Monday, July 31, 2006
ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு
இன்று அவரின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
"சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்"
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
'சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?'
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
________________________________________________
எனது ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் சிட்டண்ணையின் சிறப்புத் தொகுப்பொன்று செய்ய எண்ணியிருந்தேன். நேரம் போதாமை மற்றும் முக்கிய இரண்டொரு பாடல்கள் இல்லாமை காரணமாக முடியவில்லை. இதுவரை வெளியிட்டவற்றில் சிட்டண்ணையின் பாடல்களை ஒரு தொகுப்பாக இட எண்ணுகிறேன்.
சிட்டண்ணன் முதன்முதல் பாடிய பாடலை இங்குக் கேளுங்கள்.
Labels: ஒலி, கவிதை, நினைவு, மாவீரர்
Saturday, July 29, 2006
தொடரும் வான்தாக்குதல்: 15 புலிகள் பலி
இன்று மட்டக்களப்பு கரடியனாறில் அமைந்துள்ள 'தேனகம்' சந்திப்பரங்கம் மீது வான்படை நடத்திய தாக்குதலில் எட்டுப் போராளிகள் பலியாகினர், மேலும் சிலர் காயமடைந்தனர். நேற்று திருகோணமலையில் நடத்திய வான்தாக்குதலில் ஏழு புலிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
கரடியனாறில் அமைந்திருந்த தேனகம் என்ற மாநாட்டு மண்டபம் பிரசித்தமான சந்திப்பிடம். சர்வதேசப் பிரதிநிதிகளுடனும், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடனும், பத்திரிகையாளர்களுடனும் நடைபெறும் சந்திப்புக்கள் இங்குத்தான் நடைபெறும்.
கிளிநொச்சியில் சமாதானச் செயலகம் போல கிழக்கின் முக்கியமான புலிகளின் அரசியல் மையம் தான் இந்த "தேனகம்".
அதன்மீதே தாக்குதல் நடத்திவிட்டது அரசபடை.
இரு நாட்களில் பதினைந்து புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர்.
இத்தாக்குதலு்ககு முன்பாக 'நடைபெறும் வான்தாக்குதலுக்கு தகுந்தபதிலடி கொடுக்கப்படும்' என்று புலிகள் அறிவித்திருந்தனர். தேனகம் மீதான தாக்குல் நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
ஏற்கனவே மக்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குலி்ல் பல சொத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பாடசாலை ஒன்றும் திருகோணமலைத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.
யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவால் முடிந்தது 'இதுவொரு ஒப்பந்த மீறல்' என்ற அறிக்கை மட்டுமே. சர்வதேசத்தால் முடிந்ததும் அதுதான். (அதைக்கூட யாரும் செய்யப்போவதில்லை) தாக்குதலுக்கான பதிலடியை கடுமையாக்குவதுதான் தமிழர் தரப்பிலுள்ள ஒரேவழி.
கொஞ்சநாளாக அடங்கிப்போய்க் கிடந்தவர்களுக்கு, இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதைப் பார்த்ததும் குஷி வந்துவிட்டதோ என்னவோ?
புலிகளும் பொறுத்திருந்தால் நாங்களும் கவசவாகனங்களுக்குக் கல்லெறிஞ்சு கொண்டு திரியவேண்டியதுதான்.
கடுமையான பதிலடியொன்றுடன் சற்று அடங்கிப் போகலாம். அல்லது ஒரு மாதத்துள் யுத்தம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிடுமென்றே தோன்றுகிறது.
Monday, July 24, 2006
கட்டுநாயக்கா தாக்குதல் -வீடியோ
1983 இல் இதேநாள் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும்.
2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளத்தினைத் தாக்கி அங்கிருந்த குண்டுவீச்சு விமானங்களைத் தகர்த்து, வர்த்தக விமானங்களையும் தகர்த்து மிகப்பெரிய அவலத்தைச் சிங்கள அரசுக்குக் கொடுத்தனர் புலிகள். பொருளாதார, இராணுவப் பேரழிவிலிருந்து மீள சிங்களப் பேரினவாதத்துக்குத் தெரிந்த வழி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாயிருந்தது.
உலகம் வியந்த இத்தாக்குதல் பற்றிய தொகுப்பொன்றைப் பார்வையிடுங்கள்.
இத்தொகுப்பிலேயே தமிழ்மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Youtube இல் 10 நிமிடங்கள் கொண்ட இரு துண்டங்களாக உள்ளது.
கூகிளில் முழுத் தொகுப்பும் ஒரே கோப்பாக உள்ளது.
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-1
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-2
கூகிள் வீடியோ
அல்லது இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்.
Labels: இராணுவ ஆய்வு, ஒலி, ஒளி, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், வரலாறு
Sunday, July 23, 2006
மறக்க முடியாத யூலைகள்.
1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலர்றறில் "பண்டா - செல்வா ஒப்பந்தம்" என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது.
“கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.
அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.
அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரணையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.
1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார். இது பற்றிய பதிவு இங்கே.
அதே யூலை இறுதியில்தான் ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அதைத் தொடர்ந்து நடந்த அனர்த்தங்கள் அனைவரும் அறிந்ததே.
1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது. யூலை பத்தாம் நாள் முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.
1990 யூலை பதினோராம் நாள் கண்டிவீதியில் குந்தியிருந்த முக்கியமான சிங்களப் படையினரின் முகாமொன்று புலிகளால் தாக்கி வெற்றி கொள்ளப்பட்ட நாள். கொக்காவில் முகாம் தாக்கப்பட்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தாக்குதல் இதுவாகும். வன்னியை ஆங்காங்கே ஊடறுத்திருந்த படைமுகாம்களைக் களைந்து வன்னியைத் தக்கவைக்கும் தூரநோக்குடன் புலிகள் எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடு இது.
1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாள ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண்பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிர்ப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.
1992 யூலை ஐந்தாம் நாள். கரும்புலிகள் நாளன்று இயக்கச்சிப் பகுதியில் வான்படையின் வை-8 ரக விமானமொன்று வீழ்த்தப்பட்டது.
1993 யூலை 25ஆம் நாள் ஈழப்போராட்டத்தில் முக்கியமான தாக்குதலொன்று நடைபெற்ற நாள். மணலாற்றின் மண்கிண்டிமலை என்ற முக்கியமான இராணுவத் தளம் புலிகளால் தாக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது. ஏராளமான ஆயுதங்களையும் நவீன கருவிகளையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இத்தாக்குதலுக்கு "இதயபூமி-1" என்று புலிகள் பெயரிட்டிருந்தனர். மணலாற்றின் சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியதோடு அங்குக் கைப்பற்றப்பட்ட நவீன தளபாடங்களின் உதவியுடன் புலிகள் அடுத்த பாய்ச்சலுக்குப் பேருதவியாக அமைந்ததால் இத்தாக்குதல் மிகமுக்கியத்துவமானது. மிகக்குறைந்த இழப்புக்களுடன் பெரியதொரு வெற்றியை ஈட்டியிருந்தனர் புலிகள்.
1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாள 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.
1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் 5 பாரிய இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.
1995 யூலை 30ஆம் நாள் சிறிலங்காப் படையினரின் உயர்மட்டத் தளபதியான "லெப்.ஜெனரல் நளின் அங்கமன" கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்
1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது சம்பந்தமான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழந்ததால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர். பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.
அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த யூலை வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த வெற்றியொன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படுகொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாள யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சொந்தமானவை மட்டுமே. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.
உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின்பின் உடனடியாய் எந்தவொரு படைநடவடிக்கையையும் செய்யமுடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்றுவரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.
ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.
______________________________________________________
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், மாவீரர்
Saturday, July 22, 2006
திருநெல்வேலி தாக்குதல் பற்றி பிரபாகரன் -வீடியோ
1983 ஆம் வருடம் இதேநாள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத் தொடரணி புலிகளினால் தாக்கப்பட்டு 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவொரு திருப்புமுனைத் தாக்குதல்.
முதன்முதலில் பெருந்தொகை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார்.
ஒரு கிழமைக்கு முன்தான் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மீசாலைச் சுற்றிவளைப்பில் வீரச்சாவடைந்திருந்தார்.
இத்தாக்குதல் பற்றி பிரபாகரன் கூறுவதைக் காணுங்கள்.
Labels: இராணுவ ஆய்வு, ஒலி, ஒளி, சமர் நினைவு, வரலாறு
Monday, July 17, 2006
ஓயாத அலைகள்: -வெற்றிகளின் ஆணிவேர்...
இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின்பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.
ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.
இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.
திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.
கடலில் 'ரணவிறு' என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முலலைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.
அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.
எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.
தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாய்ப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.
அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)
இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.
இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.
முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது.
இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.
ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.
முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.
--------------------------------------------------------
இதையொட்டிய சம்பவமொன்று:
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).
கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.
கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், மாவீரர், வரலாறு
Saturday, July 15, 2006
சீலன் பற்றி பிரபாகரன் - வீடியோப்பதிவு
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின் 23 ஆவது நினைவு நாள். அவர் பற்றிய குறிப்புக்கள், ஆக்கங்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
தலைவர் பிரபாகரன் நேரடியாக அவரைப் பற்றிச் சொல்லியவற்றிலிருந்து மூன்று சிறுதுண்டுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவை விடுதலைத் தீப்பொறித் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவை.
இப்பதிவில் வீடியோ வேலை செய்யவில்லையெனில் கூகிள் தளத்துக்கே சென்று பார்வையிடக்கூடியவாறு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.
திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?
எவ்வாறு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்?
என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.
வீடியோ இணைப்பு
பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.
தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார்.
சீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.
வீடியோ இணைப்பு
சீலனின் இறுதி நாள் பற்றி.
சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி பிரபாகரன் விவரிக்கிறார்.
கூகிள் இணைப்பு
Labels: ஒலி, ஒளி, நினைவு, மாவீரர், வரலாறு
Friday, July 14, 2006
சீலன் எனும் ஆளுமை பற்றி பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.
நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.
ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகளைத் தரவிறக்கஞ் செய்ய விரும்புபவர்களுக்கு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.
திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.
தொடர்ந்தும் சீலனைப்பற்றிய மேலதிக தகவல்கள்:
சீலனின் விளையாட்டுத்தனங்கள்:
சீலனுக்கு 'இதயச்சந்திரன்' என தனிப்பட பெயர்சூட்டியதற்குரிய காரணம் பற்றியும் தன் மகனுக்கு அவரின் பெயரைச் சூட்டியமையும், முதலாவது மரபுவழிப்படையணிக்குப் பெயர் வைத்தது பற்றியும்:
சீலனின் ஆளுமையும் குணஇயல்புகளும்:
தொடக்க காலத்தில் போராளிகளின் பயிற்சிகள், இயங்கியவிதங்கள் பற்றிய ஒரு பதிவு:
தரவிறக்க விரும்புவோர் இவ்விணைப்புக்களைப் பாவிக்கவும். (ஒவ்வொன்றும் அண்ணளவாக700 KB)
பதிவு ஒன்று
பதிவு இரண்டு
பதிவு மூன்று
பதிவு நான்கு
பதிவு ஐந்து
பதிவு ஆறு
இத்துடன் .Zip வடிவத்தில் முழுக் கோப்புக்களையும் வைத்துள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.
நன்றி: விடுதலைத் தீப்பொறி-II
Labels: நினைவு, மாவீரர், வரலாறு
Monday, July 10, 2006
மூன்று நினைவு கூரல்கள்
நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.
1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.
எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.
எவரெல்லாம் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.
(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)
மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பதினோராம் ஆண்டு நினைவுநாள் நேற்று.
***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.
அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.
***********************************************
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் தாக்கம் அளவற்றது. கரும்புலித்தாக்குதல் வடிவம் தொடங்கப்பட்டது 1987 யூலை மாதம் ஐந்தாம் திகதி. கடற்கரும்புலித் தாக்குதல் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது 1990 யூலை பத்தாம் நாள். முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பதினாறாம் நினைவுநாள் இன்று.
காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகிய கடற்கரும்புலிகள் எதிரியின் பெரிய கட்டளைக் கப்பலைத் தகர்க்கும் முயற்சியில் வீரச்சாவடைந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கடலில் மட்டும் நூற்றுக்குமதிகமான கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், குழந்தைகளின் காப்பகத்துக்கு காந்தரூபனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. காந்தரூபனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, வேறு குடும்பத்தில் வளர்ந்தவர். தன் இறுதி ஆசையாக தலைவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதரவற்ற சிறியோர் பராமரிப்பில்லம் தொடக்கப்பட்டு அதற்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது.
காந்தரூபன் இறுதியாகப் படகைக் கடலுள் இறக்கும்போது தன் வளர்ப்புத் தந்தையைக் காணுகிறார். வளர்ப்புத் தந்தைக்கும் தனது மகன்தான் அந்தத் தாக்குதலைச் செய்யப்போகிறான் என்பது முன்னமே தெரிந்துவிடுகிறது.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
பாடல் கேட்க முடியாவிட்டால் இங்கே தரவிறக்கிக் கேளுங்கள்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.
Labels: அனுபவம், இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மக்கள் எழுச்சி, மக்கள் துயரம்
Tuesday, July 04, 2006
அத்திவாரக் கற்கள்
பொதுவாக யாருக்குமே தம் பெயர் புகழடைவதில் மகிழ்ச்சியுண்டு. தம் பெயரைப் பிரபலப்படுத்திப் புகழடைய பெரும்பான்மையானோர் பின்னிற்பதில்லை. வாழும்போது மட்டுமில்லை, இறந்தபின்னும் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டுமென்ற விருப்பம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. இது மனித இயல்பு.
ஈழப்போராட்டத்தில், தம் உயிர்களை ஈந்தவர்கள் பலவிதமானவர்கள். அவர்களுக்களிற் பெரும்பான்மையோருக்கு உரிய கெளரவம் வழங்கப்படுகிறது. வீரமரணமடைந்தவர்களுக்குக் கல்லறைகளுண்டு. வித்துடல் கிடைக்காதவர்களுக்கு நடுகற்களுண்டு. அவர்கள் பற்றிய வரலாறுகள், குறிப்புக்களுண்டு. அவர்கள் பெயர்களில் வீதிகள், விளையாட்டரங்கங்கள், கல்விச்சாலைகள் எனப் பலவுண்டு. மாவீரர்களாக இராணுவ நிலைகளுடன் அவர்களின் பெயர்விவரங்கள் வெளியிடப்படும். பெற்றோர், குடும்பத்தினர் கொளரவிக்கப்படுவார்கள்.
இதேபோல் வெளித்தெரியாத பல தியாகங்களும் ஈழப்போராட்டத்திலுண்டு. வாழும்போதுமட்டுமன்றி, சாகும்போதும் தம் சுயத்தை அழித்துச் சென்றவர்கள் அவர்கள். அவர்களின் பெயர்கள் மாவீரர் பட்டியலில் வரா. அவர்களைப் போராளியாக யாருக்கும் தெரியாது. வாழ்ந்த சுவடும் தெரியாது; செத்த சுவடும் தெரியாது. தாய்க்குக்கூட தன் பிள்ளையைத் தெரியாது. அவர்களையறிந்த சிலருக்கு மட்டுமே அவர்களைப் பற்றியும் என்ன நடந்ததென்பது பற்றியும் தெரியும். அது அவர்களோடே இருந்துகொள்ளும். இறந்த பின்னும் தங்கள் பெயர்களை வெளித்தெரியாதபடி மறைத்தவர்கள் அவர்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் அத்திவாரக்கற்களே. எதிரியின் குகைக்குள் அவனது அத்திவாரத்தை அசைத்தவர்கள். இவர்களின் ஒவ்வொரு சாவும் போராட்டத்தின் பெரிய பாய்ச்சலே.
இவர்களின் வாழ்க்கையே வித்தியாசமானது. அவர்களின் இறுதிநாட்கள் பெரும்பாலும் போர்ச்சூழலுளிருந்திருக்காது. ஆடம்பரமான, பகட்டான, தடம்புரள ஏதுவான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் உல்லாச உலகத்துள்ளும் மனம்பிரளாது பாதைமாறாது காரியத்திற் கண்ணாயிருந்தவர்கள்.
இதுவரை வீரச்சாவடைந்து வெளியிடப்பட்ட 275 வரையான கரும்புலிகளோடு இந்நாளில் இவர்களையும் நினைவு கூர்வோம்.
இவர்கள்
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்"
இவர்களை நினைத்து இருபாடல்களை இங்கே பதிவிடுகிறேன்.
முதற்பாடல்:
"வாய்விட்டுப் பெயர்சொல்லி அழமுடியாது - வெறும்
வார்த்தைகளால் உம்மை தொழமுடியாது.
தாய்க்குத் தன் பிள்ளையின் முகம்தெரியாது -எங்கள்
தலைமுறை உங்கள் பெயர் அறியாது."
இதைவிட அழகாக யாராற் சொல்லிவிடமுடியும்?
-------------------------
அடுத்த பாடல்,
"ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்"
____________________________
இதுவோர் மீள்பதிவு.
தமிழ்ப்பதிவுகள்
Labels: அரசியற் கட்டுரை, சமர் நினைவு, நினைவு, மாவீரர், வரலாறு
Subscribe to Posts [Atom]