப் போறன்.
யாழ்ப்பாணத்திலயிருந்து இடம்பெயர்ந்து வன்னி வந்தப்பிறகு ஓரளவு வாழ்க்கை நிலைக்க வெளிக்கிட்ட சமயம். (இதுக்கிடையில கிளிநொச்சி இடப்பெயர்வும் நடந்து முடிஞ்சிட்டுது) இந்த நேரத்திலதான் ஜெயசிக்குறு துவங்கிச்சு. (இது வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதை சமைப்பது எனும் நோக்கோடு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை). துவங்கினதெண்டா சும்மாயில்ல, பெரிய ஆர்ப்பாட்டமா, இதுதான் இறுதி யுத்தம் எண்ட அளவில துவங்கீச்சினம். ஜெயசிக்குறு எண்டா ‘வெற்றி நிச்சயம்’ எண்டு கருத்தாம். சனத்துக்கும் ஒண்டு விளங்கீற்றுது. இது சாதாரண சண்டையா இருக்காது; ரெண்டு தரப்புக்கும் இது முக்கியமான பிரச்சின; முந்தி மாதிரி பெடியள் லேசில பின்வாங்க மாட்டாங்கள் எண்டு எல்லாருக்கும் தெரியும். அதுக்கேத்த மாதிரித்தான் பரப்புரையளும் நடந்தது.
இப்பிடியே எல்லாரும் ‘ஆவலோட’ எதிர்பாத்திருந்த அதுவும் துவங்கீட்டுது. மே.13.1997 இல தாண்டிக்குளத்தில சண்ட துவங்கீற்றுது. பெடியளும் பெரிய ஆர்ப்பாட்டமா ஆயத்தமாய் நிண்டீச்சினம். மட்டக்களப்பிலயிருந்து 1000 பேர் சண்டைக்கு வந்திருக்கினம் எண்ட கதையில எங்கட சனம் கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சுதுகள். (இதுகளப்பற்றி கதைக்க வெளிக்கிட்டா நிறையக் கதைக்கலாம். நான் இப்ப விசயத்துக்கு வாறன்) சண்டை கொஞ்சம் தாண்டிக்குளம், ஓமந்தை எண்ட அளவோட இழுபட்டுக்கொண்டிருக்கேக்க எங்களுக்கொரு ஆச வந்தீச்சுது. கண்டி வீதியப் பிடிச்சு சண்டை நடக்கப் போகுது. இனி நிறைய இடங்கள் தரைமட்டமாகப் போகுது. அதுக்கிடையில ஒருக்கா எல்லா இடத்தையும் பாத்திட்டு வந்திடுவம் எண்டு ஒரு ஆச. (வாழ்க்கையில் நானெடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்றாக இதை இன்றுவரை கருதுகிறேன். இல்லாவிட்டால் இக்கிராமங்களின் உண்மை வனப்பை நான் பார்க்காமலே விட்டிருப்பேன்.)
எடுத்த முடிவின்படி ரெண்டு மூண்டு பெடியளாச் சேந்து மாங்குளத்திலயிருந்து சைக்கிளில வெளிக்கிட்டாச்சு. வன்னியில பாக்கப்போனா இது தூரமேயில்ல. (யாழ்ப்பாணத்தில பத்து மைல் சைக்கிள் ஓடுறது எண்டாலே பெரிய பிரயாணமுங்கோ. ஆனா வன்னியில 70 மைல் எண்டாலும் சாதாரண தூரம் தான்.) சைக்கிளில வெளிக்கிட்ட எங்களுக்கு அதிஸ்டம் அடிச்சுது. புலிகளின் வழங்கற்பிரிவைச் சேர்ந்த வாகனமொண்டு புளியங்குளத்துக்குப் போச்சு. அதில என்ர நண்பனுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் எங்களக் கூப்பிட்டார். அதிலயே போய் பின்னேரம் அதிலயே திரும்பி வாற திட்டத்தோட வாகனத்தில ஏறியாச்சு.. அந்த வாகனத்தில புளியங்குளம் வரைக்கும் போயாச்சு. இடத்த சுத்திப்பாத்திட்டு பின்னேரம் போல திரும்ப அந்த இடத்துக்கு வந்து அதே வாகனத்தில ஏறினாச்சரி.
புளியங்குளச் சந்தி சனநடமாட்டமில்லாமல் கிடந்திது. சந்திய மையமா வச்சி பலமான காவலரண்கள அமைக்கிற வேலையளில புலியள் இருந்தீச்சினம். அந்த நேரத்தில புளியங்குளத்திலயிருந்து 6 கி.மீ வரைக்கும் ஆமி வந்திருந்தான். புளியங்குள அணைக்கட்ட (புளியங்குளம் என்று குளமொன்று உள்ளது. அதனாலேயே இப்பெயர் அவ்விடத்துக்கு வந்தது என்று நினைக்கிறேன்) பிரதானமா வச்சு பலமான காப்பரண் வேலையள பெண்போராளியள் செய்து கொண்டு இருந்தீச்சினம். நாங்கள் அப்பிடியே குளக்கட்டால நடந்து இடங்களப் பாத்துக்கொண்டு வந்தம். உண்மையிலேயே அருமையான இடங்கள். இந்த இடமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில படப்போற பாட்ட நினச்சுப் பாத்தன். (இது இந்தப்பயண உணர்வுகள் பற்றிய பதிவில்லாததால் அப்பால் தாவுகிறேன்)
மதியமளவில் குளக்கட்டால திரும்பி வந்து கொண்டிருக்கேக்க திடீரெண்டு எங்களுக்கு நல்லாப் பழகிப்போன கூவல் ஓசை. அப்பிடியே பாஞ்சு விழுந்து படுத்திட்டம். வேறென்ன ஆமியடிச்ச செல் (எறிகணை) தான். எங்களிலயிருந்து 250 மீற்றரில முதலாவது விழுந்து வெடிச்சுது. மற்றதுகள் கொஞ்சம் விலத்தி விழுந்துது. அடி நிண்ட உடன எழும்பி வெளிக்கிட்டம். முதல் செல் விழுந்த இடத்தில கொஞ்சம் பரபரப்பு தெரிஞ்சுது. அது நாங்கள் கடந்து வந்த இடம் தான். அதில கொஞ்சப் பெண்போராளியள் நிண்டு பங்கர் வெட்டிக்கொண்டு நிண்டவை. என்ன நடந்திருக்குமெண்டு ஊகிக்க முடிஞ்சுது. ஆனா அதுக்குள்ள போகேல. அப்பிடியே சந்திக்கு வந்திட்டம். பாத்தது காணும் வெளிக்கிட்டுப் போவம் எண்டு முடிவெடுத்து எங்கள ஏத்தியந்த வாகனம் நிக்கிற இடத்துக்குப் புறப்பட்டாச்சு. அங்க போனப்பிறகுதான் தெரிஞ்சுது, அந்த எறிகணையில ஒராள் வீரச்சாவு, ரெண்டு பேர் காயமெண்டு. அதோட தள்ளி விழுந்த செல்லில ரெண்டு சனமும் காயம். இவையெல்லாரையும் ஏத்திக்கொண்டு போனது நாங்கள் போக நிண்ட வாகனம் தான்.
சரி, இனியென்ன செய்யிறது? வேற ஏதாவது வழி பாக்க வேண்டியதுதான். ‘உதுவழிய நிண்டா பெடியளின்ர வாகனம் வரும். கேட்டு ஏறிப்போகலாம்’ எண்டான் நண்பன். 'ஏத்துவினம் தான். அவங்களுக்கு சிலவேள அவசரமாயிருக்கலாம், இல்லாட்டி இடமில்லாமல் மட்டுமட்டா இருக்கலாம். ஏன் உதில கிட்டவாத்தானே கனகராயன்குளம். அதுவரக்கும் நடந்து போயிட்டா அங்கால வாகனம் கிடைக்கும்' எண்டு நான் சொன்ன யோசனைக்கு மற்றவங்களும் சரியெண்டு சொன்னதால நடையக் கட்டினோம். சத்தியமாச் சொல்லிறன் எனக்கு இடம் வலம் ஒண்டும் தெரியாது. இந்த றோட்டால நேர போனா மாங்குளம் வரும் எண்டதுமட்டும்தான் தெரியும். வரேக்கயும் உள்ளயிருந்துகொண்டு பம்பலடிச்சுக்கொண்டு வந்ததால இடங்களும் தூரமும் தெரியேல. ஏதோ கெதியா வந்த மாதிரித்தான் கிடந்தது. அந்த துணிவிலயே நான்நடக்க, நான் சொன்ன துணிவில நண்பரக்ளும் நடந்தீச்சினம். சன நடமாட்டமெண்டு பெரிசா இல்ல. இடக்கிட ஆராவது தென்பட்டீச்சினம். கொஞ்ச தூரம் போனப்பிறகு அதால வந்த ஒரு ஐயாவிட்ட கேட்டம்
‘ஐயா! கனகராயன் குளத்துக்கு இன்னும் கனதூரம் போகோணுமே?
“இல்லத்தம்பி, உதுல கூப்பிடு தூரத்தில தான்”
தொடர்ந்து நடந்தம். அந்தக் கூப்பிடு தூரம் வரேல.அதால வந்த இன்னொருத்தரிட்ட கேட்டம்.
‘ஐயா! கனகராயன் குளத்துக்கு இன்னும் கனதூரம் போகோணுமே?
“இல்லத்தம்பி, உதுல கூப்பிடு தூரத்தில தான்”
ஏதோ சிக்கலிருக்கிறதா மனசுக்குப் பட்டீச்சு. எண்டாலும் நடந்தம். கொஞ்ச தூரத்தில ஒரு சந்தி தெரிஞ்சுது. அடடா கனகராயன் குளம் சந்தி வந்திட்டுது எண்டு சந்தோசப்பட்டாலும் கூட ஒரு சந்தேகம். என்ன சந்தி பெரிசா ஆள்நடமாட்டமில்லாமல் கிடக்குது? கிட்ட வந்தோடன விளங்கீற்றுது உது கனகராயன்குளச்சந்தி இல்லயெண்டு. பின்ன என்ன சந்தி? எண்டு யோசிக்கேக்கயே அதில வந்த ஒருத்தரிட்ட கேட்டுத் தெரிஞ்சு கொண்டாச்சு அதுதான் புதூர்ச்சந்தியெண்டு. (இந்த இடங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள் எங்கள் பிரதேச அறிவைப்பற்றி) என்ன பதில் கிடைக்குமென்று தெரிஞ்சிருந்தும் அவரிட்டயும் கேட்டம் கனகராயன்குளம் எவ்வளவு தூரமெண்டு. வழமையான பதில்தான்
“உதில கூப்பிடு தூரத்திலதான்”
இதுக்கிடையில சாமானுகள் ஏத்திக்கொண்டுவந்த லாண்ட் மாஸ்ரர் ஒண்டில எங்களோட வந்த ஒருத்தன் ஏறிப்போயிட்டான். ஒருத்துனுக்கு மேல அதில ஏறேலாது எண்டது தான் நாங்கள் தொடர்ந்து நடக்கிறதுக்கு காரணம். அதுக்குப்பிறகு ஒருத்தரிட்டயும் எவ்வளவு தூரமெண்டு கேக்கவேயில்ல. நடந்து வந்து ஒருமாதிரி கனகராயன்குளச்சந்திக்கு வந்திட்டம். பிறகு ஒரு வாகனத்தில ஏறி மாங்குளம் வந்தாச்சு.
அண்டையோட இந்தக் ‘கூப்பிடு தூரத்தை” பற்றி நான் வச்சிருந்த அளவீடுகளெல்லாம் அழிஞ்சு போச்சு. (வாயால கூப்பிட்டா கேட்கக் கூடிய தூரம் எண்டு நினச்சிருந்தது என்ர பிழ தானோ?) பிறகு முல்லைத்தீவு, முத்தையன்கட்டு, விசுவமடு எண்டு நான் திரிஞ்ச இடங்களிலயெல்லாம் நல்ல சுவாரசியமான முறையில இந்த ‘கூப்பிடு தூரத்த’ அனுபவிச்சிருக்கிறன். அதுவும் முத்தையன் கட்டு அனுபவம் சரியான மோசம். 4 மைல் தூரத்தக் கூட கூசாமல் கூப்பிடு தூமெண்டு சொல்லுவினம்.
இண்டைக்கும் வன்னியிலயிருந்த யாழ்ப்பாண ஆக்கள் ஆரக்கேட்டாலும் உந்தக் கூப்பிடு தூரப் பம்பல் சொல்லுவினம். ஏனெண்டா எல்லாரும் என்னப்போல இந்த விசயத்தில அடிபட்டிருப்பினம். ஆனா சமீபகாலமா இந்த அளிவட பாவிக்கிறது குறஞ்சு போச்சுது போல கிடக்கு. யாழ்பபாணத்தார் நக்கலடிச்சுத்தான் குறைஞ்சு போச்சோ தெரியேல. வன்னியிலயே இருந்த ஆக்களுக்கு அது பெரிசாத் தெரியாது. ஆனாப் பாருங்கோ அந்த ‘உக்குட்டி’ இடத்தில இருந்து வந்தாக்களுக்கு வன்னியின்ர விசாலம் பிடிபட நிறையக் காலமெடுத்திச்சு. அடுத்த முறை இன்னொரு அனுபவத்தச் சொல்லுறன்.
எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொன்ன மாதிரியும் தெரியுது. என்ன செய்யிறது? என்னத்த சொல்ல வெளிக்கிட்டாலும் போர் எண்ட ஒண்டு இல்லாம சொல்லேலாது. என்னால இயன்ற வரைக்கும் அதுகளத் தவிர்க்கவே பாக்கிறேன். உதாரணமாக இந்தப் பதிவில நான் புளியங்குளத்தில பாத்த இடங்களயும் ஆக்களையும் சம்பவங்களையும் சொல்லவேயில்ல.
குறிப்பு: புளியங்குளம் யாருக்கும் தெரியாத ஒரு இடமாக இருந்தது. பின் ஜெயசிக்குறு காலத்தில் ஒவ்வொரு நாளும் அனைத்துச் சர்வதேச செய்தி நிறுவனங்களிலும் இடம்பெற்ற ஓர் ஊர். (இவ்வூரைக் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரச வானொலிச் செய்திகள் அடிக்கொரு தரம் சொல்லிக் கொள்ளும். எப்படி போனவாரம் கைப்பற்றின இடத்தை அடுத்த வாரமும் கைப்பற்றலாம் என்று யோசிக்கக் கூட திராணியற்றவர்களாகவே மக்களை அது கருதியது.) அவ்வளவு தூரம் பிரபல்யமானது. புலிகளின் புரட்சிக்குளம் எனச் ‘செல்லப்’ பெயரிடப்பட்ட அந்த இடத்தை சிறிலங்கா இராணுவத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பலிகொடுத்தும் மாதக்கணக்கில் முயன்றும் (ஏறத்தாள 4 மாதம்) கைப்பற்ற முடியவில்லை. புளியங்குளச் சமரின் 100 ஆவது நாள் வெற்றிவிழா கூட புலிகளாலும் மக்களாலும் கொண்டாடப்பட்டது.
Subscribe to Posts [Atom]